ஹட்டன், கொழும்பு பிரதான வீதியில் உள்ள ஸ்டெதன் தோட்ட தொழிலாளர்கள், கூட்டு உடன்படிக்கைக்கு எதிராக தோட்ட நிர்வாகம் செயற்படுகிறதென தெரிவித்து தோட்டத் தொழிலாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுப்பட்டுள்ளனர்.

இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டம் சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்தது.

தோட்ட நிர்வாகம் நாளொன்றுக்கு 18 கிலோகிராம் தேயிலை கொழுந்து பறிக்குமாறும் அவ்வாறு பறிக்காத பட்சத்தில் மேலதிக கொடுப்பனவுகளை வழங்க தோட்ட நிர்வாகம்  மறுக்கிறதாகவும் தேயிலை மலைகளில் கொழுந்து இல்லாத சந்தர்ப்பங்களில் எம்மால் எவ்வாறு 18 கிலோ கிராம் தேயிலை கொழுந்தை பறிக்க முடியும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கேள்வியெழுப்பி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

மேலும் தோட்ட நிர்வாகம் கூட்டு உடன்படிக்கைக்கு எதிராக செயற்படுகிறது எனவும் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டோர் தெரிவித்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50 இற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.