வவுனியாவில், நெளுக்குளம் பகுதியில் வரட்சி நிவாரணம் வழங்குவதில் தாமதங்கள் ஏற்படுவதாகவும் பொருட்களை சீராக வழங்குவதில்லை என்றும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை 6 மணிமுதல் நெளுக்குளம் பல் நோக்குக்கூட்டறவுச்சங்கத்தில் வரட்சி உலர் உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காத்திருந்துள்ளனர்.

சுமார் 5 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்கள்  கிராம சேவையாளரூடாக வழங்கப்பட்ட பற்றுச்சீட்டிற்கான உலர் உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கு நீண்ட நேரம் காத்திருந்துள்ளனர். 

எனினும் பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் முகாமையாளர் அங்கு வந்ததுடன் நீண்டநேரமாக காத்திருந்த பொதுமக்களிடம் தேவையானளவு உணவுப் பொருட்கள் கையிருப்பில்லை பொருட்கள் வந்து சேரவில்லை எனவே இன்று உலர் உணவுப் பொருட்கள் விநியோகம் மேற்கொள்ளமுடியாது நாளை வருமாறு தெரிவித்துவிட்டு வாசலில் குறித்த வாசகத்தினை காட்சிப்படுத்திவிட்டு பல் நோக்குச் சங்கத்தினை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

தொழிலுக்கு கூட செல்லாமல் நீண்டநேரமாக காத்திருந்த பொது மக்களுக்கு இறுதியில் ஏமாற்றம் மட்டுமே கிடைக்க விரக்தியடைந்த பொதுமக்கள் ,

"தமக்கு வழங்கப்படும் உலர் உணவுப் பொருட்களை தமது பகுதிகளிலுள்ள பலநோக்குக்கூட்டுறவு சங்கத்தினூடாக வழங்குமாறும், பல நீண்ட தூரங்களிலிருந்து பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கு வரவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும், இதனை தாமதப்படுத்தி வழங்கிவருவதாகவும், சீரான முறையில் வழங்கப்படவில்லை என்றும், பொருட்களின் விலைகளில் குறிப்பாக சதோச நிறுவனத்தில் ஒரு விலையும் பலநோக்குக்கூட்டறவுச்சங்கத்தில் ஒரு விலையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும்"  விசனம் தெரிவித்தனர்.