மத்திய ஊவா சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள வாசிகசாலைகளுக்கு ஒரு தொகுதி புத்தகங்களை பெற்றுக் கொள்வதற்கான கோரிக்கை ஒன்றை கோயம்புத்தூர் மேற்கு ரோட்டறி கழகத்திடம் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதம் ஒன்றை கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் நேரடியாக கையளித்துள்ளார்.

கோயம்புத்தூர் ரோட்டறி கழக உறுப்பினர்கள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராமின் வேண்டுகோளுக்கு இணங்க அண்மையில் நுவரெலியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இந்த விஜயத்தின் பொழுது கலந்துரையாடல் ஒன்று நுவரெலியாவில் இடம்பெற்றது.

இந்த கலந்ததுரையாடலில்  கோயம்புத்தூர் மேற்கு ரோட்டறி கழகத்தின் உறுப்பினர்களான டி.ஏ.பிரபுசங்கர் (வக்கீல்) செயற்திட்ட தலைவர், பி.ஜெயகாந்தன் (இணைத் தலைவர்),எம்.பாஸ்கர் (முன்னால் துணை கவர்னர்),வி.எஸ்.சுதாகர் (கோவை ரோட்டறி சங்கத்தின் முன்னால் தலைவர்) மத்திய மாகாண சபையின் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, மத்திய ஊவா சப்ரகமுவ மாகாணங்களுக்கு வாசிகசாலைகளுக்கு ஒரு தொகுதி புத்தகங்களை பெற்றுக் கொள்வதற்கு கடிதம் மூலம் கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயம்புத்தூர் ரோட்டறி கழகத்தினர் ஏற்பாடு செய்யவுள்ளனர். அத்துடன் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராமின் ஏற்பாட்டின் பேரில் நுவரெலியா ரோட்டறி கழகத்திற்கு செயற்கை கைகள் 35 இவர்கள் ஊடாக கையளிக்கபட்டுள்ளது. கடந்த வருடம் கோயம்புத்தூர் ரோட்டறி கழகத்தினர் 25 கைகள் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

வழங்கப்பட்டுள்ள 35 செயற்கை கைகளையும் வசதி குறைந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நுவரெலியா ரோட்டறி கழகத்தின் தலைவர் ரெங்கராஜ் சதீஸ் தெரிவித்துள்ளார். இவ்வாறான தேவை உடையவர்கள் நுவரெலியா ரோட்டறி சங்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளதுடன், அதற்கான விண்ணப்ப படிவம் ஒன்றையும் தாங்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு அதனை கிராம உத்தியோகஸ்தர் ஊடாக உறுதிப்படுத்தி நுவரெலியா ரோட்டறி கழகத்திடம் கையளிக்க வேண்டும்.

அதன் பின்பு நுவரெலியா ரோட்டறி கழகத்தினர் இது தொடர்பான முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த கைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் நுவரெலியா ரோட்டறி கழகத்தின் தலைவர் ரெங்கராஜ் சதீஸ் தெரிவிக்கின்றார். மேலும் கோயம்புத்தூர் ரோட்டறி கழகத்தின் ஊடாக இருதய நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நுவரெலியா ரோட்டறி கழகம் நடவடிக்கைளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஸ்மாட் வகுப்புகளை நிர்மாணிப்பது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் குறித்த கோயம்புத்தூர் ரோட்டறி கழக உறுப்பினர்கள் புஸ்ஸல்லாவ இந்து தேசிய பாடசாலைக்கு விஜயம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்த செயற்திட்டத்தை கல்வி இராஜாங்க அமைச்சு நுவரெலியா ரோட்டறி கழகம் ஆகியன இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளது.