எதிர் வரும் இரண்டு ஆண்டுகளுக்கு உப்பு இறக்குமதி செய்வதை தவிர்க்க தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளதாக தொழிற்துறை மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார் மாந்தை பிரதேசத்தில் உப்பு தொழிற்சாலை அபிவிருத்தி நடவடிக்கை தொடர்பாக ஆராய்ந்து பார்க்கும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.

அங்கு உரையயாற்றிய அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

“யுத்த காலத்தில் மூடப்பட்ட ஆனையிறவு மற்றும் மன்னார் உப்பு உற்பத்தி தொழிற்சாலைகளை மீள் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளேன்.

உள்நாட்டு உப்பு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் உப்பு இறக்குமதியை முற்றாக எம்மால் நிறுத்திவிட முடியும். 

இந்த ஆண்டில் மட்டும் மன்னார் உப்பு உற்பத்தி தொழிற்சாலையில் 6000 டொன் உப்பும், ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலையில் 5000 டொன் உப்பும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

குறித்த உப்பு தொழிற்சாலைகளினூடான உள்நாட்டு உப்பு உற்பத்தியை அதிகரிப்பதனூடாக இந் நாட்டு மக்களின் நுகர்வுக்கும் மீன் பிடியில் ஈடுபடுபவர்களின் நுகர்வுக்கும் தேவையான உப்பை நாமே வழங்க முடியும்.  

மேலும் கடந்த வருடங்களை விட இவ் வருடம் குறித்த உப்பு தொழிற்சாலைகளின் மூலம் வருமானம் எட்டப்பட்டுள்ளதாகவும்” தெரிவித்தார்.