வவுனியா கோவிற்குளம் தபால்பெட்டிச் சந்திக்கருகில் இன்று நண்பகல் 12.30 மணியளவில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை மோட்டார் வண்டியில் வந்த இனந்தெரியாத இருவர் அபகரித்துச் சென்றுள்ளனர்.

இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கோவிற்குளம் தபால்பெட்டிச் சந்தியில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் பொருட்களை கொள்வனவு செய்து விட்டு உமாமகேஷ்வரன் வீதியினூடாக சென்று கொண்டிருந்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கீழே தள்ளி அவரின் கழுத்தில் இருந்த ஒரு பவுண் தங்கச் சங்கிலியை அபகரித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் முழுமையாக முகத்தை மூடி தலைக்கவசம் அணிந்திருந்ததாகவும் சிவப்பு நிற ஆடைகள் அணிந்திருந்ததாகவும் குறித்த பெண் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திலுள்ள கடைகளின் சி.சி.டி.வி கெமரா பதிவுகளை சேகரித்து கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.