ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலையடுத்து மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமையானது சர்வதேச அளவில் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. எரிபொருள், எரிவாயுவின் விலைகள் பலமடங்கு அதிகரித்துள்ளதுடன் தட்டுப்பாடான நிலைமையும் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலைகள் பலமடங்கு அதிகரித்துள்ளமையினால் சர்வதேச அளவில் பொருட்கள், சேவைகளின் விலையும் அதிகரிக்கும் சூழல் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை செய்திருக்கின்றது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போரினால் ஹோர்மூஸ் நீரிணை மூடப்படுவதால் உணவுப் பொருட்களின் செலவுகள் அதிகரிக்கக் கூடும் என்றும் அது வாழ்க்கைச் செலவுக்கான அழுத்தங்களை அதிகரிக்கும் எனவும் ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.
எரிசக்தி, உரம், போக்குவரத்து செலவுகள் ஆகியவற்றுக்கான செலவீனங்கள் அதிகரிப்பதனால் உணவுப் பொருட்களின் விலைகள் உயரும். இது மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுகளில் மிகப் பெரிய அழுத்தத்தை கொடுக்கும். உலகளாவிய ரீதியிலான மசகு எண்ணெயில் 38 சதவீதமும் எல்.பி.ஜீ. எரிவாயுவில் 29 சதவீதமும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் 19 சதவீதமும் ஹோர்மூஸ் நீரிணையினூடாகவே கொண்டு செல்லப்படுகின்றது. இந்த நீரிணையூடாக அனுப்பப்படும் தயாரிப்புகளில் 84 சதவீதமானவை ஆசிய நாடுகளையே சென்றடைகின்றன. எனவே, இதன் தாக்கம் ஆசிய நாடுகளில் அதிகம் உணரப்படும் என்றும் ஐ.நா. சபையின் உலக உணவுத் திட்ட அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் இந்த அறிவிப்பானது உலகளாவிய ரீதியில் உணவுப் பொருட்களின் விலைகள் எவ்வாறு அதிகரிக்கும் என்ற விடயத்தை சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் ஆரம்பித்து இவ்வாரத்துடன் மூன்று வாரங்கள் நிறைவடையவுள்ளது. மோதல் நிலைமை இன்னமும் தொடர்ந்து வருகின்றது.
இதனால் சர்வதேச அளவில் எரிபொருள் மற்றும் எரிவாயுக்களின் விலைகள் தொடர்ந்தும் அதிகரிக்கும் நிலைமையும் தட்டுப்பாட்டை சந்திக்கும் நிலைவரமும் அதிகரித்து வருகின்றது.
இதன் தாக்கம் எமது நாட்டைப் பொறுத்தவரையில் பொருட்கள், சேவைகளின் விலைகளை பல்மடங்கு அதிகரிக்கும் என்றே எதிர்வு கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயுக்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. மத்திய கிழக்கில் மோதல் நிலை ஆரம்பிக்கப்பட்ட போது நாட்டில் எரிபொருள் தேவையானளவு கையிருப்பில் இருப்பதாக அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதேபோன்றே எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்படப் போவதில்லை என்றும் போதியளவு எரிவாயு கையிருப்பில் இருப்பதாகவும் எதிர்காலத்தில் எரிவாயுக் கப்பல்கள் வரிசைக் கிரமத்தில் வருகை தருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அரசாங்கத் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
ஆனால், தற்போது எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு அரசாங்கத் தரப்பில் கூறப்பட்டு வருகின்றது. மத்திய கிழக்கில் மோதல் நிலை ஆரம்பமாவதற்கு முன்னரே எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. லாப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் விநியோகத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டதாக அரசாங்கத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
எரிவாயு ஏற்றிய கப்பல்கள் வரிசைக் கிரமத்தில் வருகை தரும் என்று அரசாங்கம் கூறியிருந்த போதிலும் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு இன்னமும் நீடித்து வருகின்றது.
எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலைகள் அதிகரித்துள்ளமையினால் சமைத்த உணவுப் பொருட்களின் விலைகள் தற்போது அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை முன்வைத்திருக்கின்றனர்.
பாடசாலை வாகன கட்டணங்கள் 5 வீதத்தால் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. முச்சக்கர வண்டி கட்டணங்களை அதிகரிக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறு போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிக்கும் போது, பொருட்களின் சேவைகளின் விலைகள் இன்னமும் உயரும்.
அதேபோன்றுதான் எரிவாயுவின் விலைகள் அதிகரிப்பதுடன் தட்டுப்பாடு ஏற்பகின்ற சூழலில் மேலும் மேலும் உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படும்.
2022ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருளுக்கும் எரிவாயு உட்பட அத்தியாவசியப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது.
எரிபொருள் மற்றும் எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்கு மக்கள் வீதிகளில் பல நாட்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை உருவாகியிருந்தது. இந்த வரிசையில் காத்திருந்த பலர் உயிரிழந்த சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன.
அன்று உள்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியே இத்தகைய அவல நிலையை ஏற்படுத்தியிருந்தது. நாட்டில் அந்நியச் செலாவணிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்தே எரிபொருளையும் எரிவாயுவையும் இறக்குமதி செய்ய முடியாத நிலைமை உருவாகியிருந்தது.
ஆனால், இன்று நிலைமை மாறுபட்டதாக காணப்படுகின்றது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை சர்வதேச அளவிலேயே எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலையை பல்மடங்கு அதிகரிக்கச் செய்திருக்கின்றது.
ஹோர்மூஸ் நீரிணை உடனான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில் எரிபொருள், எரிவாயுவை விநியோகிக்கும் செயற்பாடானது பெருமளவில் தடைப்பட்டிருக்கின்றது. அத்துடன் மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் மோதல் நிலைமை காரணமாக எரிபொருள் குதங்களும் தாக்கி அழிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலைமையானது சர்வதேச அளவில் பொருளாதார ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அந்தத் தாக்கத்தின் விபரீத விளைவுகள் எமது நாட்டையும் பெருமளவில் பாதித்திருக்கின்றது.
ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி பெரும் பாதிப்புகளை சந்தித்து படிப்படியாக மீட்சி பெற்று வந்த எமது நாடு இன்று மீண்டும் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமையினால் அதல பாதாளத்தை நோக்கி செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது.
நாட்டில் ஒன்றரை மாதத்துக்கு தேவையான எரிபொருட்கள் கையில் இருப்பதாக மத்திய கிழக்கு யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போது அரசாங்கம் கூறியிருக்கின்றது. எரிவாயு விடயத்திலும் போதியளவு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது எரிபொருள் பாவனையை சிக்கனப்படுத்துமாறு அரசாங்கத் தரப்பில் கூறப்படுகின்றது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உட்பட அரசாங்க அமைச்சர்கள் இந்த விடயத்தை தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்று கடந்த பல மாதங்களாகவே எதிர்வு கூறப்பட்டு வந்தது. அமெரிக்காவானது தனது போர்க் கப்பல்களை வளைகுடாவுக்கு பல மாதங்களுக்கு முன்னரே அனுப்ப ஆரம்பித்திருந்தது.
மத்திய கிழக்கில் மோதல் நிலை உருவாகலாம் என்ற அச்சுறுத்தல் காணப்பட்டே வந்தது. இவ்வாறான அச்சுறுத்தல் நிலை காணப்பட்ட வேளையில் அரசாங்கமானது எரிபொருள் மற்றும் எரிவாயுவை அதிகளவில் இறக்குமதி செய்து, களஞ்சியப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால், அந்த விடயத்தில் அரசாங்கம் ஆக்கபூர்வமாக செயற்பட்டிருக்கவில்லை என்றே கூற வேண்டியுள்ளது. தற்போது எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கு தட்டுப்பாடான நிலைமை ஏற்பட்டுள்ள சூழலில் அரசாங்கமானது இந்த விடயத்தில் பல்வேறு சாக்குபோக்குகளைக் கூறி தப்பித்துக் கொள்ள முயல்கின்றது.
எரிபொருட்களை மேலதிகமாக கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்துவதற்கான களஞ்சியசாலைகள் நாட்டில் இல்லை என்று அரசாங்கத் தரப்பில் கூறப்படுகின்றது.
உண்மையிலேயே நாட்டில் பொருட்கள், சேவைகள் தட்டுப்பாடின்றி மக்களுக்கு விநியோகிக்க வேண்டியது ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
சர்வதேச ரீதியில் எத்தகைய தாக்கங்கள் ஏற்பட்டாலும் நாட்டு மக்களுக்கு உரிய வகையில் அத்தியாவசிப் பொருட்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கையினை அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும். இதற்கான நீண்டகால செயற்றிட்டங்கள், திட்டமிடல்கள் என்பவற்றில் அரசாங்கம் அக்கறை காட்டியிருக்க வேண்டும்.
நாட்டில் எரிசக்தியின் நெருக்கடியினை தடுக்கும் வகையில் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் சிந்தித்து செயலாற்றியிருக்க வேண்டும். தற்போது உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியினை எதிர்கொள்வதற்கும் நாட்டில் பொருட்கள், சேவைகளை தட்டுப்பாடின்றி வழங்குவதற்குமான செயற்றிட்டத்தினை அரசாங்கம் உருவாக்க வேண்டும். இந்த விடயம் தொடர்பில் உடனடியாக சிந்தித்து, சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து நடவடிக்கை எடுக்க வேண்டியது என்பது அவசியம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM