(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் வெளியிடப்பட்ட இறக்குமதி வரி தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலின் உள்வீட்டுத் தகவல்கள் கசிந்ததன் மூலம், இந்நாட்டின் முன்னணி வர்த்தகர்கள் இருவர் 4,000 வாகனங்களை இறக்குமதி செய்ய முன்கூட்டியே கடன் கடிதங்களைத் திறந்து பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழல் ஒழிப்பு சக்தியின் தேசிய அமைப்பாளர் நிரோஷன் பாதுக்க தெரிவித்தார்.
இந்த கொள்ளை காரணமாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதோடு, இதனால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பில்லியன் கணக்கான நஷ்டத்தை ஒட்டுமொத்த பொதுமக்களுமே சுமக்க நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதன்கிழமை (20) மத்திய வங்கி வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நாட்டின் வாகன இறக்குமதிகளுக்கு 50 சதவீத வரி விதிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் 15ஆம் திகதி வெளியிடப்பட்டது. ஆனால் வர்த்தமானி வெளியிடப்பட்ட சந்தர்ப்பத்தில் ஒரு தொழிலதிபர் 3,500 வாகனங்களையும், மற்றையவர் 500 வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கான கடன் பத்திரத்தை வணிக வங்கியினூடாகத் திறந்துள்ளனர். அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் குறித்த தொழிலதிபர்கள் எவ்வாறு முன்கூட்டியே அறிவர் என்பது தொடர்பில் அறிந்து கொள்வதற்காக மத்திய வங்கியின் தகவல் அறியும் அதிகாரியை சந்திக்க முயற்சித்தேன். எனினும் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
மின்னஞ்சல் மூலம் தகவல்களை அனுப்புமாறு கூறினார்கள். ஆனால் மின்னஞ்சலை மூன்றாம் தரப்பு ஒன்று கையாளுவதாகத் தெரிகிறது. நான் கொடுத்த கடிதத்தில் கையெழுத்திட அந்த அதிகாரிகள் பயப்படுகிறார்கள். 2.5 மில்லியன் டொலர்களுக்கு நடந்தது போல் இந்தக் கடிதத்திற்கும் நடந்துவிடுமோ என்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது. நாட்டின் வணிக வங்கிகளைக் கண்காணிக்கும் பொறுப்பு இந்த மத்திய வங்கிக்கு உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நாட்டில் டொலரின் பெறுமதி 323 ரூபாயாக இருந்தது. திங்கட்கிழமை மாலை ஆகும்போது அது 334 ரூபாயாக, அதாவது டொலர் ஒன்றுக்கு 11 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால் சந்தேகம் ஏற்பட்டுப் பார்த்தபோது, வணிக வங்கிகள் ஊடாக 4000 வாகனங்களுக்கு கடன் கடிதம் திறக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கையெழுத்திட்ட இந்த விசேட வர்த்தமானி உத்தரவு பற்றிய உள்வீட்டுத் தகவல்களை இலங்கையின் இந்த மோசடி வர்த்தகர்கள் எவ்வாறு தெரிந்துகொண்டார்கள்?
ஒரு வர்த்தகர் சில மாதங்களுக்கு முன்பு மோட்டார் கொள்ளளவைக் குறைவாகக் காட்டி, ஒரு வாகனத்தில் 50 இலட்சம் வீதம் இலாபம் ஈட்டி 4000 வாகனங்கள் மூலம் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய வரி வருமானத்தை இல்லாமல் செய்துள்ளார். 3500 வாகனங்களை இறக்குமதி செய்த மற்றைய நபருக்கு டெண்டர் இன்றி காற்றாலை மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் கிடைத்துள்ளது. இவர்கள்தான் இந்த அரசாங்கத்தை இயக்குபவர்கள்.
கடந்த 15ஆம் திகதிக்குள் 4000 புத்தம் புதிய வாகனங்களுக்கு கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி 16ஆம் திகதி முதல் இது அமலாகும் என்று வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். ஆனால் அவரது வர்த்தமானியில் ஒரு முக்கியமான விடயம் கூறப்பட்டுள்ளது. அதாவது, 15ஆம் திகதி வரை வாகனங்களை இறக்குமதி செய்தவர்களுக்கு இந்த வரி விதிப்பு செல்லுபடியாகாது என்று கடைசி வரியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாடகம் மிகவும் அற்புதமானது. ஒரே நாளில் 4000 வாகனங்களுக்கு கடன் கடிதம் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வணிக வங்கிகளைக் கண்காணிக்கும் மத்திய வங்கி என்ன செய்துகொண்டிருந்தது? எனது அறிவுக்கு எட்டியவரை கடந்த வெள்ளிக்கிழமை 40 பில்லியனுக்கும் அதிகமான தொகைக்கு கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து, டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளது. இவை மோசடிகள் இல்லையா? இவை உள்வீட்டுத் தகவல் கசிவுகள் இல்லையா? இவை மத்திய வங்கி பிணைமுறி கொள்ளையை விட பெரிய கொள்ளை இல்லையா? இந்த நாட்டின் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது இடங்களிலுள்ள பெரும் கோடீஸ்வரர்கள்தான் இந்த மோசடிகளைச் செய்கிறார்கள்.
ஜனாதிபதி 15ஆம் திகதி கையெழுத்திடும் கடிதம் வர்த்தகர்களுக்கு எப்படி முன்கூட்டியே தெரிகிறது? தற்போது டொலரின் பெறுமதி 323 முதல் 335 வரை மாறுபடுகிறது. இந்த வாகனங்கள் நாட்டுக்கு வர சில நாட்கள் எடுக்கும். அப்போது டொலரின் பெறுமதி 350 ரூபாவாக இருந்தாலும், இவர்கள் பழைய டொலர் பெறுமதிக்கமையவே பணத்தை செலுத்துவர். இந்த கடனுக்கான சுமையை நாட்டின் ஒவ்வொரு சாதாரண பிரஜையும் சுமக்க வேண்டும்.
ஜனாதிபதி கையெழுத்திட்ட கடிதம் புகைப்படப் பிரதியாக வெளியே கசிந்ததா அல்லது வாய்மொழியாகக் கூறப்பட்டதா என்று நமக்குத் தெரியாது. ஆனால் ஜனாதிபதி 16ஆம் திகதி அமலுக்கு வரும் வர்த்தமானியை வெளியிடுவதற்குள், 15ஆம் திகதியே 4000 வாகனங்களுக்கு கடன் கடிதம் திறக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. இந்தக் கடன் கடிதங்களைத் திறந்தது யார்? அதன் பெறுமதி எவ்வளவு? டொலரின் பெறுமதி உயரும் போது வங்கிகளில் இவ்வளவு பெரிய தொகை முடக்கப்பட்டதை மத்திய வங்கி கவனிக்கவில்லையா? எனவே இதற்கு மத்திய வங்கியே பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM