சனிக் கிரகத்தை ஆராயவென அனுப்பப்பட்ட ‘காசினி’ விண்கலம் தனது பயணத்தின் இறுதிக்கட்டத்தை நாளை ஆரம்பிக்கிறது.

அமெரிக்காவின் நாஸா, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிலையம் மற்றும் இத்தாலிய விண்வெளி ஆய்வு நிலையம் என்பன கூட்டாக இணைந்து சனிக் கிரகத்தை ஆராயும் முயற்சியில் இறங்கியது.

இவற்றின் நிதிப் பங்களிப்புடன் ‘காசினி-ஹியூஜென்ஸ்’ என்ற இந்த விண்கலம், 1997ஆம் ஆண்டு ஏவப்பட்டது. 2004ஆம் ஆண்டு சனிக் கிரகத்தின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்த காசினி, அதுவரை சனிக் கிரகம் பற்றி உலகம் அறிந்திராத பல தகவல்களை அனுப்பத் தொடங்கியது.

சனியின் நிலவுகளில் ஒன்றான ‘டைட்டனி’ல் திரவ நிலை மீதேன் கடல்கள் இருப்பதையும், மற்றொரு நிலவான ‘என்சிலாடஸி’ன் நிலப்பரப்பிற்குக் கீழே உள்ள பிரமாண்ட கடல்கள் இருப்பதையும் காசினியே கண்டுபிடித்தது.

சனியின் நிலவுகளை ஆராய்ந்த காசினி, நாளை (15) சனிக் கிரகத்தின் மேற்பரப்பினுள் நுழையும் தனது பயணத்தின் இறுதிக் கட்டப் பணியை ஆரம்பிக்கவுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை டைட்டனை கடைசி முறையாக ஆராய்ந்த காசினி, அதன் புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்களை அனுப்பி வைத்தது. இதனை விஞ்ஞானிகள், ‘காசினியின் கடைசி முத்தம்’ என்று வர்ணித்துள்ளனர்.

காசினி கடைசியாக அனுப்பிய டைட்டனின் படம்

நாளை மிகச் சரியாக இலங்கை நேரப்படி பிற்பகல் 2.07 மணிக்கு காசினி தனது இறுதி இலக்கை நோக்கிப் பயணிக்கவுள்ளது. மாலை 5.23 மணிக்கு சனியின் மேற்பரப்பை ஊடறுக்கும். அத்துடன் காசினிக்கும் உலகுக்குமான தொடர்பு துண்டிக்கப்படும். 

சனிக்கும் பூமிக்கும் இடையில் உள்ள 1.4 பில்லியன் கிலோ மீற்றர் இடைவெளியால், இந்த நிகழ்வு சனிக் கிரகத்தில் சுமார் 83 நிமிடங்களுக்கு முன்னரே நடைபெற்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

என்றாலும், என்றோ ஒரு நாள் காசினி விண்கலம் அழியும் வரை. விண்கலத்தினுள் உள்ள பன்னிரண்டு தொடர்பு சாதனங்களும் இயங்கும் என்பதால், அவற்றின் மூலம் சமிக்ஞைகளைப் பெறுவதற்கு விஞ்ஞானிகள் முயற்சி செய்யவுள்ளனர்.

சனிக் கிரகத்துக்கு நான்கு நிலவுகள் இருப்பதை பதினேழாம் நூற்றாண்டிலேயே கண்டறிந்து கூறியவர் இத்தாலிய வானியலாளரான ஜியோவானி காசினி. அதே காலப் பகுதியில், சனியைச் சுற்றி வளையங்கள் இருப்பதைக் கண்டறிந்தார் டச்சு கணித வல்லுனரான கிறிஸ்டியான் ஹியூஜென்ஸ். இவர்கள் நினைவாகவே இந்த விண்கலத்துக்கு காசினி-ஹியூஜென்ஸ் என்று பெயரிடப்பட்டது.