தாய்லாந்து அரசியலில் பெரும் செல்வாக்கு மிக்கவரும், சர்ச்சைக்குரிய தலைவருமான முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா இன்று (11) திங்கட்கிழமை பாங்கொக் க்ளோங் பிரேம் மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த அவர், 08 மாதங்கள் தண்டனையை அனுபவித்த நிலையில் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தக்சின் விடுதலையாவதைக் கேள்விப்பட்ட அவரது ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் கூட்டாளிகள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் சிறை வாசலில் திரண்டிருந்ததோடு, வெள்ளை நிற போலோ சட்டை மற்றும் நீல நிற கால்சட்டை அணிந்து சிறையிலிருந்து வெளியே வந்த தக்சினை, அவரது மகளும் முன்னாள் பிரதமருமான பெடோங்டார்ன் ஷினவத்ரா உள்ளிட்ட குடும்பத்தினர் கட்டித்தழுவி வரவேற்றுள்ளனர்.
ஆதரவாளர்கள் "நாங்கள் தட்சினை நேசிக்கிறோம்" என முழக்கமிட்டு அவருக்கு சிவப்பு ரோஜாக்களை வழங்கித் தமது அன்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதன்போது, ஊடகவியலாளர்களிடம் எதுவும் பேசாமல் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
தொலைத்தொடர்புத் துறை தொழில் அதிபர் தக்சின், 2001 முதல் 2006 வரை தாய்லாந்தின் பிரதமராகப் பணியாற்றினார். ஏழை மக்களுக்கான சுகாதாரத் திட்டங்கள் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற அவர், 2006-ல் இராணுவப் புரட்சி மூலம் பதவியிறக்கப்பட்டார்.
அதன் பின்னர் ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க நீண்ட காலம் வெளிநாட்டில் தலைமறைவாக வாழ்ந்து வந்த அவர், 2023-ல் மீண்டும் தாய்லாந்து திரும்பிய போது கைது செய்யப்பட்டார்.
ஆரம்பத்தில் இவருக்கு 08 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், மன்னர் மஹா வஜிராலோங்கோர்ன் அதனை ஒரு ஆண்டாகக் குறைத்தார். தக்சினின் வயது, சிறையில் அவரது நன்னடத்தை மற்றும் மீண்டும் குற்றம் செய்வதற்கான வாய்ப்பு குறைவு என்பனவற்றைக் கருத்திற்கொண்டு அவருக்கு பரோல் வழங்க நீதி அமைச்சு தீர்மானித்தது.
விடுதலையான போதிலும், அவர் தனது கையில் மின்னணு கண்காணிப்பு வளையல் அணிய வேண்டும். பாங்கொக்கில் உள்ள அவரது இல்லத்திலேயே தங்கியிருக்க வேண்டும். அவ்வப்போது நன்னடத்தை அதிகாரிகளிடம் முன்னிலையாகி அறிக்கை அளிக்க வேண்டும் என அடுத்த நான்கு மாதங்களுக்குக் கடுமையான நிபந்தனைகளுக்கு உட்படுத்தப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தக்சினின் மகள் பெடோங்டார்ன் 2024-ல் நாட்டின் இளம் பிரதமராகப் பதவியேற்ற போதிலும், 2025 ஆகஸ்டில் நீதிமன்ற உத்தரவுப்படி பதவியிறக்கப்பட்டார். இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தட்சினின் 'பியூ தாய்' கட்சி மூன்றாம் இடத்தையே பிடித்திருந்த நிலையில், அவரது இந்த விடுதலை தாய்லாந்து அரசியலில் மீண்டும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM