கொழும்பில் களைகட்டும் “கம்பன் விழா - 2026"

01 May, 2026 | 05:47 PM
image

(மா.உஷாநந்தினி)

அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா 2026 நிகழ்வு ஏப்ரல் 30ஆம் திகதி வியாழக்கிழமை மாலை கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் ஆரம்பமானது.

'கம்பன் புகழ்" விருதினை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பெற்றுக்கொள்ளவுள்ள சிறப்புக் கம்பன் விழா இம்முறை நடைபெற்று வருகிறது.

விழாவின் முதல் அங்கமாக, கம்பன் திருவுருவப்படமும் இராமர் திருவுருவச் சிலையும், ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஷ்மி திருக்கோவிலிலிருந்து ஊர்வலமாக மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மண்டப மேடையில் நிறுத்தப்பட்டு தீபாராதனை வழிபாடு நடைபெற்றது.

இலங்கை - இந்திய இலக்கியவாதிகள், கலைஞர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இக்கம்பன் விழாவினை, அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவி அபிராமி கைலாசபிள்ளை மங்கல விளக்கேற்றி தொடக்கிவைக்க, 'இசைவேந்தன்" மு.தயாபரன் கடவுள் வாழ்த்துப் பாடினார்.

அகில இலங்கை கம்பன் கழகத்தை தொடங்குவதற்கு வழிகாட்டி மறைந்த ஆளுமைகளான பேராசிரியர் இரா.இராதாகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர் க.சிவராமலிங்கம் ஆகியோரது  நூற்றாண்டு விழா சாதனை,  இதன்போது நினைவுகூரப்பட்டது.

கொழும்பு கம்பன் கழகத்தின் பெருந்தலைவரும் முன்னாள் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியுமான  ஜெ. விஸ்வநாதன் தலைமையுரை ஆற்றினார்.

'மனதை தூய்மைப்படுத்தும் தமிழ் இலக்கியங்களில் கம்ப இராமாயணம் முதலிடத்தைப் பெறுகிறது. அதை மிஞ்சிய ஒரு நூலை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாது. இராம - இராவண யுத்தம் எதைக் கூறுகிறதென்றால், தர்மம் உனது பக்கம் இருந்தால், இயற்கை உனது பலத்தை பெருக்கி, வெற்றியைத் தேடித் தரும். இதுவே இராமாயணம் நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம்.

இங்கே பெற்றோர்கள் சிறு பிள்ளைகளையும் அழைத்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். அவர்கள் அந்தப் பிள்ளைகளுக்கு நல்லதொரு அத்திவாரத்தை இடுகிறார்கள். கம்பராமாயணத்தை சிறு வயதிலேயே தனது பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தும் ஆர்வத்துடன் வந்துள்ளனர். பிள்ளைகளின் கைகளில் கம்பராமாயணம் என்கிற இந்த அரிய பொக்கிஷத்தை ஒப்படைக்கவேண்டிய பொறுப்பு பெற்றோர்களையே சாரும்" என்று தெரிவித்தார்.

அடுத்து, கொழும்பு கம்பன் கழகத் தலைவர்  ஈ.கணேஷ் தெய்வநாயகம் தொடக்கவுரை ஆற்றினார்.

அதன் பின், கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் எழுதிய “இராம காதை” வசன நடை நூலின் முதலாம் பாகம் வெளியிடப்பட்டது. நூலின் முதல் பிரதியை தமிழ்நாட்டின் கோவிலூர் மடாலயத்தின் நாராயண ஞானதேசிக சுவாமிகளிடமிருந்து இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் பெற்றுக்கொண்டார்.

மேலும் இந்த நிகழ்வில் ஐந்து ஆளுமைகளுக்கு அறக்கட்டளை விருதுகளும் பொற்கிழிகளும் வழங்கப்பட்டன. பேராதனை பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் வ. மகேஸ்வரனுக்கு 'நாவலர் விருது", மிருதங்க வித்துவான் வை. வேனிலானுக்கு 'விபுலானந்தர் விருது", யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதி பேராசிரியர் நா.  பிரதீபராஜாவுக்கு 'நுழைபுலம் ஆய்வு விருது", மூத்த கவிஞர் நாக. சிவசிதம்பரத்துக்கு 'மகரந்தச்சிறகு விருது", ஊடகவியலாளர் நிசாம்தீன் ஹஷாம் முஹம்மதுக்கு 'ஏற்றமிகு இளைஞர் விருது" வழங்கப்பட்டது.

விருதாளர்களுக்கு கழகப் பெருந்தலைவர் ஜெ. விஸ்வநாதன்  விருதுக் கேடயங்களையும் ஐஸ்வர்யலக்ஷ்மி ஆலய அறங்காவலர் சபைத் தலைவி மாலா சபாரட்ணம் பொற்கிழிகளையும் வழங்கி கௌரவித்ததைத் தொடர்ந்து, கம்பன் விழாவின் ஆரம்ப நாள் மேடையை அலங்கரித்த  விருந்தினர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

எழிலுரைக்கு முன்னிலை வகித்த மலேசிய முன்னாள் அமைச்சர் 'டத்தோஸ்ரீ" எம்.சரவணனின் உரையைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்த முனைவர் பாரதி கிருஷ்ணகுமார் “தாரணிக் கொடையாளன் கம்பன்” என்ற தலைப்பில் எழிலுரை ஆற்றினார்.

உரையின் தொடக்கத்திலேயே அரங்கத்தில் சிரிப்பலை! சபையோரை விழித்து எளிய வினாக்களை தொடுத்து, பதில்களை வாங்கி, எழிலுரையைத் தொடர்ந்தவர், 'மொழியே மனிதர்களுக்கு கிடைத்த வரம். மொழியே மனிதர்களுக்கு கிடைத்த கொடை. விலங்கையும் மனிதனையும் வேறுபடுத்துவது மொழி. விலங்குகளுக்கு குரல் கொடுத்த இயற்கை, அவற்றுக்கு மொழி தரவில்லை. நமக்குத்தான் மொழி. நமக்கு மொழி இருப்பதாலேதான் நாம் எல்லாவற்றுக்கும் பெயர் சூட்டி வைத்துக்கொண்டோம். மொழி என்ற ஒன்று இல்லாவிட்டால் நமக்கு பெயரே இருக்காது. மொழி என்கிற ஒன்று இல்லாவிட்டால், நமக்கு புத்தகங்கள் கிடையாது, எழுத்து கிடையாது, இலக்கியம் கிடையாது, நாகரிகம் கிடையாது, பண்பாடு, கலாசாரம் எதுவும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் மொழிதான் உடம்பினுள்ளே ஓடிக்கொண்டிருக்கிற அசலாத குருதி. இந்த குருதி ஓடுவதால்தான் மனிதன் இயங்குகிறான், சிந்திக்கிறான், பேசுகிறான்" என்று தொடங்கியவர், அமிழ்தினும் இனிய தாய்மொழியான தமிழ்மொழி, இந்த உலகில் வேறு எந்த மொழிக்கும் இணையானது இல்லை என்று சொல்லுமளவுக்கு தன் காப்பியத்தால் கொடை கொடுத்து உயர்த்திய பெருமைக்குரியவன் கவிச்சக்கரவர்த்தி கம்பன்" என்றார்.  

'வடமொழியில் எழுதப்பட்ட ஒரு காப்பியத்தை தமிழில் மாற்றி எழுதியது மட்டும் கம்பன் செய்த வேலை அல்ல. கம்பன் செய்தது மொழியாக்கம். வடமொழியிலிருந்து தான் பெற்ற ஒரு காப்பியத்தை, அந்த காப்பியத்திலிருந்த குறைகளை நீக்கி, அந்த காப்பியத்தில் இருந்த இடைவெளிகளை இட்டு நிரப்பி, அதில் இருந்த குணக்கேடுகளை அகற்றி, அந்த காப்பியத்துக்கு புதிய அழகும் மெருகும் கற்பனையும் சேர்த்து நமக்கு கொடையாகத் தந்தவர் கம்பர்.

'வில்லின் புகழை பாடவந்த காப்பியத்தின் வழியாக, கம்பன் நிலைநிறுத்தியது, சொல்லின் புகழ். வில்லை தடுத்து நிறுத்திவிட முடியும். ஆனால், சொல்லை தடுத்து நிறுத்த முடியாது. வில் பட்ட காயம் கூட ஆறிவிடும். ஆனால், சொல் பட்ட காயம் ஆறாது. வில்லை விட வலிமையுடையது சொல். வில்லுக்கு 'வில்" என்று பெயர் வைத்ததே சொல்தான். வில் எவ்வளவு உயர்ந்தது என்று பாடிய கம்பன், வில்லானது சொல்லுக்கு இணையானது அல்ல, சொல் எப்படி வில்லை விட உயர்ந்தது என்றும் பாடியிருக்கிறான்.

'காப்பியத்துக்கு கொடையளித்த கம்பனின் உயரத்தை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். அந்த காப்பியத்தில் இராமன், சீதை, இலக்குவணன் உட்பட யார் உறங்கவேண்டும், யார் விழித்திருக்கவேண்டும், யார் தனித்திருக்கவேண்டும், யார் என்ன பேசவேண்டும் என்று அனைத்து கதாபாத்திரங்களையும் இயக்கிய மூலவர், கம்பன்.

