(க.சிவலிங்கமூர்த்தி)
லலித் அத்துலத்முதலி மகாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியத்தின் வருமானங்கள் கடந்த காலங்களில் திட்டமிட்ட முறையில் திசைதிருப்பப்பட்டுள்ளது. நிதியத்துக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்களை மீளப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற மகாபொல உயர்கல்விப் புலமைப்பரிசில் திட்டத்தினால் நன்மையடைந்த மாணவர்களுக்கு சான்றிதல் வழங்குதல் மற்றும மகாபொல பழைய மாணவர் இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
மகாபொல நிதியம் என்பது இலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களின் உயிர்நாடியாகும். ஆனால், கடந்த காலங்களில் இந்த நிதியத்தை நிர்வகித்தவர்கள் மாணவர்களின் நலன்களைப் புறந்தள்ளிவிட்டு, சில தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயற்பட்டுள்ளனர். குறிப்பாக, 2015 ஆம் ஆண்டு மே மாதம் அப்போதைய ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட தவறான மற்றும் சட்டவிரோதமான ஒப்பந்தங்கள் காரணமாக, மகாபொல நிதியத்துக்குச் சேர வேண்டிய பாரிய வருமானம் தடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட காணிகள் மற்றும் அங்கு மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மகாபொல நிதியத்துக்கே சொந்தமானவை. ஆனால், ஒரு தவறான ஒப்பந்தம் மூலம் அதன் உரிமை மாற்றப்பட்டது. 2015 ஆம் ஆண்டின் கணக்காய்வு அறிக்கையின்படி, அந்த நிறுவனத்தின் மூலம் கிடைத்த 1168 மில்லியன் ரூபாயக்கு மேற்பட்ட இலாபத்தில் வெறும் 400 மில்லியன் ரூபாய் மட்டுமே மகாபொல நிதியத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 600 மில்லியனுக்கும் அதிகமான தொகை முறையற்ற வகையில் கையாளப்பட்டுள்ளது. தற்போது அந்த நிலுவைப் பணத்தை அறவிடுவதுடன், குறித்த நிறுவனம் வசமுள்ள மகாபொலவுக்குச் சொந்தமான காணிகளை மீண்டும் நிதியத்தின் கீழேயே கொண்டுவருவதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மகாபொல நிதியத்தின் மூலம் நிதி திரட்டுவதற்காக நடத்தப்பட்ட மகாபொல கண்காட்சி வருமானங்களிலும் பாரிய ஊழல்கள் இடம்பெற்றுள்ளன. கண்காட்சிகளுக்காக நிதியத்திலிருந்து பணம் பெறப்பட்டுள்ள போதிலும், அதற்கான வருமானம் மீண்டும் நிதியத்துக்கு வந்து சேரவில்லை. இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எமது அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர், மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு இந்த ஊழல் வலையமைப்பைத் தகர்த்தெறிந்து வருகின்றோம். 2024-2025 காலப்பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 5,000 ரூபாய் புலமைப்பரிசில் தொகையை எவ்விதத் தடையுமின்றி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஆசோசனையின் படி 10,000 ரூபாயாக அதிகரித்துள்ளோம். அபிவிருத்தி லொத்தர் சபை மற்றும் ஜனாதிபதி நிதியமும் இதற்கு உயரிய நிதி உதவிகளை செய்து வருகிறது. நிதியத்தின் வருமான மார்க்கங்களைச் சீர்படுத்துவதன் ஊடாகவே இந்த அதிகரிப்பை எம்மால் சாத்தியப்படுத்த முடிந்தது. இனிவரும் காலங்களில் மகாபொல நிதியம் என்பது அரசியல் தலையீடுகளற்ற, மாணவர்களுக்கு முழுமையாகச் சொந்தமான ஒரு பலமான நிதியமாக மாற்றப்படும் என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM