பௌத்த எழுச்சி வட கிழக்கிற்கே அவசியம் ; நாவற்குழி விகாரை சம்பவத்தில் சுமந்திரனின் செயலாளர் சைந்தனுக்கு தொடர்பு - கஸ்ஸப தேரர் பகிரங்க குற்றச்சாட்டு

20 Apr, 2026 | 05:07 PM
image

(க.சிவலிங்கமூர்த்தி)

இலங்கையில் உண்மையான பௌத்த மறுமலர்ச்சியும் விழிப்புணர்வும் பௌத்தர்கள் செறிந்து வாழும் தெற்கு மாகாணங்களை விட, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே தற்போதைய சூழலில் அவசியமானது. நாவற்குழி விகாரையில் சம்பவத்தின் பின்னணியில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்  எம்.ஏ. சுமந்திரன் அவர்களின் செயலாளராகக் கடமையாற்றும் சைந்தன் ஆகியோர் முன்னின்று செயற்பட்டுள்ளனர் என பலாங்கொடை கஸ்ஸப தேரர் பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

கொழும்பில் திங்கட்கிழமை (20) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி நாவற்குழி விகாரையில் பிக்கு ஒருவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை திட்டமிட்ட ஒரு சதியாகும். ஒரு மதத் தலத்திற்குரிய ஆடை ஒழுக்கத்தை மீறி பிரவேசிக்க முயன்ற யுவதிக்கு அறிவுறுத்தியதற்காக, குறித்த பிக்கு மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்  எம்.ஏ. சுமந்திரன் அவர்களின் செயலாளராகக் கடமையாற்றும் சைந்தன் ஆகியோர் முன்னின்று செயற்பட்டுள்ளனர். எவ்வித தவறும் செய்யாத பிக்குவை விகாரையிலிருந்து வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது. இது வடக்கிலிருந்து பிக்குகளைத் தந்திரோபாயமாக வெளியேற்றும் ஒரு முயற்சியாகும். பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதாகக் கூறும் அநுர குமாரவும் அரசாங்கமும், இவ்விடயத்தில் மௌனம் காப்பது ஏன்?

ஒரு மதத்தின் எழுச்சியும் விழிப்புணர்வும் அந்த மதம் சார்ந்த மக்கள் குறைவாக வாழும் பகுதிகளிலேயே ஏற்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில், பௌத்த எழுச்சி என்பது தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே அவசியமானது. ஆனால், திட்டமிட்ட அடிப்படையில் அங்கிருக்கும் பிக்குகளை வெளியேற்றிவிட்டு, அப்பிரதேசங்களைத் தனித்துவமான வலயங்களாக மாற்றச் சூழ்ச்சிகள் நடக்கின்றன. பிக்குகளை வடக்கிலிருந்து வெளியேற்றி, அங்கு தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை உறுதிப்படுத்த இந்த அரசாங்கம் முற்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.

இலங்கை ஒரு தேரவாத பௌத்த நாடு. இங்கு விலங்குகளை (நாய்களை) அழைத்துக்கொண்டு பாதயாத்திரை செல்வது எமது நீண்டகால வினய ஒழுக்கங்களுக்கு அச்சுறுத்தலாக அமையும். அதேபோன்று, திருகோணமலை உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தின் வளங்கள் மீது இந்தியா செலுத்தி வரும் ஆதிக்கம் மற்றும் தரைவழிப் பாலங்கள் அமைக்கும் திட்டங்கள் இலங்கையின் ஒற்றையாட்சி மற்றும் இறையாண்மையைப் பாதிக்கும். இதற்கு எதிராக மகா சங்கத்தினர் தொடர்ச்சியாகப் போராடுவார்கள்.

நாவற்குழி விகாரையில் அநியாயமாகப் பாதிக்கப்பட்ட பிக்கு, மீண்டும் அந்த விகாரையிலேயே தங்கித் தனது மதப் பணிகளைத் தொடர்வதற்கான சட்டப் பூர்வமான பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். இதற்காகப் புத்த சாசன அமைச்சருக்கு இரண்டு வார கால அவகாசத்தை வழங்குகிறோம். இந்த காலப்பகுதிக்குள் குறித்த பிக்குவுக்கு நீதி வழங்கப்பட்டு, அவர் மீண்டும் நாவற்குழி விகாரைக்குச் செல்வதற்கான அனுமதி வழங்கப்படாவிட்டால், மகா சங்கத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து பௌத்த சாசன அமைச்சுக்கு முன்னால் பாரிய போராட்டத்தை முன்னெடுப்போம். பிக்குகள் இலாபத்தையோ புகழையோ எதிர்பார்ப்பவர்கள் அல்ல. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தற்போதைய அரசுக்கு முட்டுக்கட்டை போடாது நாட்டை...

2026-05-11 17:45:11
news-image

"இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான இளைஞர்...

2026-05-11 19:16:34
news-image

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு :...

2026-05-11 18:59:17
news-image

21வது ஆசிய ஊடக மாநாட்டில் பங்கேற்பதற்காக...

2026-05-11 18:05:33
news-image

கண்டி விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைவு

2026-05-11 17:42:16
news-image

கொழும்பு டேம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு...

2026-05-11 17:56:52
news-image

நாட்டின் நிதிப் பரிமாற்றம், தரவுகளின் பாதுகாப்பை...

2026-05-11 17:37:22
news-image

கடும் மழையால் பண்டாரவளை நகரம் வெள்ளத்தில்...

2026-05-11 16:47:11
news-image

யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்

2026-05-11 16:34:04
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியிலுள்ள வீதியை...

2026-05-11 16:25:45
news-image

உருமாற்றம் செய்யப்பட்ட வாகனங்களுக்குத் தடை: பொலிஸார்...

2026-05-11 16:19:16
news-image

விசாரணைக்கு அழைக்கும் எந்த நேரத்திலும் சமூகமளிக்கத்...

2026-05-11 16:01:35