(லியோ நிரோஷ தர்ஷன்)
இலங்கையில் மீண்டும் ஒரு எரிபொருள் நெருக்கடிக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ள நிலையில், பாரிய மின்சார நெருக்கடி குறித்த அச்சமும் மக்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.
கடந்த வாரம் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சாரக் கட்டணத்தை சுமார் 25 சதவீதத்தினால் உயர்த்தியமை இதற்கு ஒரு முக்கிய காரணியாக அமைந்துள்ளதுடன் ஜனாதிபதி அநுரகுமர திசாநாயக்கவின் அண்மைய பாராளுமன்ற உரையின் போது மின் கட்டணம் குறித்து குறிப்பிட்டிருந்தார்.
மின்சாரக் கட்டண உயர்வுக்கு எதிராக ஆரம்பத்திலிருந்தே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஏனைய எதிர்க்கட்சிகள் கடும் போராட்டங்களை முன்னெடுத்திருந்தன. மக்கள் மற்றும் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைக் கருத்திற்கொண்டு, நேரடியாகவே பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்குச் சென்று எதிர்க்கட்சிகள் நிலைமையை விளக்கியுள்ளன.
எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வை மக்கள் ஒருவாறு சகித்துக் கொண்டாலும், மின்சாரக் கட்டண உயர்வு அல்லது மின்வெட்டு என்பது மக்களின் பொறுமைக்கு விடப்படும் சவாலாக அமையும் என்பதை எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் இலங்கை அரசியலில் மின்சார நெருக்கடி என்பது ஆட்சி மாற்றங்களுக்கு வித்திட்ட பலமான காரணியாக இருந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் கோட்டாபய ராஜபக்ஷ அரசு எரிபொருள், எரிவாயு விலை உயர்வுடன் நீண்ட நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டதே கோட்டாபய அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு ஆரம்பப் புள்ளியாக அமைந்தது.
அதே போன்று 1997 ஆம் ஆண்டில் சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்தில் மின்சார அமைச்சராக இருந்த அனுருத்த ரத்வத்தே, போர்க்கள வெற்றிகளுக்காக 'சபுமல் குமாரயா' எனப் போற்றப்பட்டார். ஆனால், மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டபோது அதே மக்கள் அவரை மிகக் கடுமையாக விமர்சித்தனர். இது சந்திரிகா அரசின் சரிவுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மீண்டும் ஒரு பாரிய மின்சார நெருக்கடி ஏற்பட்டு 10 முதல் 12 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, 100 நாட்களுக்குள் தடையற்ற மின்சாரத்தை வழங்குவதாக உறுதியளித்து ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைப் பிடித்தது.
அப்போதைய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் எரிசக்தி அமைச்சராகப் பொறுப்பேற்ற கரு ஜயசூரிய, ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் 'கறுவல ஜயசூரிய' (இருள் ஜயசூரிய) என விமர்சிக்கப்பட்டார். இருப்பினும், தேர்தல் வாக்குறுதியின்படி 100 நாட்களுக்குள் நாட்டிற்கு தடையற்ற மின்சாரத்தை வழங்க அவர் நடவடிக்கை எடுத்தார்.
வரலாறு முழுவதும் மின்சார நெருக்கடி என்பது இலங்கையின் ஆட்சியாளர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வந்துள்ளதை இந்த நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. தற்போது ஏற்பட்டுள்ள மின் கட்டண உயர்வும், எதிர்வரும் மின் நெருக்கடி அச்சமும் தற்போதைய அரசியல் சூழலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM