(நா.தனுஜா)
இதுவரையான காலப்பகுதியில் நாட்டை நிர்வகித்த மூன்று அரசாங்கங்கள் ஏனைய புறக்காரணிகளைக் கூறி, அதனை ஒரு உபாயமாகப் பயன்படுத்தி மாகாணசபைத்தேர்தல்களை நடாத்தாமல் தாமதித்து வந்திருக்கின்றன. அந்த உத்தியையே தற்போதைய அரசாங்கமும் கையாள்வதாகச் சுட்டிக்காட்டியுள்ள பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, இப்போது அவசியமாக இருப்பது மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவது குறித்த அரசாங்கத்தின் தீர்மானம் மாத்திரமேயாகும் எனத் தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத்தேர்தல்கள் உடன் நடாத்தப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நேற்று புதன்கிழமை (6) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது,
மாகாணசபைத்தேர்தல்கள் நடாத்தப்பட்டு சுமார் 14 வருடங்கள் கடந்துள்ளன. இறுதியாக 2014 ஆம் ஆண்டு ஊவா மாகாணசபைக்கான தேர்தல் நடாத்தப்பட்டது. அதேபோன்று கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் 2012 ஆம் ஆண்டு நடாத்தப்பட்டது. எனவே சுமார் 14 வருடங்களாக இந்த மாகாணசபைகள் மக்கள் பிரதிநிதிகளின்றி, ஆளுநர்களின் நிர்வாகத்தின் கீழேயே இயங்கிவருகின்றன.
தற்போதைய அரசாங்கமும் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்தாமல், தொடர்ந்து காலந்தாழ்த்திவரும் கொள்கையையே பின்பற்றிவருகிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் 28 ஆவது பக்கத்தில் ஒரு வருடகாலத்துக்குள் உள்ளுராட்சிமன்றத்தேர்தல்கள் மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கம் ஆட்சிபீடமேறி சுமார் ஒன்றரை வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதற்கான ஆயத்தங்களை அரசாங்கம் இன்னமும் மேற்கொள்ளவில்லை.
மாறாக மாகாணசபைத்தேர்தலை எந்த முறையில் நடாத்துவது என்பது குறித்துத் தீர்மானிப்பதற்காக அரசாங்கம் குழுவொன்றை நியமித்தது. அக்குழு நியமிக்கப்பட்டு சுமார் 3 மாதங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், அக்குழுவின் அறிக்கை பற்றிய விபரங்கள் எவையும் தெரியவில்லை. எது எவ்வாறெனினும், மாகாணசபைத்தேர்தலை நடாத்துவதற்கு அரசியல் ரீதியிலான தீர்மானமே அவசியம் என்பதே எமது நிலைப்பாடாகும்.
இதுவரையான காலப்பகுதியில் நாட்டை நிர்வகித்த மூன்று அரசாங்கங்கள் ஏனைய புறக்காரணிகளைக் கூறி, அதனை ஒரு உபாயமாகப் பயன்படுத்தி மாகாணசபைத்தேர்தல்களை நடாத்தாமல் தாமதித்து வந்திருக்கின்றன.
பழைய முறையில் மாகாணசபைத்தேர்தலை நடாத்துவது குறித்து இதுவரை பாராளுமன்றத்தில் இரண்டு தனிநபர் பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதுகுறித்து உயர்நீதிமன்றத்திடமும் அபிப்பிராயம் கோரப்பட்டது. இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது இவ்விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்பதே முக்கியமான விடயமாக இருக்கிறது. அரசாங்கத்துக்குப் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் இருக்கிறது. எனவே மாகாணசபைத்தேர்தலை நடாத்துவதற்குத் தீர்மானிக்கும் பட்சத்தில், மூன்று மாதங்களுக்குள் அரசாங்கத்தினால் அவசியமான திருத்தங்களை மேற்கொள்ளமுடியும். ஆகவே இவ்விடயத்தில் அவசியமானது அரசியல் ரீதியிலான தீர்மானமேயாகும்.
தற்போது மாகாணசபைத்தேர்தல்கள் தவிர்ந்த ஏனைய தேர்தல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு அரசாங்கம் குழுவொன்றை நியமித்திருக்கிறது. எமது நாட்டைப் பொறுத்தமட்டில் தேர்தல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஏற்கனவே பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டு, அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆகவே இப்போது அவசியமாக இருப்பது மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவது குறித்த அரசாங்கத்தின் தீர்மானம் மாத்திரமேயாகும் என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM