மனித நேயமிக்க ஆளுமை கே.பொன்னுத்துரையின் அகவை எழுபத்தைந்து....

21 Apr, 2026 | 11:21 AM
image

(இன்று 21.04.2026 திரு கே.பொன்னுத்துரை அவர்களது எழுபத்தைந்தாவது பிறந்த தினத்தை முன்னிட்டு எழுதப்பட்ட கட்டுரை)

- அருணாசலம் லெட்சுமணன்

நாவலப்பிட்டி, கதிரேசன் மத்திய கல்லூரியில் கற்றுக்கொண்டிருந்த காலம். பாடசாலை நடவடிக்கைகளோடு தொடர்புபடும் ஒருவரின் பெயரை தொடர்ந்து செவிமடுக்கக் கூடியதாக இருந்தது. அந்த பெயருக்கு சொந்தக்காரர் அண்ணன் பொன்னுத்துரை அவர்கள்தான்.  இது சின்ன கதிரேசன், பெரிய கதிரேசன் ஆகிய இரண்டு பாடசாலைகளிலுமே நிகழ்வதை அவதானித்திருக்கிறேன். நாவலப்பிட்டியில் இடம்பெறும் பொது செயற்பாடுகள், கலை நிகழ்வுகள், சொற்பொழிவுகள், ஆன்மீக உரைகள் போன்ற செயற்பாடுகளிலும் இப்பெயர் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கும். 

1994ஆம்  வருடம் க.பொ.த. சாதாரண தரம் சித்தியெய்திய நிலையில் 1995ஆம் வருடம் உயர்தரத்தில் கல்வி பயிலும் தருவாயாகவும் அமைந்திருந்தது. அதற்கு முன்னரே எம்மை சமூகம் என்ற ரீதியில் கலை, விளையாட்டு செயற்பாடுகளில் செயற்படத் தூண்டிய எங்கள் இராஜி சேர் (திரு.ஆர்.இராஜரட்ணம்) நடத்திய “கலைமகள் இரா பாடசாலை” எம்மை ஒரு வகையில் புடம் போட்டிருந்தது. அந்த அனுபவங்களின் வாயிலாக நான் வசிக்கும் தோட்டத்தில் “கல்லோயா இளைஞர் விளையாட்டுக் கழகம்” அமைக்கின்றோம். இதன் பின்னணியில் முழுமூச்சாக செயற்பட்ட நண்பர் ஆர்.சிவராஜாவின் (அமரர்) நினைவுகள் மறக்க முடியாதது. இது பற்றி வேறொரு பதிவு அவசியமாகிறது. மேற்படி கழகத்தின் வாயிலாக எங்கள் ஊரில் பணிகளை முன்னெடுக்கிறோம். இதற்கு முன்னரும் எங்கள் தோட்டத்தில் பல அமைப்புகள் இருந்திருக்கின்றன. 

1988 காலக்கட்டத்தை தொடர்ந்து தோட்டங்களில் செயற்பட்ட பல அமைப்புகள் செயலிழந்து போயின. மக்கள் விடுதலை முன்னணி பெருந்தோட்டங்களை கேடயமாக வைத்து போராட்ட நடவடிக்கைகளை முன்நகர்த்தினார்கள். வட கிழக்கு இயக்கங்கள் மலையக பிரதேசங்களுக்கு ஊடுருவிய செயற்பாடுகள் வேறு விதமான வியாக்கியானங்களை தோற்றுவித்தன. இக்காலக்கட்டங்களை கடந்த நிலையில்தான் விளையாட்டுக் கழகம் அமைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறோம். 

“கல்லோயா இளைஞர் விளையாட்டுக் கழகம்”  நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட முதலாவது தோட்டப் பிரதேச விளையாட்டுக் கழகமாக திகழ்ந்தது. இப்பிரதேசத்தில் பல விளையாட்டு அமைப்புகள் காணப்பட்டபோதிலும் அவற்றை பதிவு செய்து செயற்படுத்துவதற்கு ஆர்வம் செலுத்தாமல் இருந்தார்கள். இந்த அமைப்பை ஸ்தாபித்த நிலையில் இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை என்னிடமே சுமத்தினார்கள். அதற்கமைய இந்த நடவடிக்கைகளின் காரணமாக பிரதேச செயலகம், பிரதேச சபை ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் விளையாட்டு உபகரணங்கள் எமது அமைப்பிற்கும் கிடைத்தன. கிராம உத்தியோகத்தர் பிரிவு போட்டிகளிலும் எமது அமைப்பினருக்கு பங்கேற்கும் வாய்ப்பு கிட்டியது. இந்த வாய்ப்பினை ஏனைய தோட்டப்பகுதிகளுக்கும் பெற்றுக்கொடுக்கும் வகையில் அவர்களையும் வழிப்படுத்தினோம். இதன் காரணமாக இப்பிரதேச செயலகத்திற்குட்பட்ட தோட்டங்கள் தங்கள் அமைப்புகளையும் பதிவுக்கு உட்படுத்திக் கொண்டார்கள். இந்த அமைப்புசார் செயற்பாடுகள் ஊடாக பல சமூக ஆளுமைகளை அறிமுகப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு கிட்டியது.

1988களில் பெருந்தோட்டங்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அமைப்பார்ந்த நடவடிக்கைகள் ஸ்தம்பிதமாகியிருந்த நிலைமை தொடர்ந்தது. அந்நிலைமைகளின் தாக்கம் தொன்னூறுகளிலும் செல்வாக்கு செலுத்தின. நாவலப்பிட்டி பிரதேசத்தை பொருத்தவரையில் இந்து ஆலயங்களை மற்றும் அறநெறி பாடசாலைகளை ஒருங்கிணைக்கும் பணியில் மலையக ஆன்மீக கலை இலக்கிய மன்றத்தின் செயற்பாடுகளை மிக ஆர்வமாக முன்னெடுத்தார்கள். 

கே. பொன்னுத்துரை, அமைப்பின் தலைவர் ஏ. வைத்திலிங்கம், பொருளாளர் கே. சபாரட்ணம் ஆகியோர் இணைந்த உந்துதலில் மன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் அமைந்திருந்தன. இச்செயற்பாடுகள் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வுகளுக்கான பாலமாகவும் அமைந்திருந்தது. 

நாவலப்பிட்டி, கதிரேசன் கல்லூரியில் பி.கணபதிப்பிள்ளை அவர்கள் அதிபராக இருந்த காலம். பாடசாலை நாளொன்றில் பிற்பகல் வேளையில் தென்னிந்தியாவின் கலைத்துறை ஆளுமை கோமல் சுவாமி நாதன் வருகைத் தந்திருந்தார். அந்த ஆளுமையுடனான கலந்துரையாடல் தொடர்ந்தது. இப்பிரதேசத்தில் உள்ள கலை ஆர்வலர்கள் பலரும் வருகை தந்திருந்தார்கள். அச்சூழலில் அந்த நிகழ்வின் பெறுமதி பற்றி நான் பெரிதாக அறிந்திருக்கவில்லை. இருந்தபோதிலும் அண்ணன் பொன்னுத்துரை அவர்களை அன்றுதான் முதன் முதலாக சந்தித்தேன். பேசுவதற்கு வாய்ப்பு கிட்டவில்லை. அதற்கு அண்மைய நாட்களிலேயே நாவலப்பிட்டி வேல்ஸ் ஸ்டூடியாவில் வைத்து பொன்னையா அணணன், பொன்னுத்துரை அண்ணனை அறிமுகம் செய்து வைத்தார். அன்றிலிருந்து தொடங்கிய பழக்கம் மிக ஆரோக்கியமான வகையிலே தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.

1991ஆம் வருடம் மலையக ஆன்மீக கலை இலக்கிய மன்றம், நாவலப்பிட்டியில் “பாரதி விழா” நடத்தியமை பற்றியும் அதன் சிறப்பு ஏற்பாடுகள் தொடர்பாகவும் ஆர்வலர்கள் பேச கேட்டிருக்கின்றேன். 

நிகழ்வில் குறிஞ்சித் தென்னவன், மலைத்தம்பி, சு.முரளிதரன் ஆகிய கவிஞர்கள் பங்கேற்று சிறப்பித்தமை தொடர்பிலும் கேள்விப்பட்டிருக்கிறேன். அவ்வாறே இந்து கலாசார அமைச்சராக பீ.பீ.தேவராஜ், இந்து கலாசார அமைச்சராக பதவி வகித்தபோது நாவலப்பிட்டியில் பிரதேச தமிழ் சாகித்திய விழாவை ஆன்மிக கலை இலக்கிய மன்றம் முன்நின்று நடத்தியுள்ளது. அதன் செயற்பாடுகளின் மூலவராக கே.பொன்னுத்துரை அவர்களின் வகிபங்கு முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. அவ்வப்போது எழுத்தாளர்கள், கலைஞர்கள் சந்திப்பு என்ற வகையில் இத்துறை ஆர்வலர்களை திருப்திப்படுத்தும் வகையில் செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும். 

நாவலப்பிட்டியில் ஏதாவது தேவைகளுக்காக குறிப்பாக மருத்துவ தேவைகளுக்காக வெளியில் இருந்து வரும் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் பொன்னுத்துரை அண்ணனை சந்திக்காமல் செல்வதில்லை. ஏனெனில் அண்ணனுடைய வியாபார நிலையமும் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு எதிரே அமைந்திருந்தது. 

தனது கடைக்கு வருபவர்களை புன்சிரிப்போடு வரவேற்று வியாபாரம் நடத்தும் பக்குவம் அவரில் முன்மாதிரியானது. கடைக்கு வருகின்ற பலர் கடையில் பொருட்கள் வாங்க வருவதை விட ஜே.பி உறுதிப்படுத்தல் ஒப்பம் வாங்க வருபவர்கள்தான் அதிகம். அவ்வாறு ஒப்பம் வாங்க வருபவர்களை அமர வைப்பார். ஆவணங்களை முழுமையாக வாசித்து, குறைபாடுகள் இருந்தால் அதை நிவர்த்தி செய்து, சான்றுப்படுத்தி ஒப்பமிட்டு கொடுப்பார். தேவைப்பட்டால் கடித உறையுனுள் ஆவணங்களை வைத்தும் கொடுப்பார். பலர் பதட்டமான சூழ்நிலையில் வருகின்ற போது அவர்களை ஆசுவாசப்படுத்தி, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்ன செய்ய வேண்டும் என தான் தெரிந்து வைத்திருக்கும் விடயங்களையும் சம்மந்தப்பட்டவர்களுக்கு எடுத்துக்கூறி வழியனுப்புவார். நான் அறிந்ந வகையில் இவ்வாறான தன்மையோடு சமாதான நீதவான்கள் கருமமாற்றுவது மிக அரிதாகவே இருக்கின்ற நிலையில் இவரின் முன்மாதிரி போற்றுதற்குரியதாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களை பல தடவைகள் என் கண்களால் பார்த்திருக்கிறேன். 

இந்நிலையில நாவலப்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பரிபாலன சபையில் செயலாளராக பொறுப்பேற்கிறார். 1997 தொடக்கம் 2000 ஆண்டு வரையான குறுகிய காலத்தில் மாத்திரம் இப்பதவியை வகித்த நிலையில் முன்மாதிரியான செயற்பாடுகளால் திருப்தி கொள்கிறார்.  கட்டமைப்புகளில் மாற்றம், அடிப்படையான செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் என்றவாறு செயற்பாடுகளை முன்னெடுக்கிறார். ஆன்மீக சொற்பொழிவுகள், அடியார்களுக்கு தெளிவுபடுத்தல் நிகழ்வுகள் என்பன கலைக்கட்டுவதாய் அமையும். அறநெறி பாடசாலை தொடர்பிலான அவதானத்தை கொண்டிருந்தவர் என்ற வகையில் நாவலப்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய அறநெறி பாடசாலையின் முன்னேற்றத்திலும் கவனத்தை செலுத்துகிறார். அவர் மனதில் தோன்றிய அறநெறி பாடசாலை கட்டடத்தை அமைக்கும் யோசனையை செயற்குழுவினருக்கு எடுத்துச் சொல்லி அதனை நடைமுறைப்படுத்த துணிகிறார். இதற்கான நிதியை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இவரே களத்தில் இயங்குகிறார். 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஒரு முறை நாவலப்பிட்டிக்கு விஜயம் செய்திருந்தபோது அவரிடம் நேரடியாக கதைத்து அந்த சந்தர்ப்பத்திலேயே தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக நிதியை ஒதுக்கிக்கொண்டமையை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அந்த ஒதுக்கீட்டின் ஊடாக அமைக்கப்பட்ட கட்டடம், தமிழ் கலாசார மண்டப வளாகத்தை மேலும் காத்திரப்படுத்திக் கொண்டிருக்கிறது.

பத்திரிகைகளுக்கு எழுத வேண்டும் என்ற ஆர்வம் என்னையும் ஆட்கொண்டிருந்தது. தினமுரசு, வீரகேசரி பத்திரிக்கைகளில் எனது சிறு சிறு ஆக்கங்கள் களம் கண்டுகொண்டிருந்தன. பிரதேசத்தில் உள்ள குறைபாடுகளை தொடர்பில் அவ்வப்போது வீரகேசரி “குறிஞ்சிப்பரல்கள்” பகுதியில் எனது ஆக்கங்கள் வெளிவந்து கொண்டிருந்தன. இந்நிலையில்தான் “நவமணி” வார இதழ் வெளிவருகிறது. அந்த இதழில் எழுத தொடங்குகிறேன். உயர்தரம் கற்றுக்கொண்டிருக்கும் போதே சமூக விடயங்கள் பற்றி நிறைய எழுதுகிறேன். பிரதேச குறைபாடுகளையும் செய்திகளையும் எழுதுகிறேன். தேவையான அளவு களம் தந்தார்கள். செய்திகளுக்கு படங்களையும், தகவல்களையும் தந்து உதவுவதில் பொன்னுத்துரை அண்ணன் வழிகாட்டினார். அண்ணன் தினகரன் நாளிதழிலும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குமான நாவலப்பிட்டி பிராந்திய ஊடகவியலாளராக தொழிற்பட்டார். இப்பிரதேச ஊடகவியலாளரகள் சகலருடனும் நட்புடன் பழகுவார். சகல இனத்தை சேர்ந்த ஊடகவியலாளர்களையும் ஒருங்கிணைத்து செயற்படும் முன்மாதிரி போற்றுதற்குரியதாகும். ஏனைய ஊடகவியலாளர்கள் இவரின் கடையில் வந்து இவரை சந்திக்காமல் செல்ல மாட்டார்கள். அந்தளவு எல்லோருடனும் புரிந்துணர்வுடன் பழகும் விதம் குறிப்பிடத்தக்கதாகும். சம்பவங்கள், கூட்டங்கள் தொடர்பில் அண்ணன் அவர்களுக்கு தகவல் கிடைத்தால் தகவலை அனைவருக்கும் பகிர்ந்துவிடுவார். பொலிஸ் நிலையம், பிரதேச செயலகம், வைத்தியசாலை போன்ற இடங்களில் ஊடகவியலாளர் பொன்னுத்துரை என்றால் இவர் மீது மிகுந்த மதிப்பு மரியாதையுடனே பழகுவார்கள். 

சமகாலத்தை போன்று செய்தி நிறுவனங்களுக்கு செய்திகளை அனுப்புவது இலகுவான காரியம் அல்ல. ஊடகத்துறை என்பது தற்போது மிக இலகுப்படுத்தப்பட்டிருக்கிறது. இரண்டாயிரமாம் ஆண்டுகளின் இறுதிப்பகுதியிலேயே செய்தி வழங்குதல் நடவடிக்கைகளை சமூக வலைத்தளங்கள் இலகுப்படுத்தியுள்ளன. செய்திகளை எழுதிய பின்னர் தபாலிடுதல், அவசர செய்திகள் என்றால் பெக்ஸ் வழியாக அனுப்புதல், கமராவில் புகைப்படங்கள் எடுத்தல், அதனை கழுவிய நிலையிலேயே புகைப்படங்களைப் பெற்று அனுப்புதல் போன்ற செயன்முறைகளின் பின்னர்தான் செய்திகள், பத்திரிகை தலைமைக் காரியங்களுக்கு கிடைக்கப்பெறும். செய்திகளை உடனுக்குடன் அனுப்புவது கடினமான காரியமே. அக்காலக்கட்டத்தில் மிக ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் பொன்னுத்துரை அண்ணன் ஈடுபட்ட விதத்தை அவதானிக்கும்போதே பல விடயங்களை கற்றுக்கொண்டேன். 

நவமணி இதழில் ஆக்கங்களை நிறையவே எழுதுவதற்கும் பின்னாளில் தினக்குரல் பத்திரிகையின் நாவலப்பிட்டி பிரதேச நிருபராக கடமையாற்றுவதற்கும் பொன்னுத்துரை அண்ணனது ஒத்துழைப்பு நிறையவே உதவியிருக்கிறது. பத்திரிகைத்துறை விடயங்கள் தொடர்பில் நிறையவே அவரிடம் கற்றுக்கொண்டிருக்கிறேன். சமூகம் பற்றி அவரிடம் நிறையவே அறிந்திருக்கிறேன். அம்புலிமாமா, ஆனந்த விகடன், குமுதம் என்ற வரையறைக்குள் இருந்த வாசிப்பு மேலும் ஆரோக்கியமான சஞ்சிகைகளை அறிமுகம் செய்வதில் பொன்னுத்துரை அண்ணனின் பங்கேற்பு முக்கியத்துவம் பெறுகிறது. அவர் ஊடாகவே மல்லிகை, ஞானம், குன்றின் குரல் போன்ற இதழ்களை அறிந்துகொண்டேன்.

நாவலப்பிட்டி பிரதேசத்தை பொருத்தமட்டில் தொன்னூறுகளில் அறநெறி பாடசாலைகளின் செயற்பாடுகள் மிகத் திருப்திகரமாக முன்னெடுக்கப்பட்டன. மலையக ஆன்மீக கலை இலக்கிய மன்றம், இப்பிரதேசத்தில் இருபதுக்கு மேற்பட்ட அறநெறி பாடசாலைகளை நடத்தியது. அப்பாடசாலைகள் முறையாக இயங்குவதற்குமான வழிப்படுத்தல்களை மேற்கொண்டதில் பொன்னுத்துரை அண்ணன் அவர்களுக்கு சிறப்பான இடமுள்ளது. 

சிவராத்திரி விழா, நவராத்திரி விழா, அருள்நெறி விழாக்கள், கலை விழாக்கள், அறநெறி விழாக்கள் என இப்பிரதேசத்தில் நிகழ்வுகள் கலைக்கட்டுவதுண்டு. இந்நிகழ்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசில்கள் வழங்கி பாராட்டும் செயன்முறையினை தொடர்த்தேர்ச்சியாகவே இம்மன்றம் ஆற்றி வந்துள்ளது. 1993ஆம் வருடம் சிறப்பானதொரு சாகித்திய விழாவை முன்னெடுத்ததில் அண்ணன் அவர்களுக்கு பெரும் பங்கிருக்கிறது. இவ்வாறானதொரு தமிழ் சாகித்திய விழாவினை 1993ஆம் வருடத்தின் பின்னர் நாவலப்பிட்டி பிரதேச காணவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வு தொடர்பான தடயங்களை ஆவணப்படுத்தும் முனைப்பிலும் நாவலப்பிட்டியில் தமிழர்களின் வாழ்வியலை ஆவணப்படுத்தும் முனைப்பிலும் இந்நிகழ்வின் சிறப்பிதழ் முக்கிய ஆவணமாக திகழ்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

இம்மலரின் உருவாக்கத்தில் பொன்னுத்துரை அண்ணனின் பங்கேற்பு கவனத்துக்குரியதாகும். அவ்வாறே மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சு 1997ஆம் வருடம் நடத்திய “மலையகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு” நிகழ்வை முன்னிறுத்தி நாவலப்பிட்டியில் ஆய்வரங்கு நிகழ்வொன்றை நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிகழ்வொன்றை நடத்துவதில் பொன்னுத்துரை அண்ணன் கொண்டிருந்த உள்ளார்ந்த ஈடுபாடே காரணமாகியது. 

நாவல் நகர் பொது நூலகம் பல பெறுமதியான தமிழ் நூல்களைக் கொண்டிருக்கிறது. தொன்னூறுகளின் பின்னர் தமிழ் பேசும் மக்களின் பங்கேற்பையும் அவர்களுக்கான வாய்ப்பினையும் பெற்றுக்கொள்ளும் பொறுப்பில் பொன்னுத்துரை அண்ணனின் பங்குபற்றல் பெரிதும் துணை நின்றது. வாசகர் வட்டத்தின் பொறுப்பார்ந்த பதவி நிலைகளில் நூலகத்தினை விருத்தி செய்யும் செயற்பாட்டில் அன்னாரின் பங்கேற்பு மிகவும் பிரதானமானதாக அமைந்தது எனலாம். 

வாசகர்களுக்கிடையிலான போட்டி நிகழ்வுகளில் இக்காலக்கட்டத்தில் அபரிமிதமான வெற்றிகள் கிடைத்தன. மாவட்ட, மாகாண, அகில இலங்கை ரீதியாக வெற்றிகள் பல கிடைத்தன. இவ்வாறான பெறுபேறுகளின் பின்னணியில் வாசகர் வட்ட நிர்வாகிகளின் வகிபங்கு கவனத்துக்குரியதாகும். வாசகர்களை குழு ஒற்றுமையோடு தூண்டும் செயற்பாடுகளில் சகோதரர் பொன்னுத்துரை அவர்களின் பங்கேற்பு குறிப்பிடத்தக்கதாகும். 

நாவலப்பிட்டியில் தமிழர்களின் தொன்மை நிலைமையை எடுத்துரைக்கும் வகையில் பல எழுத்தாவணங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் 1993ஆம் வருடம் வெளிவந்த “நாவலப்பிட்டி பிரதேச சாகித்திய விழா மலர்” ஆவணமும் முக்கிய கணிப்பிற்குரியதாக விளங்குகிறது. இவ்வாறானதொரு மலர் வெளிவருவதற்கான உந்துதலைத் தந்தவர் என்ற வகையிலும் பொன்னுத்துரை அண்ணன் மீதான கவனம் வலுப்பெறுகிறது. இம்மலர் மலையகத்தின் வரலாற்றுத் தடயங்களை ஆவணப்படுத்தும் கடப்பாடுடன் வெளிவந்தது. அதேவேளை தமிழுக்கு நாவலப்பிட்டி பிரதேசம் ஆற்றியுள்ள பணிகளையும் பட்டியல்படுத்தியுள்ளமை அவதானத்திற்குரியது. குறிப்பாக இம்மலரில் “நாவலப்பிட்டி பிரதேசம் வளர்த்த தமிழ்” எனும் தலைப்பில் தமிழோவியன் எழுதியுள்ள கட்டுரை மிகுந்த கவனத்திற்குரியதாகும். இப்பிரதேசத்தின் மொழிசார், சமூகம் சார் சான்றுகளை ஆவணப்படுத்தும் பிரயத்தனம் முக்கிய கவனத்திற்குரியதாகும். அவ்வகையில் இப்பெரும் பணியின் பின்னணி உழைப்பு குறித்த பொன்னுத்துரை அண்ணனின் பங்கேற்பு காலத்தால் உயர்ந்து நிற்கிறது. அவ்வாறே மலையகத்தில் அம்மன் வழிபாடு தொடர்பான அவதானம் நூறு வருடத்திற்குரியதாகவே அமைந்திருந்தது. 

சமகாலத்தில் அம்மன் வழிபாடு தொடர்பான ஆராய்ச்சிகள் இருநூறு வருடத்திற்கு முற்பட்டது, என்ற அவதானத்தை பெற்றுள்ளது. இவ்வாறான முன்மொழிவுகள் வலுபெறுவதற்கு எழுத்தாவணங்கள் முக்கிய தடயங்களாக அமைகின்றன. அவ்வகையில் “சக்தி தத்துவ மலர்” சிறப்பு மலரும் இவ்வகையில் ஆவணமாக திகழ்கின்றமை கவனத்திற்குரியதாகும். இந்த சிறப்பு மலரின் பதிப்பாசிரியர் என்ற வகையில் கே.பொன்னுத்துரை அண்ணன் முக்கிய கவனத்திற்குரியவராகிறார். 

பொன்னுத்துரை அண்ணனது தூண்டுதலால் அவரது பங்குபற்றுதலோடு வெளியான ஆவணமாக “பேராசிரியர் நந்தியும் மலையகமும்” எனும் நூலும் முக்கியத்துவம் பெறுகிறது. மலையக இலக்கிய பரப்பை வலிமை சேர்த்தவர்களில், தொழில் நிமித்தம் வடகிழக்கில் இருந்து மலையகத்துக்கு புலம்பெயர்ந்த எழுத்தாளுமைகள் கவனத்தை பெறுகிறார்கள். அவர்களுள் டொக்டர் நந்தி குறிப்பிடத்தக்கவராவார். அவரது எழுத்து பணிகளையும் சமூக பணிகளையும் ஆவணப்படுத்தும் வகையிலேயே மேற்படி நூல் கவனத்தை பெறுகிறது. 

ஆப்தீன் நாவலப்பிட்டி மண்ணில் இருந்து தன் எழுத்துக்களால் உலகின் கவனத்தைப் பெற்ற எழுத்தாளராவார். அவருடன்  இணைந்து மேற்படி நூலினை வெளிக்கொணர்வதில் பொன்னுத்துரை அண்ணனுடைய பங்கேற்பு, இணைத் தொகுப்பாளர் என்ற வகையில் சிறப்பிடம் பெறுகிறது.  பொன்னுத்துரை அண்ணனது தொகுப்பு முயற்சியை அடையாளப்டுத்தும் முனைப்பில் “வவுனியூர் இரா.உதயணனின் படைப்புலகம் - ஆய்வுகளின் தொகுப்பு” நூலின் இணைத் தொகுப்பாளர் என்ற வகையிலும் பொன்னுத்துரை அண்ணன் கவனத்தைப் பெறுகிறார். இலக்கிய வானில் பிரகாசமிக்க ஆளுமையாக இரா.உதயணனின் சிந்தனை, சொல், செயற்பாடுகள் தனித்துவமானவை. அவரது செயற்பாடுகளுடன் பொன்னுத்துரை அண்ணனையும் இணைத்துக்கொண்டு உதயணனின் முன்னெடுப்புகள் கவனத்திற்குரியனவாகும். 

