இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கும் 'வாரண்ட்' இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா

11 May, 2026 | 04:17 PM
image

ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் வெளியாகும் 'வாரண்ட்' எனும் குற்ற புலனாய்வு விசாரணை பின்னணியிலான அசல் இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'வாரண்ட்' எனும் இணைய தொடரில் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், பாலாஜி சக்திவேல், காளி வெங்கட், அருள் தாஸ், சாயா தேவி, அருள் ஜோதி, நம்ரிதா, மீனா, கௌசல்யா, வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அசோக் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த இணைய தொடருக்கு சாம் சி எஸ் பின்னணி இசையமைத்திருக்கிறார். காவல் நிலையம் ஒன்றில் பணியாற்றும் கடைநிலை காவலரின் வாழ்வியலை உணர்வு பூர்வமாக விவரிக்கும் இந்த இணைய தொடரை ஜீ 5 டிஜிட்டல் தளத்திற்காக சிவன் பிக்சர்ஸ் மற்றும் எஸ் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் பிரசாந்த் பாண்டியராஜ், பி விஷால், பி எம். ஆதிஸ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் அசல் இணைய தொடர்களுக்கு டிஜிட்டல் தள ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு உண்டு. அந்த வகையில் தயாராகி இருக்கும் இந்த இணைய தொடர் எதிர்வரும் 22 ஆம் திகதியன்று வெளியாக உள்ள நிலையில் இதன் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர்கள் மதன்- சினீஷ் ,இயக்குநர்கள் சுசீந்திரன் - பாண்டிராஜ், நடிகர் கவின் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.

இந் நிகழ்வில் ஜீ 5 நிறுவனத்தில் தலைமை பொறுப்பு வகிக்கும் ஷாம் பேசுகையில், '' ஒவ்வொரு மாதமும் ஒரு தரமான இணைய தொடரை வெளியிட வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற 'விலங்கு' இணைய தொடரின் இரண்டாம் பாகத்தை உருவாக்க தீர்மானித்த போது அதில் இடம்பெறும் கோட்டை கருப்பசாமி எனும் கதாபாத்திரத்தை மையப்படுத்தி பிரத்யேகமாக ஒரு தொடரை உருவாக்க முடிவு செய்தோம்.

அந்த கதாபாத்திரத்தின் பின்னணி கதையை மையப்படுத்தி ஒரு சாதாரண காவலர் எவ்வாறு வலிமையான காவல்துறை அதிகாரியாக உயர்கிறார் என்பதை தான் இந்த 'வாரண்ட் 'எனும் இணையத் தொடரில் காட்சிப்படுத்தியுள்ளோம். இந்த தொடர் மூலம் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜை கதையின் நாயகனாகவும் நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம் '' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right