தமிழ்த்தேசிய கட்சிகளிடையே ஒற்றுமை மிகவும் அவசியமானது என்று இலங்கை வந்திருந்த இந்தியாவின் துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் வலியுறுத்தியிருக்கின்றார்.
கடந்த 19ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய துணை ஜனாதிபதி, அன்றைய தினம் தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இந்த சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ்த் தேசிய பேரவையின் சார்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இந்த சந்திப்பையடுத்து, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் ஆகியோரின் கைகளைப் பற்றிய இந்திய துணை ஜனாதிபதி, இலங்கையில் தமிழ்க் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டன. தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிடையே ஒற்றுமை மிகவும் அவசியம் என்று எடுத்துக் கூறியிருக்கின்றார். அவர் இவ்வாறு ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்திய போது, இரு தலைவர்களும் சிரித்தவாறு நின்றிருக்கின்றனர்.
இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன், தமிழகம் திருப்பூரைச் சேர்ந்தவராவார். அவர் பாரதிய ஜனதாக் கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக இரு தடவைகள் தெரிவானவர். இதனைவிட மூன்று வருடங்கள் வரையில் தமிழகத்தின் பாரதிய ஜனதாக் கட்சி மாநிலத் தலைவராகவும் பணியாற்றியவர்.
ஈழத் தமிழர் விவகாரத்தை நன்கு அறிந்தவர். அதில் பரிச்சயமானவர். இலங்கையில், குறிப்பாக வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே பிளவுகள், பிணக்குகள் ஏற்பட்டுள்ளமை பெரும் பாதிப்பை ஏற்படுகின்றது என்ற விடயத்தை நன்கு அறிந்தமையினாலேயே தமிழரசுக் கட்சியின் இரு தலைவர்களின் கைகளைப் பற்றி ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தியிருக்கின்றார்.
ஏற்கனவே இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் மத்தியில் ஒற்றுமை நிலவ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.
கடந்த வருடமும் அதற்கு முன்னைய தடவையும் இலங்கைக்கு அவர் விஜயம் செய்தபோது, தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது இந்த ஒற்றுமையின் அவசியத்தை அவர் எடுத்துக் கூறியிருக்கின்றார்.
தற்போது மீண்டும் இந்தியாவின் துணை ஜனாதிபதியான சி.பி. இராதாகிருஷ்ணன், இந்த விடயத்தை எடுத்துக் கூறியிருக்கின்றார்.
உண்மையிலேயே வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மத்தியில் ஒற்றுமை நிலவுவதற்கு பதிலாக வேற்றுமையே நிலவி வருகின்றது.
தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மத்தியிலேயே போட்டியும் பொறாமையும் நீடித்து வருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் பலம்பெற்றிருந்த காலப் பகுதியில் 2001ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ்., அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகளை உள்ளடக்கி இந்தக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
பிளவுபட்டிருந்த தமிழ்த் தேசியக் கட்சிகள் இவ்வாறு ஒன்றிணைக்கப்பட்டு கூட்டமைப்பாக பரிணமித்ததையடுத்து, தமிழ் மக்களின் பெரும்பான்மையான ஆதரவு அந்தக் கூட்டமைப்புக்கு கிடைத்திருந்தது. 2001ஆம் ஆண்டு, 2004ஆம் ஆண்டு உட்பட நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களின் போது பெரும்பான்மையான உறுப்பினர்களை இந்தக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கிலிருந்து பெற்றிருந்தது.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிளவுகளை சந்திக்க ஆரம்பித்தது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் கூட்டமைப்பிலிருந்து விலகியது. அதன் பின்னர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ். அதிலிருந்து விலகியது. இந்த நிலையில் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளொட் அமைப்பு கூட்டமைப்பில் இணைந்திருந்தது.
2022ஆம் ஆண்டளவில் உள்ளூராட்சி தேர்தல் அறிவிப்பையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்த தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஆகியவற்றிலிருந்து தமிழரசுக் கட்சியைத் தவிர ஏனைய இரு கட்சிகளும் விலகியிருந்தன. உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என்று தீர்மானித்ததையடுத்தே ஏனைய இரு கட்சிகளும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி புதிய கூட்டணியை அமைத்தன.
அதனடிப்படையிலேயே தற்போது ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதில் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்., சமத்துவக் கட்சி, ஜனநாயகப்போராளிகள் கட்சி என்பன உள்ளடங்கியுள்ளன. இலங்கைத் தமிழரசுக் கட்சி தனித்து செயற்பட்டு வருகின்றது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் தேசியப் பேரவை எனும் அமைப்பை உருவாக்கியுள்ளன. தற்போது தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதானக் கட்சிகள் மூன்று பிரதான பிரிவுகளாகப் பிரிந்து செயற்பட்டு வருகின்றன.
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் தலைவர்களிடையே முரண்பாடும் பிளவு நிலையும் நீடித்து வருகின்றது. தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தை தெரிவு செய்யும் விடயத்தில் ஏற்பட்ட இழுபறி நிலைமை இன்று கட்சியை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது.
தமிழரசுக் கட்சியின் செயலாளர் சுமந்திரன் அணியினர் ஒரு தரப்பாகவும், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தலைமையிலான தரப்பினர் மற்றொரு குழுவாகவும் செயற்பட்டு வருகின்றனர். இரு தரப்புக்கும் இடையிலான போட்டா போட்டி நிலைமை கட்சியின் முன்னேற்றத்துக்கு தடையாக இருந்து வருகின்றது.
இரு தரப்பினரையும் இணக்கப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியைத் தழுவியிருக்கின்றன. இவ்வாறான ஒரு நிலையில்தான் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் ஆகியோரது கரங்களைப் பிடித்து ஒற்றுமைப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கின்றார்.
தற்போதைய நிலையில் மூன்று பிரதான பிரிவுகளாக செயற்படும் தமிழ்த் தேசியக் கட்சிகள், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்திலாவது ஒன்றிணைந்து தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடிய தீர்வொன்றை தயாரிப்பதற்கு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
இதற்கான முயற்சியில் இலங்கையிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகமும் ஈடுபட்டிருந்தது. பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களை தூதரகத்தில் சந்திக்க வைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அந்த முயற்சி கைகூடியிருக்கவில்லை.
அதன் பின்னர் அரசியல் தீர்வு விடயத்தில் பொதுவான இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு தமிழ் சட்டத்தரணிகள் பேரவை நடவடிக்கை எடுத்திருந்தது.
பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி சட்டத்தரணிகள் பேரவையால் முதலாவது கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய பேரவை, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி ஆகியவற்றின் தலைவர்கள் மத்தியில் அரசியல் தீர்வு விடயத்தில் ஓர் இணக்கப்பாட்டை எட்டுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.
இம்மாதம் 09ஆம் திகதி இரண்டாவது கூட்டம் நடத்தப்பட்டது. அதிலும் அரசியல் தீர்வு குறித்து ஆராய்வதற்கு 06 பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமிப்பதற்கும் அதில் கட்சிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்குவதற்கும் இணக்கம் காணப்பட்டது.
ஆனால், தமிழ்த் தேசிய பேரவையினால் கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி நடத்தப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கமைய அரசியலமைப்பை குறித்து ஆராய 28 பேரடங்கிய குழுவொன்று தற்போது நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த அறிவிப்புக்கு தமிழரசுக்கட்சி எதிர்ப்பு வெளி யிட்டிருக்கின்றது. அதனால் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினது முயற்சி தோல்வியடையும் நிலைமை உருவாகியிருக்கின்றது.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மத்தியில் முரண்பாடுகள் நீடித்து வருகின்றமை தமிழ் மக்களின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. இதனால்தான் இந்தியத் தலைவர்கள் கூட ஒற்றுமையை வலியுறுத்தும் நிலைமை நீடித்து வருகின்றது. எனவே இனியாவது இந்த விடயத்தில் தமிழ்த் தேசியத் தலைமைகள் சிந்திக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM