(க.சிவலிங்கமூர்த்தி)
இலங்கையின் கல்வி மறுசீரமைப்பு செயல்முறையானது தற்போதைய நிலையில் முற்றாக முடங்கியுள்ளதுடன், கல்வி அமைச்சு நிலவும் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் வியாழக்கிழமை (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
கல்வி மறுசீரமைப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள தேசிய வழிகாட்டல் குழுவின் கீழ் உள்ள மனிதவள மேம்பாட்டு துணைக் குழுவுக்கு, மீபே தேசிய கல்வி நிறுவனத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக இந்த அதிகாரிக்கு எதிராக ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை, முதன்மை உள்நாட்டு தணிக்கையாளரின் கடிதம் மற்றும் 2024 ஏப்ரலில் தேசிய தணிக்கை அலுவலகம் விடுத்த தணிக்கை வினவல் என பல விசாரணைகள் நிலுவையில் உள்ளன.
இவ்வாறான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களைக் கொண்டு எவ்வாறு கல்வி மறுசீரமைப்பை முன்னெடுக்க முடியும்? இவர்களின் செயல்பாடுகளால் கல்வி மறுசீரமைப்பு வீழ்ச்சியடைந்து, நாட்டின் 40 இலட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், முதலாம் தரத்துக்கான மறுசீரமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், ஆசிரியர்களுக்கான வழிகாட்டி புத்தகங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர்கள் தமது சொந்தப் பணத்தில் சுமார் 7000 ரூபா வரை செலவழித்து அவற்றை அச்சிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், முதலாம் தர மாணவர்களின் புதிய புத்தகங்களில் உள்ள புகைப்படங்கள் தெளிவற்ற முறையிலும், அசிங்கமான வடிவிலும் அச்சிடப்பட்டுள்ளன. அடுத்த வருடத்திற்கான ஆறாம் தர மறுசீரமைப்புகளுக்கான ஆசிரியர் பயிற்சிகளோ அல்லது முறையான திட்டமிடல்களோ இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரத்துடன் தொடர்புடைய அதிகாரிக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ள பின்னணியில், கல்வி மறுசீரமைப்பை சீர்குலைத்த அதிகாரிகள் எவ்வித பிரச்சினையும் இன்றி முழுச் சம்பளத்துடன் கட்டாய விடுமுறையில் வீட்டில் இருக்கிறார்கள்.
தேசிய கல்வி நிறுவனத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பணிப்பாளர் நாயகம் பழைய முறைகேடுகளை மூடிமறைக்க முயல்கிறார். எனவே, கடந்த கால ஊழல்கள் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். கல்வி அமைச்சு முறையான திட்டத்துடன் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்வர வேண்டும் என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM