பாடசாலை குத்துச்சண்டை சங்கத்தினரால் நடாத்தப்படும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 48 ஆவது டி.பி ஜெயா ஞாபகார்த்த தேசிய குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி  நான்கு தங்க பதக்கங்களை கைப்பற்றி அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று வரலாற்று சாதனையை நிலைநாட்டியுள்ளது.

நாடு பூராகவும் 48 பாடசாலைகளை சேர்ந்த 267 வீரர்கள் பங்குபற்றிய 16 பிரிவுகளைக் கொண்ட இந்த தேசிய போட்டித்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து நான்கு நாட்கள் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியின் குத்துச்சண்டை திடலில் இடம்பெற்றுவந்தது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முதன்முறையாக இந்த போட்டி இடம்பெற்றதோடு முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 6 பாடசாலைகள் கலந்துகொண்டிருந்தன.

இதில் முள்ளியவளை வித்தியானந்தாக்கல்லூரியை சேர்ந்த வி.சாம்சன் 35 கிலோ - 37 கிலோ  எடைப்பிரிவில் தங்கம், 52கிலோ  -56கிலோ  எடைப்பிரிவில் எம்.தனுஜன் தங்கம், 56கிலோ - 60கிலோ  எடைப்பிரிவில் வை.ஜனனன் தங்கம், 60 கிலோ - 64 கிலோ  எடைப்பிரிவில் வை.கிரிதுரன் தங்கம் என நான்கு தங்கப்பதக்கங்களை சுவீகரித்து தேசிய சாதனையை நிலை நாட்டினர்.

இந்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தைசேர்ந்த  முத்தையன்கட்டு வலதுகரை (அ. த. க) பாடசாலை வீரர் ஏ .தமிழரசன் 43 கிலோ - 45 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கத்தினையும்  முத்தையன்கட்டு இடதுகரை (அ. த.க) பாடசாலை வீரர் பி.ரூபன் வெள்ளிப் பதக்கத்தினையும் பெற்றுக்கொண்டனர். 

வடக்கில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலைகளுக்கிடையில் குத்துச்சண்டைப் போட்டி கடந்த 2012 ஆம் ஆண்டுக்குப் பின்னரே ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், தேசிய மட்டத்தில் பல்வேறு வகையான சாதனைகளை நிலைநாட்டும் வீரர்கள் இந்த மாவட்டத்தில் அதிகமாகவுள்ளனர் என்பது தற்போது  வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பாக குத்துச்சண்டை பயிற்சியின் பிரதம ஆசிரியர் மதுசங்க மற்றும் வள்ளுவன் மாஸ்ரர் ஆகியோரின் பயிற்சியால் வளர்க்கப்படுகின்ற இம் மாணவர்கள் சிறந்த மாணவர்களாக மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றார்கள்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற தேசிய மாவட்ட போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை பெற்று முன்னிலை வகித்தவர்கள். இந்த ஆண்டுக்கான தேசிய குத்துச்சண்டை போட்டி முதல்முதலாக வடமாகாணாத்தில் நடைபெறுவது என்பது பெருமைக்குரியது.

வடக்கில் உள்ள மாணவர்களின் திறமைகளை விளையாட்டில் வெளிக்கொணர இதுவொரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.