'நாட்டிய வைபவம்' : நாட்டிய கலா மந்திரின் 50 ஆண்டுகால கலைப்பயணம்

11 Apr, 2026 | 12:15 PM
image

(மனோகரன் பிரியங்கா)

கலை என்பது மனிதனின் அக உணர்வுகளையும் கற்பனைத் திறனையும் உடலாலும் உள்ளத்தாலும் ஒருங்கிணைத்து வெளிப்படுத்தும் ஒரு நுட்பமான திறன் ஆகும். இது ஓவியம், சிற்பம், இசை, நடனம், நாடகம், இலக்கியம் எனப் பல வடிவங்களில் வெளிப்பட்டு, சமூகத்தின் கலாசார அடையாளத்தையும் வரலாற்றையும் பறைசாற்றுகிறது.  

இலங்கையின் பரதநாட்டியத் துறையில் கடந்த அரை நூற்றாண்டு காலமாக மகத்தான சேவையாற்றி வரும் நாட்டிய கலா மந்திர் நடனப்பள்ளி, தனது 50 ஆண்டுகால கலைப்பயணத்தை முன்னிட்டு 'நாட்டிய வைபவம் 2026' என்ற பிரம்மாண்ட கலை நிகழ்வை, இந்திய - இலங்கை நட்புறவு மற்றும் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் ஆகியவற்றுடன் இணைந்து  ஏப்ரல் 5ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை தெஹிவளை எஸ். டி.எஸ். ஜயசிங்க மண்டபத்தில் நடத்தியது.  

நாட்டிய கலா மந்திர் நடனப்பள்ளியின் ஸ்தாபக இயக்குநரான “கலாசூரி”, “கலைமாமணி”, “ஆச்சார்ய கலாசாகர” வாசுகி ஜெகதீஸ்வரனின்  நெறியாள்கை மற்றும் அவருடைய சாதனைகள் நிறைந்த கலைப்பயணம் இந்த பிரம்மாண்ட கலை விழாவில்  மிக அழகிய அத்தியாயமாக அமைந்தது.

இந்த நிகழ்விற்கு தலைமை விருந்தினராக  கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதன்மைச் செயலாளர் சௌரப் சப்லோக் மற்றும் அவருடைய பாரியார் ஆகியோரும் கௌரவ விருந்தினராக கொழும்பு தமிழ்ச் சங்க தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான சுகந்தி ராஜகுலேந்திரா, விசேட விருந்தினர்களாக ஹற்றன் நேஷனல் வங்கி -வெள்ளவத்தை கிளையின்    சிரேஷ்ட முகாமையாளர் சுமதி சுப்ரமணியம் மற்றும் கொமர்ஷல் வங்கி -வெள்ளவத்தை கிளையின் சிரேஷ்ட முகாமையாளர் கஜரூபன் தபோ முதலானோரும், கலை ஆர்வலர்கள், பெற்றோர்கள், கலைஞர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த நாட்டிய வைபவத்தில் பல்வேறு நடன அம்சங்கள் நிகழ்த்தப்பட்டன.

மல்லாரி

மங்கல நாத ஒலியுடன் உற்சவ மூர்த்தியின் எழில்மிகு திருவுலாவினை ஆரம்பித்து வைக்கும் முகமாக இசைக்கப்படுகின்ற அம்சம் மல்லாரி. பொதுவாக கம்பீர நாட்டை ராகத்தினை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்படும் மல்லாரி, நடன மார்க்கத்தின் சுத்த நிருத்தத்தினை வெளிப்படுத்தும் முதன்மை அம்சமாகக் காணப்படுகின்றது.

மல்லாரியுடன் இணைந்து நாட்டியாஞ்சலி அம்சம் மற்றும் 'துன்பமில்லாத நிலையே சக்தி' எனும் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கவி வரிகளை மேற்கோள் காட்டும் வகையிலும் அமைகிறது.  

விநாயகர் ஸ்துதி

கோடி சூரியர்களின் பிரகாசத்தைக் கொண்டுள்ள விநாயகப் பெருமான், புராணங்களிலே விக்னகர்த்தாவாகவும் விக்னஹர்த்தாவாகவும் விவரிக்கப்படுகின்றார்.

அதாவது ஆன்மாக்களின் மேன்மைக்காகத் தடைகளை உருவாக்குபவரும், அந்தத் தடைகளின் மூலம் ஞானத்தினை உணர்த்தி, தடைகளை அகற்றி வெற்றிக்கான வழியினை உருவாக்குபவரும் வேழமுகத்து விநாயகப் பெருமானே என்பது நம்பிக்கை. 

அத்தகைய ஒப்பற்ற தெய்வமான விநாயகப் பெருமானைத் துதிக்கும் விதமாக அமையும் விநாயகர் ஸ்துதி, ஹம்சத்வனி ராகத்தில் ஆதி தாளத்தில் இயற்றப்பட்டுள்ளது.  

கணேச பஞ்சரத்னம்  

ஐந்து வகை ரத்தினங்களைப் போன்ற இசை மணிகளால், கணங்களின் நாயகனை அலங்கரிக்கும் அம்சமே கணேச பஞ்சரத்னம். கணேச பஞ்சரத்னம்  ஷண்மத ஸ்தாபகராகப் போற்றப்படும் ஜகத்குரு ஆதிசங்கரரால் இயற்றப்பட்டது.  

மகா காளி

அனைத்துக்கும் ஆதாரமாகவும், அண்டசராசரங்களின் அளவற்ற ஆற்றலாகவும் திகழ்பவள் ஆதி பராசக்தி. தொடக்கமும் முடிவும் இல்லா பேராற்றலாக விளங்குகின்ற அம்பிகையின் உக்ர சொரூபமே மகா காளி.

தனது பக்தர்களின் துன்பங்களைக் களைந்து, சங்கடம் நீக்கிப் பாதுகாப்பினை வழங்குபவள் அன்னை மகா காளி. ஆத்ய மகா காளியின் அன்பு நிறைந்த அனுக்ரகத்தினை கலை நயத்துடன் எடுத்துக்காட்டுகின்றது இந்த ஆடல் அம்சம்.

'மாடு மேய்க்கும் கண்ணே'

பாலகிருஷ்ணனுக்கும் அவனது தாயார் யசோதரைக்கும் இடையிலான அன்பு நிறைந்த சம்பாஷணையை வெளிப்படுத்தும் வகையிலான வரிகளைக் கொண்ட பாடலுக்கான நடனம் அடுத்ததாக நடைபெற்றது.  

செஞ்சுருட்டி ராகத்தில் திஸ்ர நடையில் 'மாடு மேய்க்கும் கண்ணே...' என்று ஆரம்பிக்கும் மிகவும் பிரபலமான இந்தப் பாடல், புகழ்பெற்ற கர்நாடக சங்கீத வாக்கேயகாரரான ஊத்துக்காடு வெங்கட சுப்பையரால் இயற்றப்பட்டுள்ளது.  

“ஆடும் சிதம்பரமோ”

பெஹாக் (Behag) ராகத்தில் ஆதி தாளத்தில் “ஆடும் சிதம்பரமோ...” பாடலுக்கான நடனமும் நிகழ்த்தப்பட்டது. சிதம்பர நடராஜரின் புகழ் பாடுகின்ற கோபாலகிருஷ்ண பாரதியின் கற்பனையில் தோன்றிய பிரபலமான வரிகளோடு இன்னிசையும் அழகிய ஆடலும் இணைகின்ற அம்சமாக இந்த நடனம் விளங்கியது.

வர்ணம்  

பரதநாட்டிய மார்க்கத்தின் அதிமுக்கியமான இடத்தைப் பெறும் அம்சமாக வர்ணம் திகழ்கிறது. சீரான இசை, நடன அமைப்பாக, “இன்னும் என் மனம் அறியாதவர் போல் இருந்திடல் நியாயமா யாதவா மாதவா...” என்ற வரிகளோடு ஆரம்பிக்கும் வர்ணம் ஆடப்பட்டது. சாருகேசி ராகத்தில் ஆதி தாளத்தில் அமைந்த இந்த வர்ணத்தை இயற்றியவர் பத்மபூஷண் லால்குடி ஜி.ஜெயராமன்.

ஜனனி ஸ்துதி

ஆதிபராசக்தியின் அம்சமான அன்னை ஜனனியைப் போற்றுவதாக “ஜனனி ஸ்துதி” ஆடல் அமைந்தது.

மஹாதேவா

சிவம் பரம்பொருளின் ஈடு இணையற்ற கருணை மற்றும் குணக்குறிகளை கடந்த களங்கமற்ற பரமாத்மா எனும் உன்னத நிலையை எடுத்தியம்பிய இந்த ஆடல், அண்மைக்காலங்களில் சமூக ஊடகங்கள் மூலம் மிகவும் பிரபலமான கன்னட மொழியில் அமைந்த சிவபக்தி பாடலுக்காக அமைக்கப்பட்டிருந்தது. 

“வந்தே மாதரம்”

வங்காளத்தைச் சேர்ந்த பங்கிம் சந்திர சட்டர்ஜி எனும் தேசப்பற்று மிகுந்த கவிஞரால் இயற்றப்பட்டு இன்று வரை இந்தியர்கள் அனைவராலும் பெருமையுடன் இப்பாடல் இசைக்கப்பட்டு வருகின்றது. உணர்வுபூர்வமான தேஷ் ராகத்தில் அமைந்துள்ள இந்தப் பாடலோடு, உலகளவில் மிகவும் பிரபல்யம் பெற்றுள்ள ஒஸ்கர் நாயகன், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்  இசையமைப்பில் உருவான சமகாலப் புத்தாக்க வடிவத்துடன் கூடிய பாடலும் ஒருங்கிணைக்கப்பட்டு ஆடல் கலைஞர்களால் ஆற்றுகைப்படுத்தப்பட்டது.

இந்த ஆற்றுகை இம்முறை கொழும்பில் நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவிலும் மேடையேற்றப்பட்டு பாராட்டு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தில்லானா, மங்கலம்

இறுதி நடனமாக, ஐம்புலன்களையும் கவரும் வகையில் தில்லானா, மங்கலம் நிகழ்த்தப்பட்டன.  ஹிந்தோள ராகத்தில் ஆதி தாளத்தில் அமைந்துள்ள தில்லானாவைத் தொடர்ந்து, மங்கலம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில்  தலைமை விருந்தினராக கலந்துகொண்ட கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகராலய முதன்மைச் செயலாளர் சௌரப் சப்லோக் உரையாற்றுகையில்,

இந்திய கலாசார உறவுகளுக்கான பேரவையின் (ICCR) ஊடாக, இலங்கையில் இந்திய பாரம்பரிய கலை மற்றும் கலாசாரத்தை மேம்படுத்தும் நாட்டிய கலா மந்திரின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்தியாவும் இலங்கையும் பல நூற்றாண்டுகால ஆழமான வரலாற்று மற்றும் நாகரிகத் தொடர்புகளைப் பகிர்ந்துகொள்கின்றன. இது பொதுவான பாரம்பரியங்கள், கலாசாரம், மதம், மொழி மற்றும் கலை மரபுகளை அடிப்படையாகக் கொண்டது.

பரதநாட்டியம் போன்ற பாரம்பரிய நடன வடிவங்கள் இந்தப் பகிரப்பட்ட கலாசார பாரம்பரியத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.

இன்றைய மாலைப்பொழுது, இலங்கையில் பரதநாட்டியத்தை மேம்படுத்துவதிலும், பல தலைமுறை நடனக் கலைஞர்களை உருவாக்குவதிலும் முன்னோடியாகத் திகழும் வாசுகி ஜெகதீஸ்வரனின் வாழ்நாள் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பிற்கு ஒரு கௌரவமாகும்.

ஒரு கலைஞராகவும் ஆசிரியராகவும் அவர் ஆற்றிய பணிகள் பாராட்டத்தக்கவை. எமது பல நிகழ்வுகளில் அவருடன் இணைந்து பணியாற்றும் பெருமையையும் கௌரவத்தையும் நாங்கள் பெற்றுள்ளோம்.

நிகழ்வில் நடனமாடிய இளம் நடனக் கலைஞர்களுக்கு நான் கூற விரும்புவது என்னவென்றால், உங்கள் திறமை வியக்கத்தக்கது. இந்தக் கலை வடிவத்தின் மூலம் நீங்கள் நடனத்தை மட்டும் கற்கவில்லை.

ஒழுக்கம், நளினம், அர்ப்பணிப்பு மற்றும் பாரம்பரியத்தின் மீதான மரியாதையையும் கற்றுக்கொள்கிறீர்கள்” என்று கூறி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கவிப்பொழிவும் பட்டிமண்டபமும் : 'கம்பன் விழா...

2026-05-02 10:37:46
news-image

மனித நேயமிக்க ஆளுமை கே.பொன்னுத்துரையின் அகவை...

2026-04-21 11:21:21
news-image

மிகவும் சிறந்த  ஆஷா போஸ்லேவின் சில...

2026-04-13 20:56:05
news-image

தமிழைத் தமிழாக உலக அரங்கில் எடுத்துச்...

2026-04-11 18:56:28
news-image

'நாட்டிய வைபவம்' : நாட்டிய கலா...

2026-04-11 12:15:17
news-image

சிகரத் தரணியாம் கம்பளை நகர் காக்கும்...

2026-03-25 13:35:47
news-image

பசி வாட்டத்தில் குழந்தைகள், வறுமையோடு போராடும்...

2026-03-21 18:02:00
news-image

நாட்டிய வைபவம்

2026-03-19 10:57:50
news-image

இலங்கை - இந்திய பூர்வீகத் தொடர்பு:...

2026-03-14 13:52:02
news-image

எங்கிருந்தோ வரும் ஆற்றலை வெளிப்படுத்தும் ஒரு...

2026-03-06 18:55:07
news-image

‘இலங்கையில் இராமாயணம்’ நூல் விமர்சனம்

2026-03-01 17:18:39
news-image

பஞ்சரத்தினக் கீர்த்தனைகளால் நெகிழ்ந்த அரங்கம்! - ...

2026-02-22 12:55:08