அரசியலில் குதிப்பேன் என்று வெளிப்படையாக அறிவித்து பரபரப்பு ஏற்படுத்திய நடிகர் கமலஹாசன், ரஜினி அரசியலில் இறங்கினால் அவருக்குத் தோள்கொடுக்கத் தயார் என்று மற்றொரு பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசியலில் அண்மைக்காலமாக கமலஹாசனின் கருத்துக்களும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், தனிக்கட்சி ஆரம்பிக்கத் திட்டமிட்டிருப்பதாக நடிகர் கமலஹாசன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ரஜினிகாந்த் அரசியலில் இறங்கினால் அதைத் தான் வரவேற்பதாகவும் அவருடன் இணைந்து அரசியலில் ஈடுபடத் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய கமலஹாசன், “எனக்கு ஒரு சமிக்ஞை கொடுங்கள். ரஜினி அரசியலில் இறங்கினால் நாம் பேச்சுவார்த்தை நடத்தலாம். நான் அவருடன் இணைந்துகொள்ள மாட்டேனா? திரைத் துறையில் நாம் இருவரும் போட்டியாளர்களாக இருந்தாலும், முக்கியமான விடயங்களில் இணைந்து பேசி முடிவெடுக்கலாம்” என்று வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்.

ரஜினியைப் போல அல்லாமல், அரசியலில் நுழைவது குறித்து கமலஹாசனின் திட்டங்கள் தெளிவாகவும் வெளிப்படையாகவும் உள்ளன. ‘பிக்பொஸ்’ வேலைகள் முடிந்த கையோடு தனிக் கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

“தீவிர அரசியலில் இறங்க நான் தயார். ஆனால், நான் அரசியலில் இறங்கவேண்டுமா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். அவர்களிடம் இருந்து சரியான சமிக்ஞை கிடைத்தால் எனக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை” என்று கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் அந்தரத்தில் நிற்கும் நிலையில், அவருடன் இணையத் தயார் என்று கமல் கூறியிருப்பது இருவரது இரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.