தமிழக சட்டமன்ற தேர்தல்: வாக்குகளை எண்ணும் பணி தொடக்கம்

04 May, 2026 | 08:40 AM
image

( இணையத்தள தமிழக செய்தியாளர் )

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணும் பணி 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் காலை 8 மணி அளவில் தொடங்கியது. முதலில் அஞ்சலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அதன் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை தொடங்குகிறது. காலை 9 மணியிலிருந்து அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் முன்னிலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

17 ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் திகதி அன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சியில் திமுக- காங்கிரஸ்- தேமுதிக- விடுதலை சிறுத்தைகள்- இந்திய கம்யூனிஸ்ட் -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - மதிமுக-  கொங்கு மக்கள் தேசிய கட்சி- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - மனிதநேய மக்கள் கட்சி - மனிதநேய ஜனநாயக கட்சி- முக்குலத்தோர் புலிப் படை-  எஸ்டிபிஐ கட்சி-  தமிழர் தேசம் கட்சி -ஆகியவை இடம்பெற்றிருக்கிறது. இதில் மதிமுக -கொங்கு மக்கள் தேசிய கட்சி -மனிதநேய மக்கள் கட்சி - மனிதநேய ஜனநாயக கட்சி- முக்குலத்தோர் புலிப் படை - எஸ் டி பி ஐ- தமிழர் தேசம் -  ஆகிய கட்சிகள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி கூட்டணியில் அதிமுக- பாரதிய ஜனதா - பாட்டாளி மக்கள் கட்சி-  அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - தமிழ் மாநில காங்கிரஸ்- இந்திய ஜனநாயக கட்சி- புரட்சி பாரதம் -புதிய நீதி கட்சி- தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் - சிங்க தமிழர் முன்னேற்ற கழகம் -தமிழ் மாநில பகுஜன் சமாஜ் -தென்னிந்திய பார்வர்ட் பிளாக் - ஆகிய கட்சிகள் போட்டியிட்டது. இதில் இந்திய ஜனநாயகக் கட்சி -புரட்சி பாரதம்-  புதிய நீதி கட்சி- சிங்க தமிழர் முன்னேற்ற கழகம் - தமிழ் மாநில பகுஜன் சமாஜ் - ஆகிய கட்சிகள் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலும், தமிழ் மாநில காங்கிரஸ் - தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் - தென்னிந்திய பார்வர்ட் பிளாக் -ஆகிய கட்சிகள் பாரதிய ஜனதாவின் தாமரை சின்னத்திலும் போட்டியிட்டது.

இந்தத் தேர்தலில் புதிதாக களமிறங்கிய நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 233 தொகுதிகளில் விசில் சின்னத்தில் போட்டியிட்டது. எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் திடீரென்று வாபஸ் பெற்றதால்... அங்கு சுயேட்சையாக டிவி பெட்டி சின்னத்தில் நின்ற கே. பிரேம்குமார் என்ற வேட்பாளருக்கு தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு அளித்தது.

நாம் தமிழர் கட்சி  234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகின்றது.  2016 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் தனித்து களம் கண்ட நாம் தமிழர் கட்சி கடந்த முறை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் 36 லட்சம் வாக்குகளை பெற்றதால்.. மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தை பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த முறை அக்கட்சியின் தலைவரான சீமான் முதல் முறையாக காரைக்குடி தொகுதியில் வேட்பாளராக களம் காண்கிறார்.

இந்த வாக்குகளைக் கொண்ட நான்கு முன்னணி அரசியல் கட்சிகளை கடந்து.. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சி 170 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 118 தொகுதிகளிலும், டொக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் 70 இடங்களிலும் போட்டியிடுகிறது.

மேலும் டொக்டர் ராமதாஸ் தலைமையிலான அய்யா பாட்டாளி மக்கள் கட்சி- சசிகலா தலைமையிலான அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் - பசும்பொன் மக்கள் தேசம் - வள்ளலார் முன்னேற்ற கழகம் -ஆகியவை கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. இதில் சசிகலா தலைமையிலான அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் 71 இடங்களிலும், அய்யா பாமக கட்சி 38 இடங்களிலும் , பசும்பொன் மக்கள் தேசம் இரண்டு இடங்களிலும், வள்ளலார் முன்னேற்ற கழகம் ஒரு இடங்களிலும் போட்டியிடுகிறது.

இதை கடந்து அனைத்து தொகுதிகளிலும் கணிசமான அளவில் சுயேச்சைகளும் போட்டியில் குதித்து இருக்கிறார்கள்.

இதனால் தமிழகம் முழுவதும் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு தீவிர சீர்திருத்தத்திற்கு பிறகு தமிழகத்தில் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமையை பெற்றிருந்தனர். இவர்களில் 85.1சதவீதத்தினர் வாக்களித்துள்ளனர். 4.88 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

வாக்குகள் எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டு இருக்கிறது. தமிழக காவல்துறையினரும், மத்திய ஆயுதப்படை பிரிவினரும் வாக்குப்பதிவு செய்யப்பட்ட இலத்திரனியல் இயந்திரம் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

வாக்குகளை எண்ணும் பணிக்காக இந்திய தேர்தல் ஆணையம் விதித்திருக்கும் புதிய விதிமுறையின் படி வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கி இருக்கிறது. காலை 8 மணி அளவில் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதில் தமிழகம் முழுவதும் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட தபால் வாக்குகள் பதிவாகி  இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள மொத்தம் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இலத்திரனியல் இயந்திரம் சென்னை லயோலா கல்லூரி-  அண்ணா பல்கலைக்கழக வளாகம் மற்றும் சென்னை ராணி மேரி  கல்லூரி என மூன்று இடங்களில் வைக்கப்பட்டிருந்தது. இங்கு வாக்கு எண்ணும் பணி திட்டமிட்டபடி எட்டு மணி அளவில் தொடங்கி இருக்கிறது. முதலில் தபால் வாக்குகளும் எட்டு முப்பது மணிக்கு பிறகு இலத்திரனியல் இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த பிறகு அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகள் அங்குள்ள டிஜிட்டல் திரையில் காட்சிப்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருக்கிறது.

சென்னையை பொறுத்தவரை சென்னை கொளத்தூர் தொகுதி மு க ஸ்டாலின் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். சென்னை மயிலாப்பூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் முன்னாள் தெலுங்கானா மாநில ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுகிறார். சென்னையில் இந்த நான்கு நட்சத்திர தொகுதிகளிலும் பல சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக மு.க ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 19 வாக்கு எண்ணிக்கை மேசைகள் அமைக்கப்பட்டு,  21 சுற்றுகளும் , விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் 18 வாக்கு எண்ணிக்கை மேசைகள் அமைக்கப்பட்டு 22 சுற்றுகளும், உதயநிதி போட்டியிடும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில், 17 வாக்கு எண்ணிக்கை மேசைகள் அமைக்கப்பட்டு 20 சுற்றுகளும் , தமிழிசை சௌந்தர்ராஜன் போட்டியிடும் மயிலாப்பூர் தொகுதியில் 19 வாக்கு எண்ணிக்கை மேசைகள் அமைக்கப்பட்டு 20 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

சென்னை தொகுதிகளை பொருத்தவரை வேளச்சேரி மற்றும் விருகம்பாக்கம் ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டும் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவடைய தோராயமாக மாலை 5 மணி ஆகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மாவட்டத்தில் மட்டும் 83.56 வாக்குகள் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் ,ஊடக பிரதிநிதிகளும் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அடையாள அட்டை இல்லாத எவரும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தேர்தல் பார்வையாளர்களை தவிர வேறு எவரும் வாக்கு எண்ணும் கூடத்திற்குள் செல்போன்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.‌

ஒவ்வொரு மணி நேரத்திலும் வாக்குகளின் எண்ணிக்கை மற்றும் அரசியல் கட்சிகள் முன்னிலை ஆகிய விபரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் வாக்குகள் எண்ணும் மையங்கள் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பரபரப்பான நிலை நீடிப்பதால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்குப்பதிவிற்கு பிறகு வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகள் அனைத்தும் அசலானதா? இல்லையா? என்பதை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தருணத்தில் வெளியாகும் முன்னிலை முடிவுகளிலிருந்து உறுதிபட தெரியவரும் என்றும்... ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 என்ற எண்ணிக்கையை எந்த கூட்டணி வெல்லும் என்பதை காண... மக்கள் அதீத ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்த...

2026-05-12 16:25:06
news-image

தமிழ்நாட்டில் 717 மதுபானசாலைகளை மூடுவதற்கு முதலமைச்சர்...

2026-05-12 15:14:30
news-image

ஈரானுடன் போர் நிறுத்தம் ஆபத்தில் உள்ளது...

2026-05-12 06:38:51
news-image

“காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” -...

2026-05-11 17:25:57
news-image

பிளவுபட்ட அதிமுக..!?

2026-05-11 17:11:53
news-image

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்...

2026-05-11 16:52:52
news-image

அமெரிக்காவின் சமாதானத் திட்டத்தை நிராகரித்தது ஈரான்:...

2026-05-11 15:44:04
news-image

ஹண்டா வைரஸ் : கப்பலில் இருந்து...

2026-05-11 15:24:16
news-image

தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கு மிக உயர்ந்த...

2026-05-11 13:25:32
news-image

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா...

2026-05-11 13:33:40
news-image

சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற எதிர்க்கட்சித் தலைவர்...

2026-05-11 12:08:45
news-image

காத்மண்டு விமான நிலையத்தில் டர்கிஷ் ஏர்லைன்ஸ்...

2026-05-11 11:18:11