புதிய அரசியலமைப்பின் மூலம் முறையான அதிகாரப் பகிர்வைப் பெறுவதே எமது இறுதி இலக்கு - இராசமாணிக்கம் சாணக்கியன்

11 May, 2026 | 05:31 PM
image

(எம்.மனோசித்ரா)

மாகாணசபை முறைமையில் குறைபாடுகள் காணப்பட்டாலும், முதலில் அதன் கீழ் தேர்தலை நடத்தி மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரங்களை ஒப்படைக்க வேண்டும். புதிய அரசியலமைப்பின் மூலம் முறையான அதிகாரப் பகிர்வைப் பெறுவதே எமது இறுதி இலக்காகும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

மேலும் மாகாணசபை என்பது ஒரு தேவையற்ற 'வெள்ளை யானை' என்ற கூற்றை நிராகரித்த அவர், இந்தியாவின் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் அதிகாரப் பகிர்வு மூலமாகவே முதலீடுகளை ஈர்த்து வளர்ச்சி கண்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (11) இடம்பெற்ற 'மக்களுக்கான எதிர்க்கட்சி' விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மாகாணசபை முறைமையானது இலங்கையிலுள்ள சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய மூன்று பிரதான சமூகங்களின் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வாகவும், நாட்டின் அதிகாரங்களை பரவலாக்கி அந்தந்தப் பகுதி மக்கள் தங்களுக்குப் பொருத்தமான பிரதிநிதிகளையும் முதலமைச்சர்களையும் தெரிவு செய்து நிர்வகிப்பதற்காகவுமே அறிமுகப்படுத்தப்பட்டது.

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய பகுதியினரும் தங்களது அடையாளங்களுக்கு ஏற்ப மாகாணசபைகளைத் தெரிவு செய்திருந்தனர். ஆனால் 2017 ஆம் ஆண்டிலிருந்து மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு, முன்னர் இருந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக்கூற வேண்டும்.

2024 இல் ஜே.வி.பி. ஆட்சிக்கு வரும்போது, தங்களது முதலாம் ஆண்டு ஆட்சி காலத்துக்குள் மாகாணசபை தேர்தலை நடத்துவோம் என்று கூறினார்கள். ஆனால் இதுவரை அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

பாராளுமன்றத்தில் இந்த மாகாணசபை தேர்தல் கோரிக்கையைத் தொடர்ந்து முன்வைத்ததன் காரணமாக கடந்த மார்ச் 17ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் ஒரு பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்குள் இதன் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்ட போதிலும், தற்போது இரண்டு மாதங்கள் கடந்து மூன்று முறை இக்குழு கூடியும் சாதகமான பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை.

2017ஆம் ஆண்டின் மாகாண சபைகள் சட்டத்தை இரத்து செய்து, 1987ஆம் ஆண்டின் சட்டத்தின் கீழ் பழைய விருப்பு வாக்கு முறையில் தேர்தலை நடத்துவதே மிகச் சிறந்த வழியாகும். இதற்காக நான் கடந்த ஆண்டு மார்சில் ஒரு தனிநபர் பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தேன். அது தற்போது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு இரண்டாவது வாசிப்புக்குத் தயாராகவுள்ளது.

அரசாங்கத்துக்கு தேர்தல் நடத்தவேண்டும் என்ற உண்மையான நோக்கம் இருக்குமாயின், பாராளுமன்றக் குழுவை அவசரமாகக் கூட்டி, அடுத்த பாராளுமன்றக் கூட்டத்தொடரிலேயே இந்தத் தனிநபர் பிரேரணையை சமர்ப்பித்து நிறைவேற்றி மூன்று மாதங்களுக்குள் தேர்தலை நடத்த முடியும். ஆனால் அரசாங்கம் தேர்தலை நடத்தாமல் காலத்தைக் கடத்துவதற்காகவே தெரிவுக்குழுவை அமைத்துள்ளது.

இந்தத் தெரிவுக்குழுவின் முதலாவது கூட்டத்திலேயே, நான் கொண்டு வந்த தனிநபர் பிரேரணையைப் பயன்படுத்தி 2017ஆம் ஆண்டின் சட்டத்தை இரத்து செய்யுமாறு கோரினோம். ஆனால் அரசாங்கத் தரப்பினர் இப்போது குழு அமைக்கப்பட்டுள்ளதால் முழுமையாக ஆராய வேண்டும் எனக் கூறி இழுத்தடித்தனர்.

ஏப்ரல் 7ஆம் திகதி நடைபெற்ற இரண்டாவது கூட்டத்திற்கு சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து வந்திருந்த அதிகாரி அனுபவம் குறைந்தவராகவும், முடிவெடுக்கும் அதிகாரம் அற்றவராகவும் காணப்பட்டார். நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு 'ஆராய்ந்து பதில் தருகிறேன்' என்றே கூறினார். அன்றைய கூட்டத்தில் நாம் அவரிடம் நான்கு முக்கிய கேள்விகளை முன்வைத்து அடுத்த கூட்டத்தில் பதிலளிக்குமாறு கோரினோம்.

அவற்றில் முதலாவது 2017ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் பிரதமரால் நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கை கிடைக்கப் பெறாதவிடத்து அடுத்த கட்ட சட்ட நடவடிக்கை என்ன? இரண்டாவது எனது தனிநபர் பிரேரணை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணானது என மாகாண சபைகளுக்கான அமைச்சர் கூறுகிறார். ஆனால் அந்த பிரேரணை 2024 இல் உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படியே தயாரிக்கப்பட்டது. இது குறித்த சட்டமா அதிபரின் உத்தியோகபூர்வ கருத்து என்ன?

அடுத்தது எனது தனிநபர் பிரேரணையை அரசாங்கம் ஏற்பதாயின், அதில் பெண்களுக்கான மற்றும் இளைஞர்களுக்கான பிரதிநிதித்துவத்தை எவ்வாறு குழு நிலையில் உள்வாங்க முடியும்? இறுதியாக, அவ்வாறில்லையெனில், 1987ஆம் ஆண்டின் பழைய மாகாண சபை சட்டத்தில் பெண் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு இணைப்பது? என்பவற்றுக்கான பதில்களைக் கோரியிருந்தோம்.

இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க ஏப்ரல் 22இல் அடுத்த கூட்டம் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் புத்தாண்டு விடுமுறை காரணமாக பாராளுமன்றம் கூடவில்லை. பின்னர் மே 7ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்துக்கு வந்த சட்ட அதிகாரி, பாராளுமன்றத்தில் இருந்து தனக்கு இது குறித்து அறிவிக்கப்படவில்லை எனக் கூறி எந்தப் பதிலும் இன்றி வெறுங்கையுடன் வந்திருந்தார்.

இது மாகாணசபை தேர்தலைத் திட்டமிட்டு தள்ளிப்போடும் ஒரு சூழ்ச்சி என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இதற்கு இக்குழுவின் தலைவரும் அதிகாரிகளுமே பொறுப்பேற்க வேண்டும். அடுத்த கூட்டம் மே 22இல் நடைபெறவுள்ளது. அதற்கு சட்டமா அதிபர் அல்லது சொலிசிட்டர் ஜெனரல் போன்ற மூத்த அதிகாரிகளே சமூகமளிக்க வேண்டும் என நாம் கோரியுள்ளோம்.

அரசாங்கம் தேர்தலுக்குப் பயப்படுகிறது என்பதை நேரடியாக ஒப்புக்கொண்டால் நாங்கள் எங்களது நேரத்தை வீணடிக்காமல் எங்களது பணிகளைப் பார்ப்போம். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த நிலைமை இப்போது இல்லை. மக்களின் ஆதரவு தற்போதைய அரசாங்கத்திற்கு வெகுவாகக் குறைந்துள்ளது. பொருளாதாரப் பிரச்சினைகள், எரிபொருள் விலை உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு போன்றவற்றால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தெரிவுக்குழுக்களில் நடக்கும் இழுத்தடிப்புகளை ஊடகங்கள் வாயிலாக மக்களுக்குத் தெளிவுபடுத்துவது அவசியம். மாகாணசபைகள் ஆளுநர்கள் மூலமாக மக்களின் அன்றாடப் பிரச்சினைகளான ஆசிரியர் இடமாற்றம், பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகளுக்கான நிதி ஒதுக்கீடு போன்றவற்றைச் சரியாகச் செய்ய முடியாது.

அண்மையில் சுகாதார அமைச்சினால் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மருத்துவமனைகளின் செயற்பாடுகளைக் கண்காணிக்க தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது சட்டவிரோதமானது. கிழக்கு மாகாணம் போன்ற பகுதிகளில் போதனா மருத்துவமனை மட்டுமே மத்திய அரசின் கீழ் வரும். ஏனைய மாவட்ட மருத்துவமனைகள் மாகாண சபையின் கீழ் வருபவை. மாகாண சபைக்குரிய அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுவது தவறானது.

அண்டை நாடான இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் தங்களுக்குள் முதலீடுகளை ஈர்ப்பதில் போட்டியிடுகின்றன. அதிகாரப் பகிர்வு மூலமாகவே இந்த வளர்ச்சி சாத்தியமானது. மாகாணசபை என்பது ஒரு தேவையற்ற வெள்ளை யானை என்ற கூற்றை ஏற்க முடியாது.

எமது இறுதி இலக்கு புதிய அரசியலமைப்பின் மூலம் முறையான அதிகாரப் பகிர்வைப் பெறுவதே ஆகும். தற்போதைய மாகாண சபை முறையில் குறைபாடுகள் இருந்தாலும், முதலில் இருக்கும் முறையின் கீழ் தேர்தலை நடத்தி மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரங்களை ஒப்படைக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குற்றச் செயல்களைப் பொலிஸ் திணைக்களத்தால் மாத்திரம்...

2026-06-14 16:06:17
news-image

எல்-நினோவால் நாட்டுக்குப் பாரிய பாதிப்புகள் ஏற்படும்...

2026-06-14 15:50:48
news-image

வலி.வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 36...

2026-06-14 16:03:29
news-image

பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கை குற்றச்செயல்களுடன்...

2026-06-14 16:00:39
news-image

முழு நாடுமே ஒன்றாக என்னும் நடவடிக்கைகமைய...

2026-06-14 16:00:10
news-image

பாரிய கடத்தல் முறியடிப்பு: சொகுசு மோட்டார்...

2026-06-14 14:54:12
news-image

செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிடவுள்ள ஐரோப்பிய ஒன்றியப்...

2026-06-14 14:53:38
news-image

மாகாணசபைத் தேர்தல்; சாணக்கியன் எம்.பியின் தனிநபர்...

2026-06-14 14:48:35
news-image

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு...

2026-06-14 15:02:36
news-image

டெங்கு உட்பட வைரஸ் காய்ச்சல் பரவல்...

2026-06-14 14:31:24
news-image

தேசிய கல்விக் கொள்கையின்றி கல்வி மறுசீரமைப்புகளை...

2026-06-14 13:48:36
news-image

எனது கணவர் செம்மணி படுகொலையை வெளிப்படுத்திய...

2026-06-14 12:49:37