வடகொரியா இன்று ஏவிய ஏவுகணை, ஹொய்கடோ நகருக்கு சுமார் இரண்டாயிரம் கிலோ மீற்றர் தொலைவில் பசிபிக்கில் விழுந்து வெடித்ததால் அப்பிராந்தியத்தில் பதற்ற நிலை தோன்றியுள்ளது.

ஜப்பானை மூழ்கடிப்போம் என்ற அச்சுறுத்தல் வெளியான சிறிது நேரத்திலேயே, வடகொரியா இந்த ஏவுகணையை ஏவியுள்ளது.

குறித்த ஏவுகணை, ஏவப்பட்ட இடத்தில் இருந்து சுமார் பத்தொன்பது நிமிடங்களுக்குள் 3,700 கிலோ மீற்றர் தாண்டி பசிபிக்கில் விழுந்தது.

ஏவுகணை ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே அதுபற்றி அறிந்துகொண்ட ஜப்பான், தனது வடபகுதி மக்களுக்கு தொலைக்காட்சிகள், கையடக்கத் தொலைபேசிகள் மூலம் முன்னெச்சரிக்கை விடுத்தது. தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்குப் பெயருமாறும் மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இச்சம்பவம் குறித்துப் பேசிய அமெரிக்க வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், வடகொரியா மீது மேலும் கடுமையான பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன், வடகொரியாவின் தொடர்ச்சியான அத்துமீறல்களால் அந்நாடு உலக நாடுகளால் ஒதுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படும் சூழல் ஏற்படும் என்றும் கூறினார்.