தலவாக்கலை பகுதியில் வேன் மோதி ஒருவர் பலியான சம்பவத்துடன் தொடர்புடைய தலைமறைவான வேன் சாரதியை நேற்று இரவு தலவாக்கலை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

லிந்துலை நகரசபைக்கு அருகாமையில் நேற்று மாலை மஞ்சள் கோட்டினை கடக்க முயற்சித்தவர் மீது வேன் மோதியதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் எனவும் விபத்தை ஏற்படுத்திய வேன் சாரதி தலைமறைவாகிவிட்டார் எனவும் தமக்கு தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் லிந்துலை கூம்மூட் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய சூசை சந்தனம்  என பொலிஸாரினால் இனங் காணப்பட்டுள்ளார். 

தப்பிச் சென்ற வேன் சாரதியை மடக்கிப்பிடிப்பதற்காக பொலிஸார் பல முயற்சிகளை மேற்கொண்டதன் விளைவாகவே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை இன்று நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்த பொலஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.