புனைவுகளோடு பரீட்சயமான இரா.உதயணனை ஆய்வுலகிலும் அடையாளப்படுத்தும் முனைப்போடு “வவுனியூர் இரா.உதயணன் படைப்புலகம்” (2025) முக்கியத்துவம் பெறுகிறது. அந்நூலினை தொகுக்கும் பணியில் இணையராக கே.பொன்னுத்துரையின் வகிபங்கு முக்கிய கவனத்தை பெறுகிறது.

மலையக இலக்கியம் தொடர்பான கவனத்தை உலக தளத்தில் கவனயீர்ப்பு செய்த ஆளுமையாக கே. கணேஸ் அறியப்படுகிறார். மலையக சமூக வரலாற்றை, வாழ்வியல் குறிப்புகளை ஆங்கிலேயர்களின் எழுத்துக்களும் ஆவணப்படுத்தி நிற்கின்றன. இருந்தபோதிலும் எழுச்சி எண்ணங்களோடு இப்பாய்ச்சலை முன் நகர்த்தும் பொறுப்பில் கே.கணேஸ் போன்றோர்களின் பங்கேற்பு மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகின்றன. மொழிபெயர்ப்பு தொடர்பான அவதானத்தில் உலக இலக்கியத்திலும் தடம் பதித்த ஆளுமையாக கே.கணேஸ் அவர்களை நோக்கலாம். தமிழ் இலக்கிய பரப்பிலும் அவதானத்திற்குரிய ஆளுமையாகவே முக்கியத்துவம் பெறுகிறார். சுவாமி விபுலானந்தருடனும் இணைந்த அன்னாரது எழுத்துலக பணி குறிப்பிடத்தக்கது. 

“மலையக தளத்திலிருந்து பெரும் உலக நெறியைத் தரிசித்த கே.கணேஷ்' என்ற பேராசிரியர் சபா ஜெயராசாவின் கூற்றும் கவனிக்கத்தக்கது. அவ்வாறே நண்பர் கணேஷைப் பற்றி சிந்திக்கும்போது துரோணர் போன்ற ஒரு படிமம்தான் என் மனதில் வருகிறது. இன்று நம் ஈழத்தின் தமிழ் இலக்கியத்தின் சிறப்பான சில அம்சங்கள் என வளர்த்து எடுத்துக் கொண்டுள்ள பண்புகளுக்கு நாம் அவரை ரிஷிமூலமாக கொள்ளவேண்டும்” என்ற பேராசிரியர் கா.சிவத்தம்பியின் கூற்றும் அதீத கவனத்தை பெறுகிறது. இத்தகைய ஆளுமைப் பண்பினுடைய மொழிப்பெயர்ப்பு முயற்சிகளை, படைப்புகளை, வரலாற்றை தொகுப்பாக்கும் முயற்சியில் பொன்னுத்துரை அவர்களது பங்கேற்பு மிகுந்த கவனத்தை பெறுகிறது. 

“முற்போக்கு இலக்கிய ஆளுமை கே.கணேஷ் மொழிப்பெயர்ப்புகள்” (2024) எனும் தலைப்பில் வெளிவந்திருக்கும் நூல் மலையகத்தை வேறு ஓரு கோணத்தில் தரிசிக்கும் வாய்ப்பினை தருகிறது.

சிற்றிதழ்களின் நேசிப்பாளர் என்ற வகையில் தொடர்ந்து பல சிற்றிதழ்களை வாங்குவதும் வாசிப்பதும் வாசித்தவற்றை மற்றவர்களுக்கு கொடுத்து வாசிக்கத் தூண்டும் செயன்முறையும் அவரில் சிறப்பம்சமாகும். அவ்வாறே சிற்றிதழ்களை ஆவணப்படுத்தும் அவரது முனைப்பும் கவனத்திற்குரியதாகும். தொடர்த்தேர்ச்சியாகவே மல்லிகை இதழ் இவரது கவனத்தை பெற்ற இதழாகும். சிற்றிதழ் துறையில் சாதனைக்குரிய இதழான மல்லிகை இதழின் ஆசிரியர் டொமினிக் ஜீவாவுடனும் நெருங்கிய நட்பில் இருந்தார். படைப்பாளிகள், இலக்கிய செயற்பாட்டாளர்களுடன் ஒரு நேச நட்பை பேணுகின்றத் தன்மையும் அவதானத்திற்குரியதாகும். 

“ஞானம்”  இதழின் வளர்ச்சியிலும் அந்த இயக்கத்தின் செயற்பாட்டிலும் ஒன்றிணைந்தவராக இவரது பங்கேற்பை தி.ஞானசேகரன் விதந்துக் கூறுவார். இந்த இதழில் சமகால கலை, இலக்கிய நிகழ்வுகள் தொடர்பில் ஆவணப்படுத்தும் பணியை நீண்ட காலமாக பொன்னுத்துரை அண்ணன் ஆற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். 

மலையக சமூக, கலை, பண்பாட்டு, அரசியல், வரலாற்று, வாழ்வியில், இலக்கியம், கல்வி, பற்றிய ஆய்வு முயற்சிகளுக்கு 1997ஆம் வருடம் இடம்பெற்ற “மலையக தமிழாராய்ச்சி மாநாடு” களம் பெரிதும் வழி சமைத்தமை தொடர்பில் அறிவோம். இந்த எழுச்சி நிலை தோற்றத்திற்கு அடித்தளமிட்ட செயற்பாடுகளில் தோட்ட பிரதேசங்களுக்கான கூட்டு செயலக ஆய்வு நடவடிக்கைகள் பெரிதும் துணை நின்றுள்ளன. அவ்வாறே உதயம் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வாக்க முயற்சிகளும் குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஆய்வாக்க முயற்சியின் பயனாக “இலங்கை மலையகத் தமிழரின் பண்பாடும் கருத்து நிலையும்” எனும் ஆய்வுக்கட்டுரையின் தொகுப்பும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து ஆய்வுகளில் ஈடுபடும் முனைப்பு தனிநாயகம் அடிகளாரின் முயற்சி “உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு” எனும் தொனிப்பொருளில் தொடங்கியது. இத்தளங்களில் மலையக தமிழர் பற்றியதுமான விடயப்பரப்பு ஆய்வுக்குட்பட்ட சந்தர்ப்பமாக 2023ஆம் வருடமே வாய்த்தது. 2023ஆம் பதினோராவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மலேசியாவில் இடம்பெற்றபோது இலங்கை மலையகத்தில் இருந்து பங்கேற்று, ஆய்வுரை நிகழ்த்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.  

1997ல் இடம்பெற்ற மலையகத் தமிழாராய்ச்சி மாநாட்டை தொடர்ந்து, தலைநகரில் நடைபெற்ற இரண்டு சர்வதேச ஆய்வு மாநாடுகள் கவனத்தைப் பெறுகின்றன. இக்களங்கள் மலையக விடயப்பரப்பு தொடர்பில் கவனத்தை ஏற்படுத்தும் களங்கள் ஆகின. இம்மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் முக்கிய உறுப்பினர் என்ற வகையில் பொன்னுத்துரை அண்ணனின் பங்கேற்பு முக்கிய கவனத்தைப் பெறுகிறது. 

2011ம் வருடம் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம், அவ் அமைப்பின் தலைவர் லெ.முருகபூபதி தலைமையில் முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை கொழும்பில் நடத்தியது. இம்மாநாட்டு ஆய்வரங்குகளில் மலையகத்தின் பங்கேற்பை உறுதி செய்யும் வகையில் பொன்னுத்துரை அண்ணன் கண்டி, நாவலப்பிட்டி, ஹட்டன் ஆகிய இடங்களுக்கு ஏற்பாட்டுக் குழுவினரை அழைத்து வந்து நிகழ்வின் முக்கியத்துவங்களை எடுத்துரைத்தார். அக்குழுவில் லெ.முருகபூபதி, ஜின்னா ஷரிபுதீன், அஷ்ரப் சிகாப்தீன், சின்னப்பபாரதி, அந்தனி ஜீவா, கவிஞர் குறிஞ்சி நாடன் ஆகியோர் அடங்கிய முதலாம் குழுவினரை அழைத்து வந்தார். அது போலவே எழுத்தாளர் உதயணன் தலைமையிலான குழுவினரையும் பிரிதொரு தினத்தில் அழைத்து வந்தார். இவ்வாறான முன்னெடுப்புக்களின் காரணமாகவே இம்மாநாட்டு ஆய்வரங்குகளில் மலையகம் தொடர்பிலான ஆய்வுப் பொருன்மைகளுக்கு நிறையவே களம் அமைந்தன. 

2012ம் வருடம் கொழும்புத் தமிழ்ச் சங்கம் “உலகத் தமிழ் இலக்கிய மாநாடு”  நிகழ்வை நடத்தியது. 2011ம் வருட மாநாட்டின் ஊடாக ஏற்பட்ட தொடர்புகளுக்கு அமைய இம்மாநாட்டிலும் “மலையக தமிழ் இலக்கியம்” தொடர்பான கவனயீர்ப்பு திருப்தியாகவே அமைந்திருந்தது.  இந்த ஆய்வரங்குகளின் வெளியீடுகள் முக்கிய வரலாற்று ஆவணமாக கொள்ளப்படுகின்றன. அவ்வாறே கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய களம், வெளியீட்டு நிகழ்வுகள், சிறப்பு ஏற்பாடுகள் போன்ற விடயங்களில் பொன்னுத்துரை அவர்களின் வகிபங்கு மிகுந்த அவதானத்தை பெறுகிறது. 

மலையக சமூகம் தொடர்பில் முதன் முதலாக இலங்கைக்கு வெளியே இடம்பெற்ற பன்னாட்டு ஆய்வரங்கம் என்ற வகையில் 2017ம் வருடம் திண்டுக்கல்லில் இடம்பெற்ற மாநாடு குறிப்பிடத்தக்கதாகும். 

திண்டுக்கல், காந்தி கிராமிய பல்கலைக்கழகம், மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் ஆகியன இணைந்து நடத்திய மலையக கலை பண்பாட்டு அம்சங்கள் தொடர்பிலான மாநாட்டிலும் கலந்து ஆய்வுரை நிகழ்த்தினார். 

அதனைத் தொடர்ந்து உலகத் தமிழ்ச் சங்கம் நடத்திய “மலையக தமிழ் இலக்கியம் - பன்னாட்டு ஆய்வரங்கம் 2017” நிகழ்விலும் பங்கேற்று உரை நிகழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது. 

அயலக தமிழர் ஒன்றுகூடல் நிகழ்வுகள், ஆய்வரங்குகள், இணைய வழி பன்னாட்டு கருத்தரங்குகள் ஆகியவற்றில் பங்கேற்று ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைக்கின்றமையும் அவதானத்திற்குரியதாகும். 

