“வீ செட்” எனும் கையடக்கத்தொலைபேசி செயலி வழியாக மலேசியர்களை இலக்காக வைத்து, பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த மூன்று ரஷ்ய பெண்களைப் பொலிஸார் கைது செய்துள்ளதாக மலேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விபசாரத்திற்கு எதிராக சோதனை நடத்தி வருகின்ற மலேசிய பொலிஸ், சில நாட்களாக குறித்த மூன்று ரஷ்ய பெண்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வந்துள்ளனர்.

அதற்கமைய, நேற்று மாலை 5 மணியளவில் பிளாசா வாவாசானிலுள்ள விடுதி அறையில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் இரு ஆண்களுடன் 18, 22 மற்றும் 28 வயதுடைய அந்த மூன்று ரஷ்ய பெண்கள் கைது செய்யப்பட்டனர். 

சோதனை நடவடிக்கையின் போது 2,240 ரிங்கிட் பணம், 3 கையடக்கத்தொலைப்பேசிகள் மற்றும் சில பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்று மலேசிய மாநில குற்றப் புலனாய்வுப் பிரிவின் துணை ஆணையர் டத்தோ சாலேஹுடின் அப்துல் ரஹ்மான் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

சுமார் 36 மற்றும் 48 வயதுடைய அந்த இரு ஆடவர்களும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, அப்பெண்களின் கடவுச்சீட்டினை சோதனை செய்ததில் சுற்றுப்பயண விசாவில் மலேசியாவிற்கு வந்து இது போன்ற செயலில் ஈடுபட்டு வந்தமை வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.