(எம்.மனோசித்ரா)
நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அமைச்சரை ஜனாதிபதி பகிரங்கமாகப் பாதுகாக்க முன்வந்துள்ளமையானது, இது ஒரு இரட்டை ஊழல் என்பதையே காட்டுகிறது. தகுதியற்ற நிறுவனங்களிடமிருந்து நிலக்கரி கொள்வனவு செய்ததன் மூலம் மக்களுக்குப் பாரிய பொருளாதாரச் சுமை சுமத்தப்பட்டுள்ளது. ஜே.வி.பி-க்குள் தைரியமான தலைவர்கள் இருந்தால் குறித்த அமைச்சரை பதவி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில் புதன்கிழமை (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வழக்கமாக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழும் போது, ஜனாதிபதிகள் தலையிட்டு அவர்களைப் பாதுகாப்பது அரிது. ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வரலாற்றில் முதல் முறையாக ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான வலுசக்தி அமைச்சரைப் பகிரங்கமாகப் பாதுகாக்க முன்வந்துள்ளார். இது ஒரு இரட்டை ஊழலாகும்.
தகுதியற்ற இந்திய நிறுவனம் ஒன்றுக்கு நிலக்கரி கொள்வனவுக்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக விலைமுறி கோரல் விதிகள் மாற்றப்பட்டன. அனுபவம் வாய்ந்த நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற விதியைத் தளர்த்தி, தகுதியற்ற நிறுவனங்களுக்கு வழிவகுத்ததன் மூலம் இந்த ஊழல் நடந்துள்ளது. 'நிலக்கரி தரம் குறைந்ததா எனச் சாப்பிட்டுப் பார்க்கவா?' என்று ஜனாதிபதி கேள்வியெழுப்புகின்றார். ஒரு நாட்டின் தலைவரிடம் இருந்து இத்தகைய பொறுப்பற்ற கேள்விகளை நாம் எதிர்பார்க்கவில்லை.
நிலக்கரி கப்பல்களில் இருந்து பெறப்பட வேண்டிய மாதிரிகள் முறையாகப் பரிசோதிக்கப்படவில்லை. அவ்வாறு செய்திருந்தால் தரக்குறைவான நிலக்கரிக்கு நஷ்டஈடு கோர முடியும். குறித்த நிறுவனத்தைப் பாதுகாக்கவும் தரகுப் பணம் பெறுவதற்குமே இந்த மாதிரிகளைப் பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. இதன் விளைவாக மின்சாரக் கட்டணம் பல மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் பொருளாதாரச் சுமையைச் சுமக்க நேரிடும்.
மக்கள் விடுதலை முன்னணியின் ஏனைய தலைவர்கள் இந்த அமைச்சரை நீக்கக் கோரினாலும், ஜனாதிபதி அவரைத் தொடர்ந்து பாதுகாத்து வருகின்றார்.
மேலும், சித்திரைப் புத்தாண்டு காலத்தில் எரிவாயு விலையை உயர்த்தியது மக்களின் கலாச்சார விழுமியங்களை மதிக்காத செயலாகும். ஜனாதிபதி பாராளுமன்றத்தில் பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் மிகக் குறைவானவை. அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க ஜே.வி.பி-க்குள் யாராவது தைரியமான தலைவர்கள் இருந்தால், இந்த ஊழல் அமைச்சரை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM