ஆதாரத்துடனேயே ரங்க ராஜபக்ஷவின் மரணம் குறித்துப் பேசினேன் : பொலிஸ் நிலையத்தில் சாட்சியங்களுடன் முன்னிலையாகத் தயார் - பொலிஸ் ஊடகப் பேச்சாளருக்கு உதய கம்மன்பில பதில்

06 May, 2026 | 07:33 PM
image

(எம்.மனோசித்ரா)

உயிரிழந்த நிதி அமைச்சின் அதிகாரி ரங்க ராஜபக்ஷவின் மரணம் தொடர்பில் அவரது மனைவி சந்தேகம் வெளியிட்டதாக தான் குறிப்பிட்ட விடயம் முற்றிலும் உண்மை என்றும், அதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உத்தியோகபூர்வ கடித ஆதாரத்துடனேயே தான் முன்வைத்ததாகவும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்தார்.

அரசாங்கம் என் மீது சுமத்தும் பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சப்போவதில்லை. எதிர்வரும் 9ஆம் திகதி குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் சாட்சியங்களுடன் முன்னிலையாகத் தயாராகவுள்ளேன். அரசாங்கத்தின் பதிலளிக்க முடியாத கேள்விகளை எழுப்புவதாலேயே என்னை சிறையில் அடைக்க ஒன்பதாவது முறையாக முயற்சிக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதன்கிழமை (6) கொழும்பு - டாலி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற 'மக்களின் குரல்' ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ரங்க ராஜபக்ஷவின் மனைவியே மரணத்தில் சந்தேகம் இருப்பதாக முறைப்பாடு செய்தார் என்று ஆதாரத்துடனேயே நான் கூறினேன். செவ்வாயன்று  ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்திய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், ரங்க ராஜபக்ஷவின் மரணம் சந்தேகத்திற்குரியது என அவரது மனைவி அறிவித்ததாக நான் கூறிய கருத்து பொய்யானது என்றும், இது தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக என்னை குளியாப்பிட்டிய பொலிஸிற்கு அழைக்கவுள்ளதாகவும், பின்னர் குளியாப்பிட்டிய நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் என்னையும் ஜனாதிபதியைப் போன்ற ஒருவர் என்று நினைக்கிறார் போலிருக்கிறது. ஜனாதிபதியின் அளவுகோலால் என்னை அளந்து அவதூறு பரப்ப வேண்டாம் என நான் அவரிடம் கேட்டுக்கொள்கிறேன். ஜனாதிபதி கற்பனைகளின் அடிப்படையில் கருத்துக்களை வெளியிடுகிறார், ஆனால் நாம் ஆதாரங்களின் அடிப்படையிலேயே கருத்துக்களை வெளியிடுகிறோம்.

2012 டிசம்பர் 12ஆம் திகதி நாமல் ராஜபக்ஷவின் பெயரில் 19 லம்போகினி கார்கள் வந்ததைப் பார்த்தது போலவும், மக்களின் பணத்தில் விண்வெளிக்கு ரொக்கெட்டுகளை ஏவியதைப் பார்த்தது போலவும், ராஜபக்ஷக்கள் உகண்டாவில் டொலர்களைக் பதுக்கியதைப் பார்த்தது போலவும், சீன நிறுவனங்கள் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இலஞ்சம் கொடுத்த காசோலை இலக்கத்தைப் பார்த்தது போலவும் நானும் கற்பனையில் பேசுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நினைக்கிறார். ஆனால் நாம் இந்த அறிக்கையை ஆதாரங்களுடன் முன்வைத்துள்ளோம்.

2026 மே 1ஆம் திகதி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நான்கு வைத்தியர்களைக் கொண்ட குழுவொன்றை பிரேத பரிசோதனைக்காக நியமிக்கிறார். அந்த வைத்தியர்களுக்கு சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தினால் ஆங்கிலத்தில் அனுப்பப்பட்ட கடிதத்தில், 'குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஹல வீரம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த நிஸ்சங்க ஆரச்சிலாகே சீலவதி, தனது கணவர் அபேசிங்க ஆரச்சிலாகே ரங்க நிஷாந்த ராஜபக்ஷ 2026.04.30 அன்று சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளார்.' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறெனில், ரங்க ராஜபக்ஷவின் மனைவி தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளமை நாட்டின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் அனுப்பிய கடிதத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. இது சாதாரண கடிதம் அல்ல் நான்கு நிபுணத்துவ வைத்தியர்களைக் கொண்ட பிரேத பரிசோதனைக் குழுவை நியமிக்கும் கடிதம். நாம் அந்தக் கடிதத்தை ஆதாரமாகக் கொண்டே பேசினோம், கற்பனையில் அல்ல. அந்தக் கடிதத்தில் இல்லாத ஒரே ஒரு சொல் மாத்திரமே என்னால் சேர்க்கப்பட்டது, அதாவது 'பொலிஸிற்கு அறிவித்தார்' என்பது. ஒரு மரணத்தில் சந்தேகம் இருந்தால் அதை மருத்துவமனைக்கோ, பாடசாலைக்கோ அல்லது விகாரைக்கோ அறிவிப்பதில்லை, பொலிஸிற்கே அறிவிப்பார்கள்.

நான் பொய்யான கருத்தை வெளியிட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறிய போது, அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவருக்கு வலதுபுறம் அமர்ந்திருந்தவர் இதே சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் தான். நான் ரங்க ராஜபக்ஷவின் பிரேத பரிசோதனை பற்றித்தான் பேசினேன். எனவே, என் மீது குற்றம் சுமத்துவதற்கு முன்னால் இது குறித்து சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்திடம் கேட்டிருந்தால் உண்மையை அறிந்திருக்கலாம். வாக்குமூலம் அளிப்பதற்காக 9 ஆம் திகதி காலை 10 மணிக்கு குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எங்களிடம் உள்ள ஆதாரங்களுடன் அன்றைய தினம் குளியாப்பிட்டியவிற்குச் செல்ல எதிர்பார்த்துள்ளோம்.

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இது தொடர்பாக எனக்கு எதிராக வழக்குத் தொடரப்போவதாக கூறியிருந்தார். இந்த அரசாங்கம் என்னை சிறையில் அடைக்க முயற்சிப்பது இது ஒன்பதாவது தடவை. இந்த ஒரு முறையாவது நான் திருடினேன் என்றோ, மோசடி செய்தேன் என்றோ அல்லது ஒழுக்கக்கேடாக நடந்துகொண்டேன் என்றோ என்னை சிறையில் அடைக்க அவர்கள் முயலவில்லை. அரசாங்கத்திற்குப் பதில் சொல்ல முடியாத கேள்விகளைக் கேட்பதாலேயே என்னை சிறையில் அடைக்கப் பார்க்கிறார்கள். கடந்த எட்டுத் தடவைகளும் நீதிமன்றம் சுதந்திரமாகச் செயற்பட்டதால் நான் தப்பித்தேன். ஒன்பதாவது தடவையாவது தேசிய மக்கள் சக்தியின் கனவு நனவாகட்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். என்னை சிறையில் அடைக்கும் வரை தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களுக்குத் தூக்கம் வராது என்றால், நான் சில நாட்கள் விளக்கமறியலில் இருக்கிறேன். பாவம் அவர்கள் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் கொள்வனவு சர்ச்சை: பகிரங்க விசாரணை...

2026-05-11 16:16:10
news-image

கபில சந்திரசேனவுக்கு ரங்க திஸாநாயக்க கடும்...

2026-05-11 14:26:37
news-image

செப்டெம்பர் மாதம் வரை மின்கட்டணம் திருத்தம்...

2026-05-11 16:17:00
news-image

அரசாங்கத்தின் ஒவ்வொரு சட்ட விரோத செயல்களுக்கு...

2026-05-11 17:30:46
news-image

தனிநபர் அடக்குமுறைக்கும் ஜனநாயக விரோதச் செயல்களுக்கும்...

2026-05-11 17:25:47
news-image

புதிய அரசியலமைப்பின் மூலம் முறையான அதிகாரப்...

2026-05-11 17:31:39
news-image

கபில சந்திரசேனவின் மரணம் ; உண்மையை...

2026-05-11 17:13:19
news-image

வவுனியா வடக்கில் வீதியோரத்தில் இரு மாதங்களுக்கு...

2026-05-11 21:41:29
news-image

தற்போதைய அரசுக்கு முட்டுக்கட்டை போடாது நாட்டை...

2026-05-11 17:45:11
news-image

"இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான இளைஞர்...

2026-05-11 19:16:34
news-image

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு :...

2026-05-11 18:59:17
news-image

21வது ஆசிய ஊடக மாநாட்டில் பங்கேற்பதற்காக...

2026-05-11 18:05:33