வீட்டை விட்டு வெளியேறி பாதை தவறிய நாயொன்று மரதன் ஓட்டப் போட்டியொன்றில் சுயமாக பங்கேற்று 13.1 மைல் தூரம் ஓடி ஏழாம் இடத்தைப் பெற்ற சம்பவம் அமெரிக்க அலபாமா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.

அந்த நாயின் உரிமையாளரான ஏப்ரல் ஹம்லின் வீட்டை விட்டு வெளியே சென்ற சமயம், எவ்வாறோ அந்த வீட்டிலிருந்து வெளியேறிய மேற்படி இரண்டரை வயதான லுடிவைன் என்றழைக்கப்படும் நாய் சுமார் கால் மைல் தூரம் அலைந்து திரிந்துள்ளது.

இந்நிலையில் எல்க்மொன்ட் எனும் இடத்தில் மரதன் ஓட்டப் போட்டி ஆரம்பமான இடத்தை வந்தடைந்த அந்த நாய், மரதன் ஓட்டத்தை ஆரம்பித்த ஓட்ட வீரர்களுடன் இணைந்து ஓட ஆரம்பித்துள்ளது.

தொடர்ந்து அந்நாய் மரதன் ஓட்ட வீரர்களைப் பின் தொடர்ந்து மரதன் ஓட்டத்துக்கான தூரம் முழுவதையும் ஓடி முடித்துள்ளது.

தன்னையறியாமல் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட அந்நாய் ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து ஓடி அந்தப் போட்டியில் ஏழாம் இடத்தில் வந்துள்ளது.

அந்த நாயின் இந்த சாதனையை பாராட்டும் வகையில் மரதன் ஓட்டப் பந்தய ஏற்பாட்டாளர்கள் அந்நாய்க்கு பதக்கமொன்றை அணிவித்து கௌரவித்துள்ளனர்.

மேற்படி நாய் மேற்படி மரதன் ஓட்டப் போட்டியின் போது இடையிடையே ஓட்டத்தை நிறுத்தி வழியில் தென்பட்ட பொருட்களை முகர்ந்து பார்ப்பதில் ஈடுபட்டதன் காரணமாகவே அது ஏழாம் இடத்தை பெற நேர்ந்துள்ளதாகவும் அவ்வாறு அல்லாமல் இடை நிறுத்தாது அது ஓடியிருக்குமானால் அந்தப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றிருக்கும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

வீட்டில் இருந்த தனது நாய் அங்கிருந்து தப்பிச் சென்று மரதன் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றுள்ளதை அறிந்து ஹம்லின் அதிர்ச்சியடைந்துள்ளார்.

வழமையில் சோம்பேறியாக காணப்படும் தனது நாய் இவ்வாறு ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து ஓடியுள்ளது என்பதை நம்புவதற்கு கஷ்டமாகவுள்ளதாக கூறினார்.