தக்ஸீலா” திரைப்பட விமர்சனம் – செயற்கை நுண்ணறிவு முயற்சியில் சோர்வூட்டும் அனுபவம்

Published By: Digital Desk 2

20 May, 2026 | 11:31 AM
image

தயாரிப்பு: ஆர்.ஆர். கிரியேஷன்ஸ் & ஹாலோ ஸ்டுடியோஸ்

நடிகர்கள்: சதீஷ் ராமகிருஷ்ணன், அழகுமுத்து, எஸ்.எஸ். ராமன், ஜெய் ஸ்ரீ, ரவி சின்னராஜ், ஐஸ்வர்யா, இன்பா, கார்த்திக் ராஜ்குமார் மற்றும் பலர்

இயக்கம்: சதீஷ் ராமகிருஷ்ணன்

மதிப்பீடு:2/5

சினிமா உலகில் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் முயற்சிகள் அதிகரித்து வருகின்றன. குறைந்த முதலீட்டில் உருவாக்கப்பட்ட ‘தக்ஸீலா’ திரைப்படமும் அதே வரிசையில், புதிய கற்பனை உலகத்தை திரையில் கொண்டு வர முயன்றுள்ளது. ஆனால் அந்த முயற்சி ரசிகர்களை எவ்வளவு ஈர்க்கிறது என்பதே முக்கிய கேள்வி.

கதையின் நாயகன் (சதீஷ் ராமகிருஷ்ணன்) ஒரு தொல்பொருள் ஆய்வாளர். பெயர் தெரியாத ஒரு இடத்தில் ஆய்வில் ஈடுபடும் போது, பழமையான கட்டிடங்களில் மறைந்திருக்கும் மர்மங்களை கண்டுபிடிக்கிறார். அவை தற்போதைய அரசியலையே மாற்றக்கூடிய ஆபத்தான தகவல்களாக இருப்பதை உணர்கிறார். அதனைத் தொடர்ந்து அவர் சந்திக்கும் சிக்கல்கள், அரசியல் ஆபத்துகள், மர்மங்கள் ஆகியவைதான் கதைப் பின்னணி.

புதிய கற்பனை உலகம் ஒன்றை உருவாக்கும் முயற்சி பாராட்டத்தக்கது. ஆனால் அந்த உலகத்தை ரசிகர்களுக்கு கொண்டு செல்லும் விதம் பெரிதும் தடுமாறுகிறது. அதிகமான குரல்வழி விளக்கங்கள் (voice-over) காட்சிகளின் ஓட்டத்தை முறிக்கின்றன. பல இடங்களில் அவை நீளமாக இருப்பதால், பார்வையாளர்களுக்கு சோர்வு ஏற்படுகிறது.

AI தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்த பயன்படுத்தியிருப்பது படத்தின் பலம். ஆனால் அதன் அளவுக்கு மீறிய நீளம் மற்றும் உணர்வுகளை சரியாக கடத்த முடியாத திரைக்கதை, அனுபவத்தை சீர்குலைக்கிறது. நான்லீனியர் பாணியில் சொல்லப்பட்ட கதை சில இடங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

திருப்பங்கள் புதுமையாக தோன்றினாலும், அவை பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் செயல்படவில்லை. எதிர்பார்த்த சுவாரஸ்யம் திரைக்கதையில் இல்லாதது பெரிய குறையாக அமைகிறது.

ஒளிப்பதிவும் பின்னணி இசையும் சில இடங்களில் படத்தை தாங்கிக்கொள்கின்றன. ஆனால் அதுவே முழு அனுபவத்தை காப்பாற்ற முடியவில்லை.

மொத்தத்தில், புதிய முயற்சி என்ற வகையில் ‘தக்ஸீலா’ கவனிக்கத்தக்கது. ஆனால் திரைக்கதை மற்றும் கதை சொல்லும் முறையில் இன்னும் கூடுதல் கவனம் இருந்திருந்தால், இது ஒரு சிறந்த அனுபவமாக மாறியிருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right