பைக்கர் - திரைப்பட விமர்சனம்

06 Apr, 2026 | 04:45 PM
image

பைக்கர் - திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : யு வி கிரியேஷன்ஸ்

நடிகர்கள் : சர்வானந்த், மாளவிகா நாயர், ராஜசேகர், நிரூப், அதுல் குல்கர்னி , பிரம்மாஜி, துளசி மற்றும் பலர்

இயக்கம் : அபிலாஷ் ரெட்டி

மதிப்பீடு : 3/5

இந்தியாவில் தயாரான முதல் துவிச் சக்கர வாகன பந்தய விளையாட்டு தொடர்பான திரைப்படம் என்பதாலும்.. இப்படத்திற்காக நாயகன் சர்வானந்த் 20 கிலோவிற்கு மேல் எடையை குறைத்து நடித்திருக்கிறார் என்பதாலும் படத்தை படமாளிகையில் காண வேண்டும் என்ற ஆர்வம் பார்வையாளர்களிடத்தில் எழுந்தது. அவர்களது ஆர்வம் மகிழ்ச்சியாக இருந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

விக்கி@ விகாஸ் நாராயணன் ( சர்வானந்த்) தனது மனைவி அனன்யா( மாளவிகா நாயர்) மற்றும் பிள்ளை இஷானுடன் ( மாஸ்டர் சௌர்யா) ஹைதராபாத்தில் அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இவர் கோ- கார்ட்டிங் ( Go-Karting) எனும் பொழுதுபோக்கு விளையாட்டு மையத்தை நடத்தி வருகிறார். அவரது வாழ்க்கை தற்போது இயல்பாக இருந்தாலும்.. கடந்த காலத்தில் அவர் ஒரு முன்னுதாரணமான துவி சக்கர வாகன பந்தய வீரராக திகழ்ந்தவர். இவருக்கு இவருடைய தந்தை சுனில் நாராயன் ( ராஜசேகர் )தான் குரு மற்றும் வழிகாட்டி. தவிர்க்க முடியாத ஒரு சூழலில் துவி சக்கர வாகன பந்தய விளையாட்டில் இருந்து விலகுகிறார் விக்கி.  இதனைத் தொடர்ந்து கொர்ப்பரேட் நிறுவனம் ஒன்றின் மோசடி வழக்கில் சிக்கி 'மோசடிக்காரர்' என்றும், 'துரோகி' என்றும் முத்திரை குத்தப்பட்டு, துவி சக்கர வாகன பந்தய வீரர்களுக்கான பயிற்சியாளர் பணியையும் துறந்த தனது தந்தையும், வழிகாட்டியுமான சுனில் நாராயன் - இத்துறைக்கு மீண்டும் திரும்புவதை அறிந்து கொள்கிறார் விக்கி.  வாழ்க்கையில் தன்னால் தனது தந்தைக்கு ஏற்பட்ட அவமானத்தை நீக்குவதற்காக இந்த முறை அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறார். இந்நிலையில் அவருடைய விருப்பத்தை தந்தையும், வழிகாட்டியுமான சுனில் ஏற்றுக் கொண்டாரா? அவர் பந்தயத்திலிருந்து விலகியதற்கான காரணம் என்ன? இருவருக்கும் இடையே நிகழ்ந்த மோதல் என்ன? மீண்டும் துவி சக்கர வாகன பந்தய விளையாட்டுக்குள் ஈடுபடும்போது அவர் எதிர்கொண்ட சவால்கள் என்ன? என்பதை விவரிக்கிறது இப்படத்தின் கதை.

துவி சக்கர வாகன பந்தய விளையாட்டு தொடர்பான காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது. அதில் உள்ள தொழில்நுட்பமான விடயங்கள் பார்வையாளர்களுக்கு விளக்குவதும் அது தொடர்பான எதிர்வினையும் அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கிறது.

விளையாட்டு தொடர்பான படைப்பு என்பதால் அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள வழமையான சட்டகத்திற்குள் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும்.. அதனை சின்ன சின்ன சுவராசியமான திருப்பங்களுடன் விவரிக்கப்பட்டிருப்பதால்.. படத்துடன் எளிதாக தொடர்பு கொண்டு பயணிக்க முடிகிறது.

விக்கி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சர்வானந்த் இளைஞனாகவும் , பொறுப்புள்ள குடும்பத் தலைவனாகவும் இரண்டு வெவ்வேறு தோற்றத்திற்காக கடுமையாக உழைத்து ரசிகர்களை எளிதாக கவர்கிறார்.

சுனில் நாராயன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மூத்த நடிகர் ராஜசேகரும் தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து அலட்டிக் கொள்ளாமல் நிதானமாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்.

அனன்யா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை மாளவிகா நாயரும் தன்னுடைய இளமையால் ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் நடிகர் நிரூப்- சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்கிறார்.

இதுபோன்ற படங்களில் ஒளிப்பதிவு - படத்தொகுப்பு - பின்னணி இசை - ஆகிய மூன்றும் ஜீவ நாடியாகும். இதை தொழில்நுட்ப கலைஞர்கள் இயக்குநரின் வழிகாட்டலுடன் அற்புதமாக உழைத்து ரசிகர்களின் பாராட்டை பெறுகிறார்கள். 

ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் படக் குழுவினர் அற்புதமான படமாளிகை அனுபவத் தருணங்களை வழங்குகிறார்கள். அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற ஹொலிவுட் திரைப்படமான 'எஃப் 1 ' படத்தின் சாயல் இருந்தாலும் அதை இந்திய குடும்ப அமைப்பின் ஊடாக வலிமையாக விவரிக்கப்பட்டிருப்பதால் ரசிக்க முடிகிறது.

பைக்கர் -  குடும்பங்கள் கொண்டாடும் துவி சக்கர வாகன பந்தய விளையாட்டு.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right