இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் டோனியின் பெயரைப் பரிந்துரை செய்திருப்பதாக இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

“இந்த ஆண்டின் பத்ம பூஷண் விருதுக்கு கிரிக்கெட் துறையில் இருந்து டோனியின் பெயர் மட்டுமே பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. அணியின் சிறந்த தலைவராக கிரிக்கெட்டின் ஒருநாள் மற்றும் இ-20 ஆட்டங்களிலும் உலகக் கிண்ணத்தை இந்தியாவுக்குப் பெற்றுத் தந்ததை முன்னிட்டே அவரது பெயர் ஏகமனதாகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது” என இந்திய கிரிக்கெட் சபையின் தற்காலிகத் தலைவர் சி.கே.கன்னா தெரிவித்துள்ளார்.

இதுவரை விளையாடியிருக்கும் இந்திய அணியின் எந்தவொரு தலைவரும் பெற்றிராத எண்ணிக்கையில் டெஸ்ட் வெற்றிகளையும் டோனி தேடித் தந்துள்ளார்.

முப்பத்தாறு வயது நிரம்பிய டோனி இதுவரை 302 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி பத்து சதங்களுடன் 9737 ஓட்டங்களையும், 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஆறு சதங்களுடன் 4876 ஓட்டங்களையும், 78 இ-20 போட்டிகளில் விளையாடி 1212 ஓட்டங்களையும் குவித்துள்ளார். இதில் அரைச் சதங்கள் நூறும் அடங்கும்.

விக்கெட் காப்பாளராக 256 டெஸ்ட் பிடிகளையும், 285 ஒரு நாள் பிடிகளையும், 43 இ-20 பிடிகளையும் பெற்றிருக்கும் டோனி, மொத்தமாக 163 ஸ்டம்ப்பிங் முறையிலான ஆட்டமிழப்புக்களையும் செய்திருக்கிறார்.

ஏற்கனவே கௌரவத்துக்குரிய ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதைப் பெற்றிருக்கும் டோனி, பத்ம பூஷண் விருதைப் பெறுவாராயின், அந்த விருதைப் பெறும் 11வது கிரிக்கெட் வீரராகக் கருதப்படுவார்.