லவ் இன்சூரன்ஸ் கம்பனி- திரைப்பட விமர்சனம்

11 Apr, 2026 | 03:13 PM
image

லவ் இன்சூரன்ஸ் கம்பனி-  திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : ரௌடி பிக்சர்ஸ் - செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்

நடிகர்கள் : பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி, யோகி பாபு, கௌரி ஜி. கிஷன், ஷா ரா, மாளவிகா, சீமான் மற்றும் பலர்.

இயக்கம் : விக்னேஷ் சிவன்

மதிப்பீடு : 3.5 / 5

தொடர் ஹாட்ரிக், வெற்றிகளை அளித்து 'ஹாட்ரிக் ஸ்டார் ' பட்டத்தை பெற்ற நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பிலும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாராகி சற்று கால தாமதத்துடன் வெளியாகி இருக்கும் படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பனி'. இந்தியாவில் ஒரு திரைப்படத்தைக் காண கட்டணம் செலுத்தி விட்டு பட மாளிகைக்குள் சென்று அந்த படத்தை பார்த்த பிறகு படம் நன்றாக இல்லை என்றால் அவருக்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடை வழங்கும் வகையில் ஒரு பாலிசி உள்ளது. அந்த விதிமுறையின் அடிப்படையில் அல்லது அதனை மனதில் வைத்து இந்த திரைப்படத்தைக் காண பட மாளிகைக்கு சென்ற ரசிகர்கள் இழப்பீட்டு தொகையை கோரி புகார் தருகிறார்களா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

2040 ஆம் ஆண்டில் சென்னை மாநகரின் பின்னணியில் இந்த கதை களமும் , சம்பவமும் நடைபெறுகிறது. அங்கு பசுமை உலகம் என்ற டிஜிட்டல் டிடாக்ஸ் உலகத்தை நிர்மாணித்து அதனை நிர்வகித்து வருகிறார் அன்பு கடல்( சீமான்) . அவருடைய மகனான வைப் வாஸே ( பிரதீப் ரங்கநாதன்) அன்றைய காலகட்டத்திலும் கைபேசி மற்றும் டிஜிட்டல் உலக தொடர்புகள் ஏதும் இல்லாமல் இயற்கையுடன் இணைந்து வாழ்கிறார். 2040 ஆம் ஆண்டிலும் சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வரும் தீமா ( கிருத்தி ஷெட்டி) எனும் அழகான இளம் பெண்ணை வைப் வாஸே சந்திக்கிறார். கண்டவுடன் காதலிக்க தொடங்குகிறார் .

ஆனால் காதலியான தீமாவோ தன்னுடைய காதலையும், காதலரையும் லைக் ( Lik) எனும் செயலி தான் தீர்மானிக்கும் என்கிறார். இதனால் வைப் வாஸே எல் ஐ கே எனும் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து, தனது காதலை வளர்க்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த செயலியின் வடிவமைப்பாளரான சூரியன் ( எஸ் ஜே சூர்யா) லவ் மீற்றர் எனும் புதிய வசதியை அந்த செயலியில் அறிமுகப்படுத்துகிறார். இதனையும் தங்களுடைய காதல் வலிமைக்காக பாவிக்கும் வைப் வாஸே மற்றும் தீமா ஜோடி - அதில் எதிர்மறையான தரவின் முடிவு தெரிய வர.. பிரேக் கப் ஆகிறது. இதனால் அதிர்ச்சி அடையும் வைப் வாஸே தன் காதல் உணர்வை துச்சமாக கொச்சைப்படுத்திய செயலி தவறானது என வாதிடுகிறார். தரவுகளை விட உணர்வுகள் மேலானது என்றும் சொல்ல.. மற்றவர்கள் ஏற்க மறுக்க... அதனை நிரூபிக்க அவர் என்ன செய்தார்? என்பதை சொல்வது தான் இப்படத்தின் கதை.

இப்படத்தை கொண்டாடுவதற்கு காரணமாக திகழும் ஒளிப்பதிவாளர்- இசையமைப்பாளர் -கலை இயக்குநர் -படத்தொகுப்பாளர் - ஆகியோரின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பிற்கு ஒரு ராயல் சல்யூட் அடிக்கலாம்.

படத்தின் இரண்டாம் பகுதியில் சூரியன் கதாபாத்திரம் ஆங்கிலத்தில் படபடவென பேச ... அதற்கு எதிராக நிற்கும் அன்பு கடல் கதாபாத்திரம் தமிழில் படபடவென பேசுவது... உற்சாகமான ஆரவாரமான திரையரங்க தருணங்கள். 

இலத்திரனியல் சாதனமான கைபேசியை பாவிக்காத இளைஞனுக்கும்... சமூக வலைதளத்தை தன்னுடைய வாழ்வாதாரமாகவும் உயிர் மூச்சாகவும் கருதும் இளம் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலை சொல்லியிருக்கும் இயக்குநர்... இதற்காக தொழில்நுட்பத்தை எதிர்மறை கதாபாத்திரமாக வடிவமைத்திருப்பது புத்திசாலித்தனமாக இருந்தாலும்... அதற்கான திரை மொழி எழுத்துகளில் வழக்கமான வில்லத்தனம் பொதிந்திருப்பது.... உறுத்தல்.

ஆனால் அதே தருணத்தில் இன்றைய இளம் தலைமுறையினர் திரும்ப பெற இயலாத மதிப்புமிக்க தருணங்களை சமூக வலைதளங்களில் கழிக்க தொடங்கி, அதற்கு அடிமையாகி கிடப்பதையும்.. அதனை தவிர்ப்பதற்காக பசுமை உலகம் என்ற ஒரு தீர்வை முன் வைத்திருப்பதை பாராட்டலாம்.

ஒரு செயல் நடைபெற்றால்... தொழில்நுட்ப ரீதியாக ஒரு சாதாரண தரவாகத்தான் பதிவாகும். இதனை பகுப்பாய்வு செய்யும் போது அதனுள் இருக்கும் உணர்வை துல்லியமாக பகுப்பாய்வு செய்திட இயலாது. ஏனெனில் தரவுகளை விட உறவுக்கான உணர்வுகள் மேம்பட்டது எனும் உளவியல் ரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மையையும் இயக்குநர் விக்னேஷ் சிவன், சமூக அக்கறையுடன் உரைத்திருக்கிறார்.

கடைசி இருபது நிமிட காட்சிகளில் இயக்குநரின் கைவண்ணம் பளீச். ஆனால் 2040 ஆம் ஆண்டில் தொழில்நுட்ப ரீதியான ஹேக்கர்கள்  குறித்த விடயங்கள் இடம் பெறாதது...?

வைப் வாஸே கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரதீப் ரங்கநாதனின் 'ஹாய்லூ' எனும் குரல் அறிமுகமே தனித்துவமாக இருக்கிறது. வழக்கம்போல் துள்ளலான இளைஞன் வேடம் என்றாலும் முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் ரசிகர்களுடன் நெருக்கமாகி அவர்களின் மனதை கவர்கிறார். இந்தப் படத்திலும் அவருடைய மேனரிசம் இளம் தலைமுறை ரசிகர்களை காந்தம் போல் ஈர்க்கிறது.

தீமா கதாபாத்திரத்தில் தோன்றும் நடிகை கிருத்தி ஷெட்டி ஒவ்வொரு பிரேமிலும் இளமையும் அழகையும் காண்பித்து ரசிகர்களின் மனதை கவர்வதுடன் அவர்களது சிந்தையையும் ஆக்கிரமிக்கிறார்.

சூரியன் கதாபாத்திரத்தில் தோன்றும் எஸ் ஜே சூர்யா- வழக்கமான சேட்டைகளை செய்து ரசிகர்களை வசப்படுத்துகிறார்.

அன்பு கடல் கதாபாத்திரத்தில் தோன்றும் சீமான் தமிழிலேயே உரையாடலை நிகழ்த்தி ரசிகர்களிடம் கரவொலியை பெற்றாலும் நடிப்பதற்கான வாய்ப்பு உள்ள இடங்களில் தன் நடிப்பையும் வழங்க தவறவில்லை. இது போன்ற கதாபாத்திரங்களில் அவர் தொடர்ந்து தாராளமாக நடிக்கலாம்.

தீமாவின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை மாளவிகாவின் திரை தோற்றம் ரசிகர்களுக்கு ஜில்.

கல்கி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கௌரி ஜி. கிஷனின் கவர்ச்சி ரசிகர்களிடம் எடுபடவில்லை.

ஜாலி பிரபு கதாபாத்திரத்தில் தோன்றும் யோகி பாபு சில இடங்களில் மட்டும் புன்னகையை பூக்க வைக்கிறார். 

இந்தப் படத்தை பிரதீப் ரங்கநாதன் விக்னேஷ் சிவன் கூட்டணி உருவாக்கியிருந்தாலும்... இதற்கு உயிரூட்டி, ரசிகர்களுக்குள் தீமூட்டி இருப்பவர் இசையமைப்பாளர் அனிருத். பாடல்களிலும் பின்னணி இசையிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி படைப்பின் நுகரும் அனுபவத்தை மேம்படுத்தி இருக்கிறார்.

லவ் இன்சூரன்ஸ் கம்பனி - ஹேப்பி ரிட்டர்ன்ஸ்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

29 - திரைப்பட விமர்சனம்

2026-05-11 16:47:59
news-image

ஜூன் மாதத்தில் வெளியாகும் புதுமுகங்கள் நடித்திருக்கும்...

2026-05-11 16:27:20
news-image

நடிகர் சூர்யாவின் 'கருப்பு' படத்தின் முன்னோட்டம்...

2026-05-11 16:26:17
news-image

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கும் 'வாரண்ட்'...

2026-05-11 16:17:16
news-image

அர்ஜுன் தாஸ் நடிக்கும் 'கான் சிட்டி'...

2026-05-11 15:15:36
news-image

ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த சந்தீப் கிஷன்...

2026-05-11 15:14:08
news-image

ஓகஸ்டில் ரசிகர்களை 'ஐ அம் கேம்...

2026-05-11 15:04:47
news-image

காதலும், இன்னிசையும் கலந்து தயாராகும் 'சைக்கிள்...

2026-05-11 14:58:11
news-image

ஜோதிகா - சோனாக்ஷி சின்கா இணைந்து...

2026-05-07 15:49:47
news-image

நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் பட்டியலில் இணைந்த...

2026-05-07 15:00:00
news-image

நடிகர் தேஜஷ் ராஜன் நடிக்கும் 'அமரம்'...

2026-05-07 14:38:54
news-image

சிவ கார்த்திகேயனுடன் இணைந்த பாக்யஸ்ரீ

2026-05-06 18:40:52