மன்னார்,முருங்கன் கட்டையடம்பன் பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் முந்தல் கொத்தாந்தீவு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

விபத்தில் உயிரிழந்தவர் முந்தல்,கொத்தாந்தீவு கொலனியைச் சேர்ந்த 20 வயதுடைய பாருக் முகம்மது தில்ஷான் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தேங்காய் கொள்வனவு செய்வதற்காக கொத்தாந்தீவு கொலனி மற்றும் பெருக்குவற்றான் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இருவர் சிறிய லொறியொன்றில் நேற்று இரவு மன்னாரை நோக்கிச் சென்றுள்ளனர்.

குறித்த லொறி மன்னார் முருங்கன் கட்டையடம்பன் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதால் லொறி வீதியை விட்டு விலகி வீதியோரத்தில் இருந்த சிறிய கம்பத்துடனும், எதிரே வந்த டிப்பர் ஒன்றுடனும் மோதியதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்தில் லொறியில் பயணித்த இருவரும் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட லொறியின் சாரதியான கொத்தாந்தீவு கொலனியைச் சேர்ந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை இவ்விபத்தில் குறித்த  லொறியின் முன்பக்கம் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், டிப்பர் வாகனத்துக்கும் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் மன்னார் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு, நீதவான் விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் இன்று மாலை ஒப்படைக்கப்பட்டது.

குறித்த விபத்து தொடர்பில் டிப்பர் வாகன சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் நடாத்தி வருகின்றனர்.