(லியோ நிரோஷ தர்ஷன்)

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தியவர்களுக்கு உரிய தண்டனை வழங்குமாறு சுதந்திர ஊடக இயக்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலியகொட காணாமலாக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணை கடந்த 25 ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது. 

இதன் போது பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், அங்கு வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டார். இவர் சட்டத்தரணிகளையும் அதிகாரிகளையும் சாடினார். 

இது கண்டிக்கப்பட வேண்டிய விடயம் என்பதுடன் ,  இவ்வாறு செயற்பட்டவர்களுக்கு  தண்டனை வழங்கப்பட வேண்டும். அத்துடன் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியையும் ஞானசார தேரர் அச்சுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  செய்யப்பட்டுள்ளது. 

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்ட சம்பவத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் , அவர்களை போர் வீரர்கள் எனக் கூறியே ஞானசார தேரர் கோஷம் எழுப்பியுள்ளர். 

ஏவ்வாறாயினும் சட்டத்தை அச்சுறுத்தும் வகையில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என சுதந்திர ஊடக இயக்கம்  அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.