அமெரிக்காவில் பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு ; பாதுகாப்பு அதிகாரி உட்பட மூவர் பலி ; கொலையாளிகள் உயிர்மாய்ப்பு!

19 May, 2026 | 10:00 AM
image

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியாகோ நகரின் மிகப்பெரிய இஸ்லாமிய மையத்தில், இரு பதின்ம வயது வாலிபர்கள் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரி உட்பட மூன்று ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். தாக்குதலை நடத்திய இருவரும் பின்னர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ஈத்-அல்-அதா (பக்ரீத்) மற்றும் ஹஜ் யாத்திரை ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணியளவில், பள்ளிவாசலின் வளாகத்திற்குள் புகுந்த இருவர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதில் பள்ளிவாசலின் பாதுகாப்பு அதிகாரி மற்றும் அங்குள்ள இஸ்லாமிய பாடசாலையின்  இரு ஊழியர்கள் என மூன்று ஆண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த பாதுகாப்பு அதிகாரி (அமீன் அப்துல்லா), கொலையாளிகளை பள்ளிவாசலுக்குள் நுழைய விடாமல் தடுத்து தீரத்துடன் போராடியதாகவும், அவரது இந்த வீரமிக்க செயலால் பள்ளிவாசலுக்குள் இருந்த நூற்றுக்கணக்கான சிறுவர்கள் மற்றும் பொதுமக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதாகவும் சான் டியாகோ பொலிஸ் மா அதிபர் ஸ்காட் வால் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் காரில் தப்பியோடிய சந்தேகநபர்கள், சில வீதிகள் தாண்டிச் சென்று தோட்ட வேலை செய்யும் நபர் ஒருவர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். எனினும், அவர் அணிந்திருந்த தலைக்கவசத்தில் குண்டு பட்டுத் திசைமாறியதால் அவர் காயமின்றி உயிர் தப்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மசூதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து 17 மற்றும் 19 வயதுடைய இரு வாலிபர்களின் உடல்களைப் பொலிஸார் மீட்டுள்ளனர். அவர்கள் தங்களைத்தாங்களே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்துப் பொலிஸ் மா அதிபர் ஸ்காட் வால் மேலும் தெரிவிக்கையில்,

"தாக்குதல் நடப்பதற்கு இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னர், சந்தேகநபர் ஒருவரின் தாய் தனது மகனைக் காணவில்லை எனவும், அவர் உயிர்மாய்ப்பு எண்ணத்துடன் வீட்டின் வாகனத்தையும் ஆயுதங்களையும் எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியிருந்தார். நாம் அவர்களைத் தேடிக் கொண்டிருந்த போதே இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காரில் இருந்து மீட்கப்பட்ட கடிதங்களின் அடிப்படையில், இதனை ஒரு 'வெறுப்புக் குற்றம்' என்ற கோணத்திலேயே எஃப்.பி.ஐ உதவியுடன் விசாரித்து வருகிறோம்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்க-இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் மூண்டுள்ள சூழலில், அமெரிக்காவில் வாழும் இஸ்லாமிய மற்றும் யூத சமூகங்கள் மத்தியில் பாதுகாப்புப் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதமும் மிச்சிகன் பகுதியில் உள்ள யூத தேவாலயம் ஒன்றின் மீது இத்தகையதொரு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் இடம்பெற்ற போது பள்ளிவாசல் பாடசாலையில் இருந்த அனைத்து சிறுவர்களும் எவ்விதப் பாதிப்புமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பள்ளிவாசலின் இமாம் தாஹா ஹஸன் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரான்ஸ் கடற்கரைகளை ஆக்கிரமிக்கும் காட்டுப்பன்றிகள்

2026-08-14 16:37:03
news-image

உக்ரைனில் பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில்...

2026-08-14 14:28:18
news-image

‘ஏர் இந்தியா’ விமானிகள் அனைவருக்கும் போதைப்பொருள்...

2026-08-14 14:16:43
news-image

சீனாவின் C919 விமானம் முதன்முறையாக சர்வதேச...

2026-08-14 14:25:24
news-image

அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே...

2026-08-14 13:03:18
news-image

ஜப்பானில் கடும் மழை: நரிட்டா விமான...

2026-08-14 12:35:25
news-image

வயது அதிகரிப்பதற்காக அவசரப்பட்டு திருமணம் செய்யக்...

2026-08-14 12:14:55
news-image

கடந்த ஒரு மாதமாக குளத்திலேயே வாழும்...

2026-08-14 12:03:02
news-image

இந்தியாவில் ஆபாச வீடியோ அழைப்பு மையம்...

2026-08-14 11:50:33
news-image

இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது: மத்திய...

2026-08-14 10:31:49
news-image

சிறுமி மீதான மனிதக் கடத்தல், பாலியல்...

2026-08-14 10:54:38
news-image

கொங்கோவில் எபோலாவால் 2,000 பேர் உயிரிழப்பு...

2026-08-13 17:36:33