(க.சிவலிங்கமூர்த்தி)
நாட்டில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சுகாதாரப் பாதுகாப்புத் தேவைகளை உறுதிப்படுத்தி, அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் ஜனசக்தி அறக்கட்டளையானது ஜனாதிபதி நிதியத்துடன் இணைந்து புதியதொரு தேசிய செயற்றிட்டத்தை ஆரம்பித்துள்ளது. 'நாளை வடிவமைக்க இன்று பாதுகாப்போம்' எனும் மனிதாபிமான தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் இத்திட்டம் தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (6) கொழும்பு ப்ளூ ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஜனசக்தி குழுமத்தின் நிறுவுனரும் தலைவருமான சி.டி.ஏ. ஷாப்டர், ஜனாதிபதியின் சட்ட விவகார ஆலோசகர் ஜே.எம். விஜேபண்டார ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ஜி.ஜி.எஸ்.சி. ரோஷான் மற்றும் குழுமச் சந்தைப்படுத்தல் அதிகாரி கமிக்க டி சில்வா உட்படப் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
ஜனசக்தி குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் குழும முதன்மை நிறைவேற்று அதிகாரியுமான ரமேஷ் ஷாப்டர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
வசதியுள்ள ஒரு பெற்றோர், தனது பிள்ளையின் உயிரைக் காக்கத் தனது வீட்டையாவது விற்றுச் சிகிச்சை அளிக்க முற்படுவார்கள். ஆனால், எவ்வித சொத்துகளோ அல்லது பொருளாதார வசதியோ இன்றித் தனது பிள்ளைகள் நோயினால் அவதிப்படுவதைக் கண்டு கண்ணீர் வடிக்கும் ஏழைப் பெற்றோரின் நிலை மிகவும் வேதனையானது. இவ்வாறான இக்கட்டான நிலையில் உள்ளவர்களுக்குக் கரம் கொடுப்பதற்காகவே ஜனாதிபதி நிதியத்துடன் இணைந்து செயலாற்ற நாம் முன்வந்துள்ளோம்.
நாட்டின் மிக உயரிய அறக்கட்டளை நிறுவனமான ஜனாதிபதி நிதியத்துடன் ஒரு தனியார் பெருநிறுவனம் இவ்வாறு கைகோர்ப்பது இதுவே முதல் முறையாகும். நாம் வெறும் நிதி வழங்குநராக மட்டும் இல்லாமல், ஒரு பங்காளராக ஜனாதிபதி நிதியத்துடன் இணைந்து இந்த மனிதாபிமானப் பயணத்தை மேற்கொள்கின்றோம். இனம், மதம், மொழி, சாதி அல்லது பிராந்தியம் என நம்மைப் பிரிக்கும் எவ்வித பாகுபாடுகளுமின்றி, இலங்கையின் அனைத்துச் சிறுவர்களையும் சமமான பிரஜைகளாகக் கருதியே இந்த மருத்துவ உதவிகள் வழங்கப்படவுள்ளன. இதுவே எமது நிறுவனத்தின் அடிப்படை நோக்கமுமாகும். லாபம் ஈட்டுவதை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல் சமூகப் பொறுப்புணர்வுடன் மனிதாபிமான முகத்தைக் காட்டும் ஒரு வணிக நடவடிக்கையாக ஜனசக்தி அறக்கட்டளை இதனை முன்னெடுத்துள்ளது எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ஜி.ஜி.எஸ்.சி. ரோஷான் அங்கு உரையாற்றுகையில்,
ஜனாதிபதி நிதியமானது தற்போது கொழும்பைத் தளமாகக் கொண்ட ஒரு நிறுவனமாக மட்டும் இல்லாமல், நாடு முழுவதும் அதிகாரப் பரவலாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கைகள் ஊடாக, நாட்டின் 341 பிரதேச செயலகப் பிரிவுகளுடனும் இந்த நிதியம் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட இந்த மாற்றத்தின் விளைவாக, தற்போது நிதியத்துக்கு வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை நூறு சதவீதத்தால் அதிகரித்துள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தொலைதூரப் பகுதிகளில் இருந்து வரும் விண்ணப்பங்கள் இருநூறு சதவீதம் வரை அதிகரித்துள்ளன.
கடந்த காலங்களில் ஜனாதிபதி நிதியம் தொடர்பாகப் பல்வேறு விமர்சனங்கள் நிலவியிருக்கலாம். ஆனால் இன்று இந்நிதியம் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் ஒரு மக்கள் நிதியமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த வெளிப்படைத்தன்மையை நம்பியே ஜனசக்தி குழுமம் இன்று எங்களுடன் கைகோர்த்துள்ளது. தனியார் துறையும் அரசாங்கமும் இணைந்து சிறுவர்களின் நலனுக்காகச் செயல்படும் இந்த புதிய அனுபவமானது இலங்கையின் எதிர்காலத்திற்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகும். ஜனசக்தி அறக்கட்டளையின் இந்த பெறுமதிமிக்க பங்களிப்பிற்கு ஜனாதிபதி நிதியத்தின் சார்பாக எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்.
இப்புதிய புரிந்துணர்வு உடன்படிக்கையின் படி, 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களின் மருத்துவச் சிகிச்சைக்காக ஜனாதிபதி நிதியம் வழங்கும் அதே அளவிலான நிதித் தொகையை அல்லது எஞ்சியிருக்கும் நிலுவைத் தொகையை (இதில் எது குறைவோ அத்தொகை) ஜனசக்தி அறக்கட்டளை மேலதிகமாக வழங்கும். இதன் மூலம் ஒரு நோயாளிக்குக் கிடைக்கும் மொத்த நிதியுதவி இருமடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது. சிகிச்சைக்குப் பின்னரான கொடுப்பனவுகள் பாதுகாவலர்களுக்கு வழங்கப்படும் அதேவேளை, அவசர சிகிச்சை மற்றும் வெளிநாட்டு சிகிச்சைகளுக்கான கொடுப்பனவுகள் சிகிச்சைக்கு முன்னரே வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக விண்ணப்பிப்பவர்கள் தமது மருத்துவத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கான சம்மதப் படிவத்தையும் பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் வரும் 2026 மே மாதம் 15 ஆம் திகதி முதல் ஜனாதிபதி நிதியத்துக்குச் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, மேலதிக நிதி உதவிகள் ஜனசக்தி அறக்கட்டளையினால் வழங்கப்படும் என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM