மத்திய கிழக்கு மோதல் விவகாரத்தில் நடுநிலைமை போக்கே சரியானது

29 Mar, 2026 | 11:34 AM
image

மத்திய கிழக்கு மோதல் விவகாரத்தில் எந்தப் பக்கமும் சாராது நடுநிலையாக செயற்பட்டு வருவதாக அரசாங்கம் கூறி வருகின்றது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் உட்பட்டோர் இந்த விடயத்தை அடிக்கடி வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், எதிர்க்கட்சியினரோ அரசாங்கமானது மத்திய கிழக்கு மோதல் விவகாரத்தில் உரிய வகையில் செயற்படவில்லை என்றும் நழுவல் போக்கையே அரசாங்கமும் கடைப்பிடித்து வருவதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட பல கட்சிகளின் தலைவர்களும் மத்திய கிழக்கு மோதல் நிலை தொடர்பான அரசாங்கத்தின் செயற்பாட்டை விமர்சித்து வருகின்றனர்.

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை அரசாங்கம் கண்டிக்கவில்லை என்றும் இந்த விடயத்தில் தனது நிலைபாட்டை உரிய வகையில் அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை எனவும் இவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், “மத்திய கிழக்கு யுத்தத்தில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெரிவிப்பதற்கு தயங்கக் கூடாது. அரசாங்கம் இந்த விடயத்தில் நழுவல் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றது.

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் தற்போது உலகளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. சர்வாதிகார முறைமையிலேயே ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது. ஈரான் மீது தாக்குதல் நடத்த எந்தக் காரணமும் இவர்களுக்கில்லை. அவர்களது ஆட்சி பிடிக்கவில்லை என்பதற்காகவே அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி அவர்களது ஆன்மீகத் தலைவரை கொலை செய்திருக்கிறது. இந்த இரண்டு நாடுகளும் அத்துமீறியே செயற்பட்டு வருகின்றன” என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேபோன்றே அமெரிக்காவின் தாக்குதல் தொடர்பான செயற்பாட்டை அரசாங்கம் கண்டிக்க வேண்டும். அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியை சேர்ந்த பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனாலும் மத்திய கிழக்கு மோதல் விவகாரத்தில் அரசாங்கமானது எந்தவொரு தரப்பினருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்று பாராளுமன்றத்தில் கடந்த 19ஆம் திகதி எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து உரையாற்றியிருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் சுட்டிக்காட்டியிருந்தார்.

“மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்தத்தில் எந்தத் தரப்பினருக்கும் நாங்கள் ஆதரவளிக்கப் போவதில்லை. நடுநிலையான கொள்கையுடன் எப்போதும் உலக சமாதானத்துக்காக நாங்கள் தலையீடுகளை மேற்கொள்வோம். அதன் பிரகாரம் எமது வெளிவிவகார கொள்கையை நிலையாக பேணி வருகின்றோம்” என்று அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்திருந்தார்.

இதேபோன்றே கடந்த 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் மத்திய கிழக்கு நிலைமைகள் தொடர்பில் உரையாற்றியிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும், “மத்திய கிழக்கு யுத்த சூழலில் எமது நாட்டுக்கு எந்த அழுத்தங்கள் வந்தாலும் அடிபணிய மாட்டோம். அவ்வாறு அடிபணிந்திருந்தால் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரண்டு போர் விமானங்களுக்கு மத்தள விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு அனுமதிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்திருக்கமாட்டோம். நாம் பக்கச்சார்பாக நடந்திருந்தால் மத்திய கிழக்குப் போர் மத்தள மற்றும் கொழும்பு துறைமுகத்திலும் இடம்பெற்றிருக்கும்” என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

“நாங்கள் ஒரு குழுவுக்கு சார்பாக இருக்கின்றோம் என்றும், சில தீர்மானங்களை தேவையான நேரங்களில் எடுக்கவில்லை எனவும் சிலர் குற்றம்சாட்டுகின்றனர். இது முற்றிலும் பொய்யாகும். குறிப்பாக, ஈரான் கப்பல் விடயத்தில் மூன்று கப்பல்கள் நாட்டுக்கு நல்லெண்ண விஜயத்தை மேற்கொள்ள பெப்ரவரி 26ஆம் திகதி கோரிக்கை விடுக்கப்பட்டது. அது தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து வந்த நிலையில் அன்றைய தினத்திலேயே மாலை ஐக்கிய அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரண்டு தாக்குதல் விமானங்களுக்கு மத்தள விமான நிலையத்தில் அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. நாங்கள் நடுநிலையாக இருந்து போர் மூளும் சூழல் நிலவியதால் இரண்டு தரப்பினருக்கும் அனுமதியை வழங்கியிருக்கவில்லை” என்றும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இலங்கைக்கு நட்புறவு விஜயம் மேற்கொள்ள ஈரானிய கப்பல்கள் மூன்று அனுமதி கோரியதாகவும் அதற்கு தாம் அனுமதி வழங்கவில்லை என்றும் அதேபோன்றே அமெரிக்காவின் போர் விமானங்கள் இரண்டு தரையிறங்குவதற்கும் தாம் அனுமதிக்கவில்லை எனவும் ஜனாதிபதி கூறியிருக்கின்றார்.

இதன்மூலம் அரசாங்கமானது மத்திய கிழக்கு மோதல் விடயத்தில் எந்தப் பக்கமும் சாராது நடுநிலையாகவே செயற்பட்டு வருகின்றது என்பதை ஜனாதிபதி நிரூபிக்க முயன்றிருக்கிறார்.

உண்மையிலேயே ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்த விடயத்தில் இலங்கையானது ஒரு போதும் பக்கச்சார்பாக செயற்பட முடியாது. அவ்வாறு செயற்பட்டால் அது பாரதூரமான விளைவுகளை நிச்சயமாக ஏற்படுத்தி விடும்.

எமது நாடு அபிவிருத்தியடைந்துவரும் நிலையில் காணப்படுவதால் சர்வதேசத்தின் உதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டியதன் அவசியம் காணப்படுகின்றது. அமெரிக்காவுடனும் ஈரானுடனும் நல்லுறவுகளை வைத்துக் கொண்டு அவர்களின் உதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவைப்பாடும் காணப்படுகின்றது.

அண்மையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சர்வதேசளவில் தமது வரி விதிப்புகளை அதிகரித்தமையினால் நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்திருந்தன. இலங்கையும் அந்த விடயத்தில் பெரும் பாதிப்புகளை சந்தித்தது. இருந்தபோதிலும் கலந்துரையாடல்களின் மூலம் வரியின் அளவு குறைக்கப்பட்டிருக்கின்றது.

இதேபோன்றே ஈரானும் இலங்கைக்கு பல்வேறு விடயங்களில் உதவிகளை செய்திருக்கின்றது. பல்வேறு திட்டங்களுக்கு நிதியுதவிகளை வழங்கியிருக்கின்றது. 

அமெரிக்காவுடனும் ஈரானுடனும் இலங்கை தொடர்ந்தும் நட்புறவுகளை பேணி வருகின்றது.

இந்த நிலையில் மத்திய கிழக்கு மோதல் விடயத்தில் எந்தப் பக்கமும் சார்ந்து செயற்படுவது என்பது நாட்டுக்கு பாதகத்தையே ஏற்படுத்தும். அந்த விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எடுத்து வரும் நிலைப்பாடு சரியானது.

இலங்கை கடற்பரப்புக்கு அருகில் ஈரானிய போர்க் கப்பலான ஐ.ஆர்.ஐ.எஸ். டெனா தாக்குதலுக்கு உள்ளானதையடுத்து இலங்கையானது மீட்புப் பணிகளை மேற்கொண்டிருந்தது. தாக்குதலில் கொல்லப்பட்டிருந்த 84 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதுடன் 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டிருந்தனர்.

இதேபோன்றே ஈரானின் மத்திய கப்பலான ஐ.ஆர்.ஐ.எஸ். புஷெர் கப்பலிலிருந்து கோரப்பட்டமையினால் அதிலிருந்த ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கைக்குள் வரவழைக்கப்பட்டனர். தற்போது இவர்கள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த விடயத்திலும் மனிதாபிமான ரீதியில் அரசாங்கம் செயற்பட்டிருக்கின்றது. ஆனாலும் ஈரானிய கப்பலிலிருந்து மீட்கப்பட்டவர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்பக் கூடாது என்று அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. பின்னர் இலங்கையின் இறையாண்மையை மதிப்பதாக அமெரிக்க தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

மத்திய கிழக்கு மோதல் விவகாரத்தில் இரு தரப்பினரையும் பகைக்காது செயற்படுவதே சரியான நடவடிக்கையாகும். அந்த விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடு பாராட்டத்தக்கதாகவே அமைந்திருக்கின்றன.

இதனால்தான் சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர் மாநாடொன்றை நடத்திய ஈரானிய தூதுவர் அலிரெஸா டெல்கோஷ், இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நட்பு நாடுகளின் ஒன்றாகும். இரு நாடுகளுக்குமிடையில் நீண்டகாலமாக வலுவான ஒத்துழைப்பு பேணப்பட்டு வருகின்றது. அதற்கமைய மோதல் தீவிரமடைந்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை வழங்குமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்தால் அவற்றை விநியோகிப்பதற்கு ஈரான் தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.

இதேபோன்றே அமெரிக்காவும் இலங்கையின் இறையாண்மையை மதிப்பதாக சுட்டிக்காட்டியிருந்தது. இரு தரப்பையும் பகைக்காது நடுநிலைமையுடன் செயற்படுவதே இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு உள்ள ஒரே வழியாகும். அதன் மூலமே மோதலால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை தவிர்க்க முடியும் என்பதை அனைவரும் உணர்ந்துகொள்வது நல்லது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநிறுத்துங்கள்

2026-04-11 18:26:09
news-image

தமிழ்த் தேசியக் கட்­சி­க­ளுக்­கி­டையில் பொது இணக்­கப்­பாடு...

2026-04-05 10:38:09
news-image

மத்திய கிழக்கு மோதல் விவகாரத்தில் நடுநிலைமை...

2026-03-29 11:34:39
news-image

எரி­சக்தி நெருக்­க­டிக்கு தீர்வு காண்­ப­தற்கு தேசிய...

2026-03-22 15:06:40
news-image

உலகளாவிய நெருக்கடியை சந்திக்க தயாராக வேண்டும்

2026-03-15 13:55:18
news-image

தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள இணக்கம்...

2026-03-08 12:09:56
news-image

புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­கா­ரத்தில் அக்­க­றை­யற்­றி­ருக்கும் அர­சாங்கம்

2026-03-01 12:37:43
news-image

இன ஒற்றுமைக்கான செயற்பாட்டுடன் தமிழர் பிரச்சினைக்கு...

2026-02-23 11:17:39
news-image

தமிழ் மக்­களின் உணர்­வு­களை புரிந்­து­கொள்­வது அவ­சியம்

2026-02-15 16:24:39
news-image

இரு துருவ நிலைப்பாட்டினை இல்லாதொழிக்க வழி...

2026-02-08 07:13:22
news-image

மௌனிக்கப்படுகிறதா ஜனநாயக உரிமை?

2026-02-01 10:00:29
news-image

அரசியல் தீர்வு திட்டவரைவை ஒன்றிணைந்து தயாரிக்க...

2026-01-25 11:17:06