(ந.ஜெகதீஸ்)

சிறையில் வாடும் அரசியல் கைதிகளுக்கு சிறைச்சாலை புலனாய்வு பொலிஸாரால் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பிலான முறைப்பாடுகளின் விசாரணைகள் துரிதமாகவும் பக்கச்சார்பின்றியும் நடத்தப்பட வேண்டும் என அரசியல் கைதிகளை பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் சிறையிலிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளையும்  பாதுகாப்பதற்கு அரசாங்கமும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எனவும் அவ் அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் மேலும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளுக்கு கடந்த 14 ஆம் திகதி சிறைச்சாலை புலனாய்வு பொலிஸாரினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் கடந்த மே மாதம் 23 ஆம் திகதி கொழும்பு சிறைச்சாலையிலும் இம்மாதம் 4 ஆம் திகதி கண்டி பல்லேகலை சிறைச்சாலையிலுள்ள சிறைக்கைதிகளுக்கும் இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

இவ்அச்சுறுத்தல் தொடர்பாக சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் அரசியல் கைதிகளினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறைக்கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டியவர்களே  தம்முடைய வரம்பை மீறி செயற்படுவதானது மிகவும் வேதனையானதாகும். இச்செயற்பாட்டினை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வன்மையாக கண்டிக்கின்றதென அவர் மேலும் தெரிவித்தார்.