உலக வரலாற்றில் பேரபிமானம் பெற்ற அன்பு அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் அவர்களின் 77ஆவது பிறந்ததினம் இன்றாகும்.
அறுபத்து நான்கு கலைகளில் நிகழ்ச்சித் தொகுப்பு, நேர்முக வர்ணணை, மேடைப் பேச்சு, வானொலி தொலைக்காட்சி அறிவிப்பு போன்றனவும் அடங்கும் என வையத்திற்கு பறைசாற்றியவர் அப்துல் ஹமீத்.
பாவா ஹசன் "பி.எச்." அப்துல் ஹமீத் 1949ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் திகதி தெமட்டகொடையில் பிறந்தார்.
இவர் இலங்கைத் தலைநகர் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட, பன்னாட்டுப் புகழ்பெற்ற எம் நாட்டு அறிவிப்பாளரும், வானொலி, மேடை நாடக மற்றும் திரைப்பட நடிகரும் ஆவார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நீண்டகாலமாக அறிவிப்பாளராக பணியாற்றியவர் அப்துல் அமீத் அவர்கள்.
இலங்கை மாத்திரமன்றி உலக அளவில் தனது தூய்மை மிகு செந்தமிழின் உச்சரிப்பால் தமிழறிந்தோர் அகங்களில் சிம்மாசனமிட்டு நிறைந்திருக்கும் உன்னத கீர்த்திக்கு உரிமையாளர் பி.எச். அப்துல் ஹமீட் என்றால் அது மிகையாகாது.
ஹமீட் கொழும்பு நகரில், தெமட்டகொடை புறநகர்ப் பகுதியில், பாவா ஹசன், ஹாசியா உம்மா ஆகியோருக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர் ஆவார். இவருக்கு மூத்தவர்கள் மூவரும் ஆண் சகோதரர்கள். இவருக்கு மூன்றரை வயதிருக்கும்போதே, தந்தையார் காலமாகி விட்டார். தாயாரின் அரவணைப்பில் வளர்ந்தவர் திரு.ஹமீத்.
தனது ஆரம்பக் கல்வியை தெமட்டகொடை தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்றார். அங்கு இவர் ஆ.பொன்னுத்துரை, பண்டிதர் சிவலிங்கம், ஆகியோரிடம் தமிழ் கற்றார். பள்ளியில் படித்த காலத்திலேயே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். 1960ஆம் ஆண்டில் கொழும்பு விவேகானந்தா சபை மண்டபத்தில், வீரபாண்டிய கட்டபொம்மன் மேடை நாடகத்தில் நடித்து லடிஸ் வீரமணியின் பாராட்டைப் பெற்றார்.
சிறுவனாக இருந்தபோது இலங்கை வானொலியின் சிறுவர் மலர் நிகழ்ச்சிகளிலும், பின்னர் வ.ஆ. இராசையாவின் நிகழ்ச்சித் தயாரிப்பில், இளைஞர் மன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார்.
அக்காலகட்டத்தில் வானொலி நிலையக் கலைஞராகத் தெரிவு செய்யப்பட்டார். இளைஞர் மன்றத்துக்கும், கல்விச் சேவை நிகழ்ச்சிக்குமான நாடகம் மற்றும் உரைச்சித்திரம் ஆகியவற்றை தயாரிக்கவும் குரல் கொடுக்கவும் வாய்ப்புகள் வந்தன. பதினெட்டு வயதிலேயே வானொலி அறிவிப்பாளராக இவர் நியமனம் பெற்றார். இவருடன் எஸ். நடராஜசிவம், ஜோக்கிம் பெர்னாண்டோ, இருதய ஆனந்தராஜ், ராஜேஸ்வரி சண்முகம் ஆகியோரும் தெரிவாகினர்.
செய்தி வாசிப்பாளராக, நேர்முக வர்ணணையாளராக, நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, நாடக கலைஞராக பல்வேறு பணிகளிலும் காலூன்றினார்.
இலங்கை வானொலியின் வர்த்தக சேவையில் அறிவிப்பாளராக இருந்த காலத்திலேயே, ஏராளமான நிகழ்ச்சிகளை வர்த்தக சேவையிலும் தேசிய சேவையிலும் தயாரித்து வழங்கியிருக்கிறார். இவர் தயாரித்த நாடகங்கள் இரண்டு சேவைகளிலும் ஒலிபரப்பாகியுள்ளன. சில்லையூர் செல்வராசனின் 'ரோமியோ ஜூலியட்' கவிதை நாடகம், எஸ்.ராம்தாஸின் 'கோமாளிகள் கும்மாளம்', கவிஞர் அம்பியின் 'யாழ்பாடி' போன்றவை குறிப்பிடத்தக்கவை. -'யாழ்பாடி' நாடகம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பவள விழாவின்போது இறுவட்டாக வெளியிடப்பட்டது.'ஒரு வீடு கோவிலாகிறது' நாடகம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனால் பாராட்டப் பெற்றது. தென்னிந்திய கலைஞர்களும் பங்குபற்றிய எம். அஷ்ரப்கானின் 'அனிச்ச மலர்கள்', 'சக்கரங்கள், கே. எஸ். பாலச்சந்திரனின் 'கிராமத்துக் கனவுகள்' போன்றனவும் இவருக்கு பெருமை சேர்ப்பவை.
"பாட்டுக்கு பாட்டு" முதலான வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளை, வானொலி மூலம் அறிமுகப்படுத்தியவர் இவரே. இத்தகைய நிகழ்ச்சிகள், கடல் கடந்து இந்தியாவிலும் வரவேற்பை பெறுகின்றன. இவர் தொகுத்து வழங்கிய "பாட்டுக்குப் பாட்டு" விநோத நிகழ்ச்சி தமிழறிந்தோர் நெஞ்சங்களில் ஜனரஞ்சகமானது.
இலங்கையில் 1976 தயாரான “கோமாளிகள்” திரைப்படத்தில் பிராமணராக நடித்த இவர், தென்னிந்திய சினிமாவிலும் நடித்துள்ளார். கே.எஸ். ரவிகுமாரின் "தெனாலி", மணிரத்தினத்தின் "கன்னத்தில் முத்தமிட்டால்" திரைப்படங்களில் இவரது பங்களிப்பு இருந்தது. "தெனாலி" படத்தில் கமல்ஹாசனுக்கு யாழ் தமிழை கற்றுக் கொடுத்து "உலக நாயகன்" பட்டம் வழங்கியவரும் இவரே. இலங்கையிலும் இந்தியாவிலும் பல மெல்லிசைப் பாடல்களையும், திரைப்படப் பாடல்களையும் எழுதியுள்ளார். 1990ஆம் ஆண்டு தனது கலையுலக நண்பர்களான எஸ். ராம்தாஸ், எஸ். செல்வசேகரன், T.ராஜகோபால், கே.எஸ். பாலச்சந்திரன் ஆகியோருடன் வெள்ளிவிழாவைக் கொண்டாடினார்.
உலக மகா கலைஞர் - நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இவரும் நகமும் சதையும் போல் உறுவு கொண்டவர்கள்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இலங்கையில் "முதல் மரியாதை" வழங்கிய நிகழ்வில் நானும் கலந்துகொண்டிருந்தேன். அவ்விழாவில் "நானும் அப்துல் ஹமீதின் தேமதுர குரலுக்கு மாபெரும் ரசிகன்” எனக் குறிப்பிட்டார் சிவாஜி கணேசன்.
அரங்கத்தினுள் (BMICH) கரவொலிகள் ஆர்ப்பரித்தன. சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், கலைஞர் கருணாநிதி, கவிஞர் வைரமுத்து, கவிஞர் வாலி, பாரதிராஜா, கே.எஸ்.ரவிகுமார், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், டி.எம்.சௌந்தரராஜன், எஸ்.ஜானகி, பி.சுஷீலா, ஜேசுதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற பிரபலங்களுடன் நன்கு பரிச்சயமானவர் திரு.ஹமீத். ராஜ் டிவி, சன் டிவி, கலைஞர் டிவி என தமிழகத்தில் இவரின் தேமதூர குரல் ஒளிக்காத தொலைக்காட்சி நிலையங்களே இல்லை எனலாம்.
சிங்கப்பூரில் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாராட்டு விழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அனைத்து நெஞ்சங்களினதும் ஏகோபித்த பாராட்டினைப் பெற்றவர் இவர்.
இவரின் அபார ஞாபக சக்தி கணினியைப் போன்றது. நடிப்புக் கலைப் பிதாமகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இவரின் குரலுக்கு ரசிகன் எனக் கூறுவது வஷிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்றதற்கு சமமானதே என நான் கருதுகின்றேன்.
தமிழை தமிழாக உலக அரங்கில் எடுத்துச் சென்ற நம் மண்ணின் மைந்தன் அன்பு அறிவிப்பாளர் திரு.அப்துல் ஹமீத் அவர்களுக்கு அனைத்து அன்பு நெஞ்சங்கள் சார்பாக எமது உளமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் உரித்தாகுக.....!
எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ்,
கம்பளை.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM