யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டுமொரு யுத்தத்துக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மீண்டும் இந்த நாட்டில் யுத்தம் என்ற ஒன்று ஏற்படாதிருப்பதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் இலக்காகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்தவொரு நிலையிலும் பிரிவினைவாதத்துக்கு இனிமேல் ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது. இரத்த வெள்ளத்தினாலோ அல்லது வெடிகுண்டுகளாலோ நாட்டை கட்டியெழுப்ப முடியாது. அமைதியால் மட்டுமே அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்க முடியும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருக்கின்றார்.
17ஆவது தேசிய போர் வீரர்கள் தின நிகழ்வு கடந்த 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றிருந்தது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இந்தக் கருத்துகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “நாட்டின் பாதுகாப்பையும் அமைதியையும் உறுதிப்படுத்துவதற்காகவே ஆயிரக்கணக்கான வீரர்கள் தமது உயிரைத் தியாகம் செய்தனர். அவர்கள் யுத்தம் செய்தமைக்கான நோக்கம் அமைதியான நாடு, அபிவிருத்தியடைந்த நாடு மற்றும் உலகில் வெற்றி பெறும் நாடு என்ற இலக்கை அடைவதற்காகவேயாகும். அவர்களது இறுதி இலக்கு ஒற்றுமையான நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பதாகும்.
தற்போது நாட்டில் ஒற்றுமையை விரும்பாத ஒரு பாதையும் ஒற்றுமையை அங்கீகரிக்கும் மற்றொரு பாதையும் காணப்படுகின்றன. எதிர்காலத்தில் எவ்வாறான சவால்களை எதிர்கொண்டாலும் நாம் இரண்டாவது பாதையை மாத்திரமே தெரிவு செய்வோம்” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
படையினர் ஏன் போரில் ஈடுபட்டனர், அவர்கள் எதற்காக உயிர்த் தியாகம் செய்தனர் என்பதை ஜனாதிபதி கூறியுள்ளதுடன் இனி ஒருபோதும் யுத்தத்துக்கு இடமில்லை என்பதை உறுதிப்பட தெரிவித்திருக்கின்றார். உண்மையிலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்த நிலைப்பாடு பாராட்டத்தக்கதொன்றாகவே காணப்படுகின்றது.
ஆனால், படைத்தரப்பினரது உயிரிழப்புகளை மட்டுமே ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியிருக்கின்றார். யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டிருக்கின்றனர். இறுதி யுத்தத்தின் போது குண்டு மழை பொழியப்பட்டதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தனர். ஒன்பதாயிரம் சிறுவர்கள் அநாதரவாக்கப்பட்டனர். 90ஆயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர். இதனைவிட ஆயிரக்கணக்கான போராளிகள் உயிர்களை மாய்த்திருந்தனர்.
இவ்வாறு தமிழ் மக்கள் பேரழிவுகளை சந்தித்திருந்தனர். விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்துவிட்டதாக அன்றைய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மார்தட்டிக் கொண்டது. யுத்த வெற்றி விழா கொண்டாட்டங்களை நடத்தியது. யுத்தத்தில் பல்லாயிக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டு அவல நிலையில் வாழ்ந்த போது அவர்களை அடக்கியொடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
தமிழ் மக்கள் பேரழிவுகளை சந்தித்து 17 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இன்னமும் அந்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. அவர்கள் மீதான படுகொலைகள் தொடர்பிலும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் உரிய விசாரணைகள் இன்னமும் நடத்தப்படவில்லை. பொறுப்புக்கூறல் விடயத்தில் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் தான்தோன்றித்தனமான போக்கையே கடைப்பிடித்து வருகின்றன. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் முன்னைய அரசாங்கங்களைப் போன்றே இந்த விடயத்தில் செயற்பட்டு வருகின்றது.
யுத்தத்தில் படை வீரர்கள் தமது உயிரை தியாகம் செய்ததைப் போன்று தமிழ் மக்களின் சார்பிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியிடப்பட்டுள்ளன. தற்போது இராணுவத்தினரின் உயிர்த் தியாகங்களை நினைவு கூரும் ஜனாதிபதி, பேரழிவுகளை சந்தித்த தமிழ் மக்களின் உணர்வுகள் குறித்தும் சற்று சிந்திக்க வேண்டியுள்ளது.
மூன்று தசாப்த கால யுத்தத்தில் அழிவுகளை மட்டுமே சந்தித்த தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது குறித்து ஜனாதிபதி சிந்திக்க வேண்டும்.
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுவதுடன் யுத்தத்துக்கு காரணமான இனப்பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர்வைக் காண்பதற்கும் ஜனாதிபதி முன்வர வேண்டும்.
இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறும் விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும். மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தி தமிழ் மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும் என்ற எண்ணப்பாடு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஏற்பட வேண்டும்.
இதேபோன்றே அரசியல் தீர்வுகாணும் விடயத்திலும் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் இனியாவது முன்னெடுக்கப்பட வேண்டும். தேசிய மக்கள் சக்தியானது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்ற உறுதியினை வழங்கி ஆட்சிக்கு வந்திருந்தது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஆதரவு வழங்கியிருந்தனர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் தேசிய மக்கள் சக்தி தமது பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணும் என்று தமிழ் மக்கள் எண்ணியிருந்தனர். ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களாகின்ற போதிலும் இன்னமும் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கோ அல்லது அடிப்படை பிரச்சினையான இனப்பிரச்சினைக்கோ தீர்வு முன்வைக்கப்படவில்லை.
புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதன் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று அரசாங்கம் கூறி வருகின்றது. யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காண்போம் என்று அரசாங்கம் வாக்குறுதி வழங்கியிருந்தது.
இத்தகைய வாக்குறுதிகளை இனியாவது நிறைவேற்றுவது குறித்து அரசாங்கம் சிந்திக்க வேண்டும். நாட்டில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படக் கூடாது என்றால் இனங்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமும் அவசரமுமாகும்.
நல்லிணக்கம் இல்லையென்றால் ஒருபோதும் நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்படுத்தப்பட மாட்டாது. கடந்த கால அனுபவங்களை கருத்தில்கொண்டு தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 17 வருடங்கள் பூர்த்தியடைந்த பின்னரும் நல்லிணக்கம் இன்னமும் நாட்டில் ஏற்படுத்தப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் இனங்களுக்கிடையே சந்தேக மனப்பாங்கு இல்லாத நிலைமை உருவாக்கப்பட வேண்டும். அத்துடன் இந்த நாடு எமது நாடு என்ற எண்ணப்பாடு சகல மக்கள் மத்தியிலும் ஏற்பட வேண்டும்.
தற்போது தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கின்றது. மோதலில்களில் உயிரிழந்த போராளிகளை நினைவு கூருவதற்கும் உரிமை வழங்கப்பட்டிருக்கின்றது. கடந்த இரண்டு வருடங்களும் மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்கும் நிலைமை உருவாகியிருந்தது.
உயிரிழந்த உறவுகளை அது யாராக இருந்தாலும் அவர்களை நினைவு கூருவதற்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க செயற்பாடாகும்.
தெற்கில் யுத்தத்தில் உயிர் நீத்த படையினரை நினைவு கூரும் ஜனாதிபதி, அந்த நிகழ்வில் கொடூர யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்கள் தொடர்பிலும் நினைவுறுத்தியிருக்க வேண்டும். இத்தகைய இழப்புகளை எதிர்காலத்தில் தடுக்கும் வகையில் தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதியும் தேசிய மக்கள் சக்தியும் இனியாவது உணர்ந்துகொள்வது அவசியமாகின்றது.
30 வருட கால யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை நாம் இழந்திருக்கின்றோம். அவர்கள் அனைவரும் இலங்கையர்களேயாவர். ஜனாதிபதி கூறுவதைப் போன்று இனியொரு யுத்தத்துக்கு இடமளிக்காது இருக்க வேண்டுமானால் தமிழ் மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும். அவர்களுக்கு உரிய நீதியை வழங்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அவ்வாறான செயற்பாடுகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்தால்தான் மீண்டுமொரு யுத்தம் என்ற பேச்சுக்கே இடமற்ற தன்மையை உருவாக்க முடியும். எனவே, இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றோம்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM