மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்குமிடையில் இன்று காலை முறுகல் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து இன்ற காலை திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கழிவுகளை கொட்டுவதற்கு வந்த மாநகர சபை ஊழியர்களுக்கும் அப்பகுதி மக்களுக்குமிடையிலேயே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

“திருப்பெருந்துறை மக்கள் நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு இதுவரை எவரும் காட்டவில்லை, நீதிமன்ற உத்தரவை எமக்கு காட்டும் வரை கழிவுகளை கொட்ட விட மாட்டோம்” என தெரிவித்த மக்கள் மாநகர சபையின் கழிவு வண்டிகளை தடுத்து நிறுத்தி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இருதரப்பினருக்குமிடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தில் மாநகர சபை ஊழியர் ஒருவர் மக்களால் தாக்கப்பட்டுள்ளார்.

இது வரை கழிவுகள் கொட்டப்படாமல் வண்டிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.