முதலாம் உலகப் போரின்போது மூழ்கடிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று பெல்ஜியத்துக்கு அருகில் வட கடல் பிராந்தியத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பாகங்கள் சிதையாமல் இருப்பதால், அக்கப்பலினுள் நீர் புகுந்திருக்க வாய்ப்பில்லை என்றும், இதனால், அதில் பணிபுரிந்த 23 வீரர்களின் உடல்களும் அதன் உள்ளேயே இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

1914 முதல் 1918ஆம் ஆண்டுவரை இடம்பெற்ற முதலாம் உலகப் போரின்போது மூழ்கடிக்கப்பட்ட இந்தக் கப்பல் கடலில் சுமார் நூறு அடி ஆழத்தில் இருப்பதாக அதைக் கண்டுபிடித்த நீர்மூழ்கு வீரர் தெரிவித்தார்.

இதுவரை, பெல்ஜியம் கடற்பிராந்தியத்தில், முதலாம் உலகப் போரின்போது மூழ்கடிக்கப்பட்ட பத்து நீர்மூழ்கிக் கப்பல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போதைய கண்டுபிடிப்பு பதினோராவது நீர்மூழ்கியாகும்.

குறித்த போர்க் காலப் பகுதியில் மூழ்கடிக்கப்பட்ட நீர்மூழ்கிகள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன என்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில், தற்போதைய கண்டுபிடிப்பு ஆய்வாளர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

புதையல் வேட்டையில் ஈடுபடுபவர்கள் சிதைத்துவிடலாம் என்ற அச்சத்தினால், குறித்த கப்பல் மூழ்கியிருக்கும் மிகச் சரியான இடம் இதுவரை இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.