நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சில பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, களுத்துறை, காலி, கேகாலை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் சில பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

அதன்படி இரத்தினபுரி, எலபாத்தை, எஹலியகொட, குருவிட்ட மற்றும் அயகம கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

இரத்தினபுரியில்  தொடர்ந்து பெய்துவரும்  அடை மழை காரணமாக,   இரத்தினபுரி நகரை அண்மித்த முந்துவ, கெடங்கம, வெரலுப்ப உட்பட மேலும்  சில பகுதிகளிலுள்ள தாழ்நிலங்கள், வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில்,  குருவிட்ட இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர், இரத்தினபுரி நகரை வந்தடைந்துள்ளனர்.