(மனோகரன் பிரியங்கா)
2025ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எமது கொழும்பு சர்வதேச வளாகம் (Colombo International Campus) (CIC), மிகக் குறுகிய காலத்தில் ஒரு பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. பிரித்தானியாவின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஈஸ்ட் ஆங்கிலியா பல்கலைக்கழகத்துடன் (University Of East Anglia) (UEA) இன்று நாம் அதிகாரபூர்வமாக இணைந்துள்ளோம் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என கொழும்பு சர்வதேச வளாகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி - CEO நிஷான் சென்பகுட்டியாராச்சி தெரிவித்தார்.
இலங்கையின் உயர் கல்வித்துறையின் மேம்பாட்டுக்காக கொழும்பு சர்வதேச வளாகம் (Colombo International Campus) (CIC) மற்றும் பிரித்தானியாவின் ஈஸ்ட் ஆங்கிலியா பல்கலைக்கழகத்துடன் (University of East Anglia, UK) இணைந்து உத்தியோகபூர்வ கூட்டுப்பங்காண்மை அறிமுக விழா கொழும்பு சர்வதேச வளாகத்தில் திங்கட்கிழமை (23) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நிஷான் சென்பகுட்டியாராச்சி இவ்வாறு தெரிவித்தார்.


இந்த உத்தியோகபூர்வ கூட்டுப்பங்காண்மை அறிமுக விழாவில் பிரித்தானியாவிலிருந்து வருகை தந்த ஈஸ்ட் ஆங்கிலியா பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உபவேந்தர் பேராசிரியர் ஸ்டீவன் மாகுவேர் (Steven McGuire), அறிவியல் பீட இணை தலைவர் பேராசிரியர் ஸ்டீபன் லேகாக் (Stephen Laycock), கலை மற்றும் மானுடவியல் பீடத்தின் இணைத் தலைவர் டாக்டர் தோமஸ் ரோபக் (Thomas Roebuck), சமூக அறிவியல் பீட சர்வதேசமயமாக்கல் இணை தலைவர் டாக்டர் லூசில் கர்டிஸ் (Dr. Lucille Curtis), தெற்காசிய பிராந்திய தலைவர் அஞ்சனா சிங் (Anjana Singh), கொழும்பு சர்வதேச வளாகத்தின் பணிப்பாளர் அம்ரித் வீரசேகர, கொழும்பு சர்வதேச வளாகத்தின் பணிப்பாளர் சுரேஷ் குணசேகர, கொழும்பு சர்வதேச வளாகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி - CEO நிஷான் சென்பகுட்டியாராச்சி, இலங்கைக்கான பிரிட்டிஷ் கவுன்சில் இயக்குநர் ஆர்லாண்டோ எட்வர்ட்ஸ், கண்டி திரித்துவக் கல்லூரியின் முன்னாள் அதிபர் ஆண்ட்ரூ பௌலர் வாட், பெருநிறுவனங்கள் மற்றும் வளாகப் பணிப்பாளர் நிஷிகா ஹசீம், பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டுப் பிரிவின் பிரதித் தலைவர் அசந்தி பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பிரித்தானியாவிலிருந்து வருகை தந்த ஈஸ்ட் ஆங்கிலியா பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உப வேந்தர் பேராசிரியர் ஸ்டீவன் மாகுவேர் (Steven McGuire), அறிவியல் பீட இணைத் தலைவர் பேராசிரியர் ஸ்டீபன் லேகாக் (Stephen Laycock), கலை மற்றும் மானுடவியல் பீடத்தின் இணைத் தலைவர் டாக்டர் தோமஸ் ரோபக் (Thomas Roebuck), சமூக அறிவியல் பீட சர்வதேசமயமாக்கல் இணை தலைவர் டாக்டர் லூசில் கர்டிஸ் (Dr. Lucille Curtis) ஆகியோருக்கு நினைவுச் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டன.




இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த கொழும்பு சர்வதேச வளாகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி - CEO நிஷான் சென்பகுட்டியாராச்சி,
முதலில், யுனிவர்சிட்டி ஒஃப் ஈஸ்ட் ஆங்கிலியாவிலிருந்து (University of East Anglia - UEA) வருகை தந்துள்ள எமது கௌரவ விருந்தினர்களை நான் வரவேற்கிறேன்.
2025ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எமது கொழும்பு சர்வதேச வளாகம், மிகக் குறுகிய காலத்தில் ஒரு பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது.
உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான யுனிவர்சிட்டி ஒஃப் ஈஸ்ட் ஆங்கிலியாவுடன் (UEA) இன்று நாம் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளோம் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
கொழும்பு சர்வதேச வளாகம் 2026ஆம் ஆண்டின் முழுமையான பல்கலைக்கழக வழிகாட்டியின்படி, இது இங்கிலாந்தில் 26வது இடத்தில் உள்ளது. ஆராய்ச்சி தரத்தில் இங்கிலாந்தின் முதல் 25 இடங்களுக்குள் உள்ளது.
டைம்ஸ் இதழின் உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் 156வது இடத்தில் உள்ளது. QS உலக தரவரிசையில் 360வது இடத்தில் உள்ளது.
இந்தக் கூட்டணியின் மூலம், இலங்கையிலேயே சர்வதேச தரத்திலான இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை மாணவர்கள் பயில முடியும்.
ஆரம்பத்தில் வணிகம் (Business) மற்றும் தகவல் தொழில்நுட்பம் (IT) சார்ந்த படிப்புகள் வழங்கப்படும்.
தொடர்ந்து உளவியல் (Psychology), சட்டம் (Law), பொறியியல் (Engineering), உயிரி மருத்துவ அறிவியல் (Biomedical Sciences) மற்றும் கலைப்பிரிவு படிப்புகளும் அறிமுகப்படுத்தப்படும்.
முதற்கட்ட கற்பித்தல் நடவடிக்கைகள் 2027 ஜனவரி மாதம் தொடங்கும். மாணவர் சேர்க்கை (Enrollment) அதற்கு முன்னதாகவே ஆரம்பமாகும்.
எமது நோக்கம் இலங்கையிலேயே உலகத்தரம் வாய்ந்த பட்டதாரிகளை உருவாக்குவதும், எமது தலைமுறைக்கு கிடைக்காத சிறந்த கல்வி வாய்ப்புகளை இன்றைய இளைஞர்களுக்கு வழங்குவதும் ஆகும் என்றார்.
இலங்கைக்கான பிரிட்டிஷ் கவுன்சில் இயக்குனர் ஆர்லாண்டோ எட்வர்ட்ஸ் கருத்து தெரிவிக்கையில்,

பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் இலங்கையில் உள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலயம் ஆகியவற்றின் சார்பாக, யுனிவர்சிட்டி ஒஃப் ஈஸ்ட் ஆங்கிலியா (UEA) மற்றும் கொழும்பு சர்வதேச வளாகம் (CIC) இடையிலான இந்த மிக முக்கியமான கூட்டணியை முன்னிட்டு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
UEA மற்றும் CIC இடையிலான இந்த உறவு, இலங்கையின் உயர்கல்வித் துறைக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும். பிரிட்டிஷ் கவுன்சில் எப்பொழுதும் இங்கிலாந்து மற்றும் இலங்கைக்கு இடையிலான கல்விப் பரிமாற்றங்களை ஊக்குவித்து வருகிறது. இத்தகைய கூட்டணிகள் மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வியை உள்நாட்டிலேயே பெற்றுக்கொள்ள வழிவகுக்கின்றன.
பிரித்தானியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான UEA, இலங்கையின் CIC உடன் இணைந்து செயற்படுவது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால கல்வித் தொடர்பை மேலும் பலப்படுத்துகிறது.
இலங்கை மாணவர்கள் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புகளைப் பெறுவதற்கும், உலகளாவிய ரீதியில் தங்களை நிலைநிறுத்திக்கொள்வதற்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த முயற்சி வெற்றியடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றார்.
பிரித்தானியா ஈஸ்ட் ஆங்கிலியா பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உப வேந்தர் பேராசிரியர் ஸ்டீவன் மாகுவேர் கருத்து தெரிவிக்கையில்,

இன்று இந்த மேடையில் நின்று கொழும்பு சர்வதேச வளாகத்துடன் (CIC) எமது உத்தியோகபூர்வ கூட்டாண்மையை அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
யுனிவர்சிட்டி ஒஃப் ஈஸ்ட் ஆங்கிலியா (UEA) நீண்ட காலமாக இலங்கை மாணவர்களுடன் ஒரு சிறந்த உறவைக் கொண்டுள்ளது.
எமது பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற பல இலங்கை மாணவர்கள் இன்று உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள்.
அந்தத் தொடர்பை மேலும் ஒரு படி மேலே கொண்டு செல்வதே இந்த புதிய முயற்சியின் நோக்கமாகும்.
இலங்கையில் உள்ள திறமையான மாணவர்களுக்கு சர்வதேச தரத்திலான கல்வியை, அவர்கள் தங்கியுள்ள இடத்திலேயே வழங்குவது.
மாணவர்களுக்கு வெறும் பட்டப்படிப்பை மட்டும் வழங்காமல், அவர்களுக்கு உலகளாவிய வேலைவாய்ப்புகளுக்குத் தேவையான திறன்களையும், ஆராய்ச்சி அடிப்படையிலான அறிவையும் வழங்குவதே எமது இலக்கு.
எமது பல்கலைக்கழகம் உலகத் தரம் வரிசையில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளது. அதே தரத்தையும், அதே கற்பித்தல் முறைகளையும் நாங்கள் CIC ஊடாக இலங்கையில் நடைமுறைப்படுத்த உள்ளோம்.
இதன் மூலம் மாணவர்கள் இங்கிலாந்து செல்லாமலேயே UEAஇன் கௌரவப் பட்டத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். இலங்கையின் கல்வி வளர்ச்சிக்கு எம்மால் முடிந்த பங்களிப்பை வழங்கக் காத்திருக்கிறோம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தில் எங்களுடன் இணைந்துள்ள அனைவருக்கும் எனது நன்றிகள் என்றார்.
சர்வதேச அங்கீகாரத்துடன் தொழில் வாழ்க்கையைத் தொடங்க புதிய நுழைவாயில்
சர்வதேச கல்வித் துறையில் 18 ஆண்டுகளாக நம்பகத்தன்மையை நிலைநிறுத்தியுள்ள Campus Directஇன் புதிய அறிமுகமான Colombo International Campus (CIC), 'மாணவருக்கு முதன்மை' என்ற கொள்கையை முன்னெடுத்துச் சென்று, உள்ளூர் திறன்களையும் திறமைகளையும் சர்வதேச மட்டத்திற்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அவ்வாறான சர்வதேச மட்ட உயர்கல்வியையும் தொழில் வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு வழங்குவதற்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக, UEA பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயற்படுவதற்காக இந்த CIC கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கூட்டாண்மை மூலம் இலங்கை மாணவர்களுக்கு East Anglia பல்கலைக்கழகத்தின் சர்வதேச தரத்தில் உள்ள பாடத்திட்டங்களுக்கு அமைய பட்டப் படிப்புகள் மற்றும் பட்டப்பின் படிப்புகளைப் பயிலும் வாய்ப்பு இப்போது ஏற்பட்டுள்ளது.
இதன் கீழ் வணிக முகாமைத்துவம், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் சைபர் பாதுகாப்பு போன்ற துறைகள் பல உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும், கல்வித் தேவைகளுக்கு ஏற்ப வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று (Transfer) கல்வி கற்பதற்கான வாய்ப்பையும் அவர்களுக்கு ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்பதே இதன் சிறப்பம்சமாகும்.
பிரித்தானியாவின் (UK) நோரிச்சில் (Norwich) அமைந்துள்ள East Anglia பல்கலைக்கழகம் (UEA) சிறந்த கற்பித்தல் முறைகள், புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சிக்காக உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகமாகும்.
2026 தரவரிசைகளின்படி, இது பிரித்தானியாவில் 26வது இடத்திலும் (Complete University Guide 2026), உலகில் 156வது இடத்திலும் (Times Higher Education World University Rankings 2026) உள்ளது.
மேலும், ஆராய்ச்சியின் தரத்தில் பிரித்தானியாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் 25இற்குள் இடம்பெற்றுள்ள இது, நிலைத்தன்மை மற்றும் சமத்துவம் தொடர்பிலும் சர்வதேச மட்டத்தில் உயர் அங்கீகாரத்தைப் பேணி வருகிறது.
பிரித்தானியாவில் மாணவர்களுக்குக் கிடைக்கும் உயர்கல்வித் தரங்களையும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களையும் அதே வழியில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இந்தக் கூட்டாண்மை மூலம் இலங்கை மாணவர்களுக்குக் கிடைக்கிறது.
மேலும், இதன் காரணமாக வெளிநாடு சென்று கல்வி கற்பதற்காகச் செலவிடவேண்டிய அதிக செலவைச் சேமித்துக்கொள்வதற்கும், இலங்கையில் CIC நிறுவனத்தின் மூலம் பட்டப்படிப்பைப் பயில்வதன் மூலம் மிகக் குறைந்த செலவில் சர்வதேச தரத்தில் அங்கீகரிக்கப்பட்ட பட்டத்திற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்கும் இலங்கை மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.
ஸ்மார்ட் வகுப்பறைகள், உயர்ந்த தகவல் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் ஆய்வகங்கள் என்பதோடு உடற்பயிற்சி மையத்தையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ள Colombo International Campus, நவீன கல்வி நோக்கிற்கு அமைய, கல்விக்கே உகந்த சூழலை மாணவர்களுக்கு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
East Anglia பல்கலைக்கழகத்தின் கற்பித்தல் முறைக்கு CICஇன் உட்கட்டமைப்பு வசதிகள் நன்கு பொருந்துகின்றன. அதன் மூலம் எதிர்காலத்திற்கு ஏற்ற பூரணமான கல்வி அனுபவத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது.
இலங்கையின் உயர்கல்வித் துறையில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் இந்தக் கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டாண்மை மூலம், சர்வதேச அங்கீகாரத்துடன், உள்நாட்டிலேயே கல்வி கற்பதன் வசதி காரணமாக வெளிநாடு செல்லாமலேயே இங்கேயே தொழில் வாழ்க்கையைக் கட்டியெழுப்பிக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது.
2027 ஜனவரி மாதத்தில் ஆரம்பமாகத் திட்டமிடப்பட்டுள்ள இதன் முதல் தொகுதிக்கான மாணவர் சேர்க்கை இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM