இந்தியாவில் உள்ள தமிழ்நாடு- மேற்கு வங்காளம்- கேரளா -புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும், மேற்கு வங்காளத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும், கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 தொகுதிகளுக்கும், அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கும்.. ஏப்ரல் ஒன்பதாம் திகதி - ஏப்ரல் 23ஆம் திகதி - ஏப்ரல் 29 ஆம் திகதி என மூன்று கட்டங்களாக பொது தேர்தல் நடைபெற்றது.
அஸ்ஸாம்
இதில் அசாம் மாநிலத்தில் ஏப்ரல் ஒன்பதாம் திகதி என்று ஒரே கட்டமாக பொது தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 2,49,58,139 ஒரு வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமையை பெற்றிருந்தனர். இங்கு மொத்தம் 85.38% வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஏற்கனவே அறிவித்தபடி இங்கும் மே நான்காம் திகதியான இன்று வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே இங்கு நேரடி போட்டி நிலவுகிறது.
வாக்கு பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி தற்போதைய முதல்வர் ஹேமந்த விஷ்வா ஷர்மா தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை தக்க வைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கேரளம்
மொத்தம் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் ஒன்பதாம் திகதியன்று சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற்றது. வாக்காளர் தீவிர சிறப்பு சீர்திருத்த பணிக்குப் பிறகு இந்த மாநிலத்தில் 2,71,42,952 வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமையை பெற்றிருந்தனர். 79 .7 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனிடையே இங்கு பாரதிய ஜனதா கட்சியும் போட்டியிடுகிறது. அதனால் பல தொகுதிகளில் மும்முனைப் போட்டி ஏற்பட்டிருக்கிறது. இங்கும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது.
இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 77 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 92 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இங்கு பாரதிய ஜனதா கட்சி 98 இடங்களில் போட்டியிடுகிறது. இவர்களைத் தவிர சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர்.
வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின் படி இங்கு காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவித்திருக்கிறது.
மேற்கு வங்காளம்
இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி 152 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தலும், ஏப்ரல் 29 ஆம் திகதி மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெற்றது.
வாக்காளர் தீவிர சிறப்பு சீர்திருத்த பணிக்குப் பிறகு இந்த மாநிலத்தில் மொத்தம் 6,82,51,008 மக்கள் வாக்களிக்கும் உரிமையை பெற்றுள்ளனர். இரண்டு கட்ட தேர்தல்களையும் சேர்த்து இந்த மாநிலத்தில் மொத்தம் 92.9 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இங்கு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே பல தொகுதிகளில் கடும் போட்டி நிலவுகிறது. இருப்பினும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணியும், காங்கிரஸ் கட்சியும் களத்தில் குதித்து நான்கு முனை போட்டியை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாநிலத்தில் இந்த கட்சிகளை தவிர்த்து பகுஜன் சமாஜ் கட்சியும் போட்டியிடுகிறது.
இதில் கொல்கத்தாவில் உள்ள பாபனிப்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.
வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளின் படி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்கும் என்றும் சில ஊடகங்களும் , ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் என்றும் சில ஊடகங்களும் தெரிவித்துள்ளது. இங்கும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
புதுச்சேரி
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. மொத்தம் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் ஒன்பதாம் திகதி அன்று பொது தேர்தல் நடைபெற்றது.
வாக்காளர் சிறப்பு தீவிர சீர்திருத்த பணிக்குப் பிறகு இங்கு 9,51,311 மக்கள் வாக்களிக்கும் உரிமையை பெற்றுள்ளனர். இந்தத் தேர்தலில் மொத்தம் 89.87 சதவீத வாக்குகள் பதிவானதாகவும் கடந்த சட்டப்பேரவை தேர்தலை விட 6 சதவீத வாக்குகள் கூடுதலாக பதிவாகி இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இங்கு அகில இந்திய என் ஆர் காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என் ரங்கசாமி தலைமையிலான என் ஆர் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், பாரதிய ஜனதா கட்சி 10 தொகுதிகளிலும், அ திமுக இரண்டு தொகுதிகளிலும், இலட்சிய ஜனநாயக கட்சி இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
காங்கிரஸ் 21 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி நான்கு தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு தொகுதிகளிலும் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நான்கு தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இங்கு தேர்தலில் போட்டியிடுவதில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகளுக்கிடையே முழுமையான ஒருங்கிணைப்பு மற்றும் திட்டமிட்ட பேச்சுவார்த்தை வேட்பு மனு தாக்கலுக்குப் பிறகும் இழுபறி நிலை தொடர்ந்ததால்.. இந்திய கூட்டணியில் உள்ள கட்சிகள் அவர்களுக்கு எதிராகவே போட்டியிடுகிறார்கள்.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் இங்கு 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணியில் இணைந்துள்ள நேயம் மக்கள் கழகம் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இங்கு நாம் தமிழர் கட்சி முப்பது தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
தற்போது முதல்வராக இருக்கும் என் ரங்கசாமி தட்டஞ்சாவடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின் படி அகில இந்திய என் ஆர் காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்றும், புதிதாக களமிறங்கியுள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் நுழையும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த ஐந்து மாநிலங்களிலும் மொத்த 17. 84 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமையை பெற்றுள்ளனர். இதில் 15 கோடிக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளனர்.
மே நான்காம் திகதியான இன்று வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று மாலைக்குள் அனைத்து மாநிலத்திலும் மக்களின் தீர்ப்பு என்ன? என்பது தெரியவரும்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM