அண்மைய ஆய்வின் படி தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்கள், நாட்பட்ட சிறுநீரக சிக்கலுக்கு ஆளாகிறார்கள் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. அதனால்  தூக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும் இது தொடர்பாக அந்த ஆய்வில்,‘ ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் தொடர்ச்சியாக 6 மணி நேரம் வரை இரவில் உறங்கவேண்டும். அதிலும் நீரிழிவு, இரத்த அழுத்தம், உடற் பருமன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் இதில் போதிய அளவு அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும். இல்லையெனில் நாட்பட்ட சிறுநீரக பாதிப்பிற்கு ஆளாக நேரிடும் ’ என்கிறது.

உடலில் சேரும் தேவையற்றவற்றை உடலிலிருந்து வெளியேற்றுவது சிறுநீரகம் தான். இதன் பணியை உடற்பருமன், சர்க்கரை நோயாளிகள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிகரித்துக் கொள்கிறார்கள். இதனால் சிறுநீரகத்தின் பணிச்சுமை கூடுவதுடன் விரைவில் அதன் செயல்பாட்டில் தளர்வையும் ஏற்படுத்திவிடுகிறார்கள். இதன் காரணமாக சிறுநீர் பிரிவதில் இயல்பாகவே தடை ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து சிறுநீரகம் தன்னுடைய பணியை இயல்பாக மேற்கொள்ள முடியாமல் தடுமாறத் தொடங்குகிறது.

குமட்டல், வாந்தி, பசியின்மை, தூக்கமின்மை, சோர்வு, பலவீனம். கூர்மையாக சிந்திப்பதில் தடை, நீர்க்கட்டு, தசை பிடிப்பு, தொடர் அரிப்பு, நெஞ்சு வலி, மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சிறுநீரகத்தின் செயல்பாடு குறித்த பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும்.

பின்னர் தினமும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவிற்கு தண்ணீர் அருந்தவேண்டும். உடற் பயிற்சி, உணவுக் கட்டுபாடு, சத்தான உணவை சாப்பிடுவது போன்றவற்றையும் கடைபிடிக்கவேண்டும். சிகரெட், மது ஆகியவற்றை முற்றாகத் தவிர்க்கவேண்டும். சர்க்கரையின் அளவை பரிசோதித்து அதனை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை அவ்வப்போது அதற்குரிய பரிசோதனைகளின் மூலம் சீராக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். முக்கியமாக தூக்கமின்மையால் பாதிப்படையாமல் இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.

டொக்டர் அகர்வால்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்