'பகை கொள்ளேல்" என்பதே கம்பன் சொல்கிற தத்துவம் என இராமாயணத்தின் ஓரிரு காட்சிகளை விபரித்தார். 'மேன்மக்களின் பொய், துணை நிற்கும், கீழ்மக்களின் உண்மையும் தீமையை உண்டாக்கும்" என காப்பியக் கதைகளின் வாயிலாக பாரதி கிருஷ்ணகுமார் எடுத்துரைத்த கருத்தை கரவொலியோடு சபை ஒருமனதாக வரவேற்றதைக் காண முடிந்தது.

எழிலுரையைத் தொடர்ந்து நாட்டிய அரங்கு நடைபெற்றது. 'இராம காதை" நாட்டிய நாடக நிகழ்வுகளில் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் ஆகிய ஆறு கம்பராமாயண காண்டங்களை எடுத்துக்காட்டும் வகையிலான நடனங்கள் மேடையேற்றப்பட்டதோடு, நாட்டியக் குழுவினரின் நடன ஆசிரியர்களான ஷாலினி வாகீஸ்வரன், சுகன்யா நித்தியானந்தன், லக்ஷ்மி ஸ்ரீஹரன், பவானி குகப்பிரியா, பாரதி சிவயோகநாதன், வாசுகி ஜெகதீஸ்வரன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

நான்கு நாள் நிகழ்வுகள்

தொடர்ச்சியாக நான்கு நாட்கள் (ஏப்ரல் 30, மே 1,2,3 ஆகிய திகதிகளில்) நடத்தப்படும் இக்கம்பன் விழாவில் காலை மற்றும் மாலை என இரு நேர நிகழ்வுகளாக எழிலுரை அரங்கு, நாட்டிய அரங்கு, மாணவர் அரங்கம், கருத்தரங்கம், கவிப்பொழிவு, பட்டிமண்டபம், சொற்போர், வழக்காடு மன்றம், சிந்தனை அரங்கம், நாடக அரங்கம் என்பவை நடைபெறுகின்றன.

கலாநிதி ஆறு.திருமுருகன், வண.ராகுல தேரர், ஸ்ரீலங்கா இஸ்லாமிய கலை இலக்கிய மன்றத் தலைவர் அலி அக்பர், ஸ்ரீ பிரசாந்தன், த.ஜெயசீலன்  முதலான இலங்கை இலக்கியவாதிகளுடன் இந்தியாவிலிருந்து வருகைதந்த பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, பேராசிரியர் எம்.இராமச்சந்திரன், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், வழக்கறிஞர் சுமதி, முனைவர் பர்வீன் சுல்தானா, டாக்டர் பிரியா ராமச்சந்திரன், 'மரபின் மைந்தன்" முத்தையா, கவிதா இராமானுஜம், க.குமாரதாசன் (அவுஸ்திரேலியா) போன்ற பலர் அரங்க நிகழ்வுகளில் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதிக்கு விருது

கம்பன் விழா மே 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  நிறைவடைகிறது. நிறைவு நாளன்று, மாலை 5.30 மணி  நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, 'கம்பன் புகழ்" விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமை முக்கிய அம்சமாகிறது.

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்க்கரை நோய்க்கு அப்பால்: Diabetasol தயாரிப்பின்...

2026-05-11 09:32:54
news-image

சாஹிரா கல்லூரியின் 90வது ஆண்டு விழா

2026-05-10 16:40:01
news-image

அன்னையர் தினத்தில் படைப்பாக்க முயற்சி ;...

2026-05-10 09:27:29
news-image

திருமலை இ.மதன் எமுதிய தாய்ப்பசு சிறுகதை...

2026-05-10 09:26:58
news-image

வத்துகாமம்  ஶ்ரீ முத்துமாரி அம்பாளுக்கு வைகாசி...

2026-05-10 08:56:34
news-image

"வரலாற்றின் குரல்" நூல் வெளியீடு

2026-05-09 20:29:02
news-image

அட்டனில் நான்கு மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்...

2026-05-09 21:04:33
news-image

பெண்களின் நீதிக்கான தேடல் கண்காட்சி திருகோணமலையில்.!

2026-05-08 15:25:59
news-image

மண்முனைப் பற்றில் நடைபெற்ற ''கவிதைகளோடு பேசுவோம்''...

2026-05-08 14:37:50
news-image

ஸ்ரீ பேச்சி அம்மன் கும்பாபிஷேகம்: கொழும்பில்...

2026-05-07 17:32:56
news-image

வெள்ளவத்தையில் "தமிழர் பண்பாடும் பனைவளமும் 2026"...

2026-05-06 17:10:28
news-image

சுவிசில் சிறப்பாக நினைவுகூரப்பட்ட மாமனிதர் தேனிசை...

2026-05-05 10:03:02