சர்வதேச தளத்தில் மலையகத்தை சரியாக அடையாளப்படுத்தும் முன்னெடுப்பிலும் காத்திரத்தன்மையை அடையாளப்படுத்தும் அவதானங்களும் கவனத்தை பெறுகின்றன. சர்வதேச தமிழ் எழுத்தாளர் மன்ற செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு “இனிய நந்தவனம்” மக்கள் மேம்பாட்டு மாத இதழ், வாசகர் வட்டத்தின் இலங்கை கிளையின் தலைவர், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகத்தின் செயலாளர் என்ற வகையிலான் பன்னாட்டுத்தள பொறுப்பு நிலைகளும் அவதானத்தை பெறுகின்றன. கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் 2011ஆம் வருடம் தொடக்கம் தொடர்ச்சியாக பதவியேற்று வருகிறார். கொழும்புத் தமிழ்ச் சங்க பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த நபராக அடையாளம் பெறுகிறார். பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரரான அன்னார் இலங்கையின் கலைத்துரையினருக்கு வழங்கும் உயரிய விருதுகளில் ஒன்றான “கலாபூசணம்” விருதையும் தனதாக்கிக் கொண்டவராவார். இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் புத்தக வெளியீட்டு திட்டத்தின் அங்கத்தவர், மலைநாட்டு எழுத்தாளர் மன்ற பொருளாளர், அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் நிர்வாக செயலாளர், சிங்கள தமிழ் எழுத்தாளர் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர், அந்தனி ஜீவா ஞாபகக் குழு உறுப்பினர் ஆகிய பொறுப்பு நிலைகளும் சமகால கலை இலக்கிய தளத்தில் தவிர்க்கப்பட முடியாத ஆளுமைதான் என்பதை நிரூபணம் செய்கிறார்.

ஆன்மீக ஈடுபாட்டாளர், பொது பணியாளர், இலக்கிய ஆர்வலர், ஊடகவியலாளர், எழுத்தாளர், இலக்கிய செயற்பாட்டாளர், பதிப்பாளர், தொகுப்பாளர், ஆய்வாளர் என்ற பணிகளோடு நட்பின் இலக்கணத்தை புரிந்த ஒரு மனித நேயராக உற்று நோக்கப்படுகின்றமை இவரில் சிறப்பம்சமாகும். 

பிறரின் பாதிப்பு நிலையை தனது பாதிப்பாக உணரும் இவரது பெருந்தன்மை நாமும் பின்பற்றவேண்டிய முன்மாதிரியாகும். பலரது ஆய்வுப்பணிகளுக்கு ஆவணங்களை தேடி கொடுத்தும் அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுக்கும் ஒரு வசதியளிப்பாளர் என்ற பாத்திரமும் இவரின் உயரிய பண்புகளுக்கு சாட்சியங்களாகின்றன. 

எல்லாவற்றுக்கும் மேலாக தனது செயற்பாடுகளுக்கு அங்கீகாரமளிக்கும் குடும்பத்தின் தலைவனான பொறுப்பிலும் தன்னை சார்ந்தவர்களின் அபிமானத்தை நிலைத்து வைத்திருப்பவர். தனது மனைவியின் பேரன்பிற்கும், பிள்ளைகளின் நம்பிக்கைக்கும் பாசத்திற்கும் என்றும் நம்பிக்கையை விளைவிப்பவர். பேரக் குழந்தைகளின் பாசமிகு தாத்தாவாகவும் உறவினர்களின் நட்பிற்கும் பாத்திரமான அங்கமாக திகழ்கின்றார். உற்றார், உறவினர், நண்பர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்திருக்கும் நேசராக வாழும் பொன்னுத்துரை அண்ணனிடம் நாம் கற்கவேண்டிய படிப்பினைகள் ஏராளம். எழுபத்தைந்தாவது அகவையில் அவரை வாழ்த்தும் பாக்கியத்தை பெரும்பேறாகவே உணர்கிறேன். இனிய அகவை தின வாழ்த்துக்கள் அண்ணா!

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கவிப்பொழிவும் பட்டிமண்டபமும் : 'கம்பன் விழா...

2026-05-02 10:37:46
news-image

மனித நேயமிக்க ஆளுமை கே.பொன்னுத்துரையின் அகவை...

2026-04-21 11:21:21
news-image

மிகவும் சிறந்த  ஆஷா போஸ்லேவின் சில...

2026-04-13 20:56:05
news-image

தமிழைத் தமிழாக உலக அரங்கில் எடுத்துச்...

2026-04-11 18:56:28
news-image

'நாட்டிய வைபவம்' : நாட்டிய கலா...

2026-04-11 12:15:17
news-image

சிகரத் தரணியாம் கம்பளை நகர் காக்கும்...

2026-03-25 13:35:47
news-image

பசி வாட்டத்தில் குழந்தைகள், வறுமையோடு போராடும்...

2026-03-21 18:02:00
news-image

நாட்டிய வைபவம்

2026-03-19 10:57:50
news-image

இலங்கை - இந்திய பூர்வீகத் தொடர்பு:...

2026-03-14 13:52:02
news-image

எங்கிருந்தோ வரும் ஆற்றலை வெளிப்படுத்தும் ஒரு...

2026-03-06 18:55:07
news-image

‘இலங்கையில் இராமாயணம்’ நூல் விமர்சனம்

2026-03-01 17:18:39
news-image

பஞ்சரத்தினக் கீர்த்தனைகளால் நெகிழ்ந்த அரங்கம்! - ...

2026-02-22 12:55:08