இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மற்றும் இந்து கல்லூரி கொழும்பு ஆகிய இரண்டு பிரபல கல்லூரிகளுக்கிடையே 'இந்துக்களின் சமர்" என்கிற மாபெரும் கிரிக்கெட் போட்டிகள் கொழும்பில் வெள்ளிக்கிழமை (13) ஆரம்பமாயின. இச்சந்தர்ப்பத்தில் அன்றைய தினம் மாலை வேளையில், கொழும்பு - 4இல் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் இவ்விரு அணிகளும் சொற்களாலும் கருத்துக்களாலும் எதிரெதிரே மோதிக்கொண்ட மற்றுமொரு போட்டி நிகழ்வான, 'சொல்லாடல்" விவாதச் சமரில் இந்து கல்லூரி கொழும்பு அணியினர் வெற்றிக் கேடயத்தைத் தனதாக்கிக்கொண்டனர்.
இந்த வருடம் தனது 75ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இந்து கல்லூரி கொழும்பு, சொல்லாடல் களத்தில் யாழ். இந்து கல்லூரியை வென்றமையானது பலர் மத்தியில் கவனம் பெற்றிருக்கிறது.
சொல்லாடலின்போது யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மற்றும் இந்து கல்லூரி கொழும்பு ஆகிய இரு கல்லூரிகளும் அரசியல் தலைப்புடன் மேடையேறின.
இந்த 'சொல்லாடல் சவால் கிண்ணம் - 2026" விவாதச்சமர், இலங்கையின் ஆளுங்கட்சியின் மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள அபிப்பிராயம், மக்களின் மதிப்பீடு, அண்மைக்கால அரசியல் நிலைவரத்தைப் பற்றிய அவர்களது பல்வேறு விதமான பார்வையை வெளிக்கொண்டு வருவதாக அமைந்திருந்தது.
'வடகிழக்கில் தேசிய மக்கள் சக்தியின் எழுச்சிக்கான காரணம் தமிழ் மக்களின் அபிலாஷை மாற்றங்களே / இல்லை" என்ற தலைப்பில் யாழ் மற்றும் கொழும்பு கல்லூரி அணிகளில் அங்கம் வகித்த மாணவர்களால் வாதப் பிரதிவாதக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
அந்த வகையில் 'வடகிழக்கில் தேசிய மக்கள் சக்தியின் எழுச்சிக்கான காரணம், தமிழ் மக்களின் அபிலாஷை மாற்றங்களே" என இந்து கல்லூரி கொழும்பு அணியினரும், அதனை 'இல்லை...." என மறுத்து, யாழ். இந்து கல்லூரி அணியினரும் வாதிட்டனர்.
இந்து கல்லூரி கொழும்பு அதிபர் இளையதம்பி இலங்கேஸ்வரன், யாழ். இந்து கல்லூரி அதிபர் ரத்தினம் செந்தில்மாறன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் டில்லி கலை இலக்கியப் பேரவையின் பொதுச் செயலாளர் குமார் பாலசுந்தரம் (போபால் கம்பன் கழகம்), கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் சந்திரசேகரர், இந்துவின் ஆதர்சம் விருது பெறுநர் அமரர். கந்தையா நீலகண்டனின் பாரியார், தட்சிணாமூர்த்தி மதுசூதனன், அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் அருட்கலாநிதி சந்துரு பெர்னாண்டோ, சட்டத்தரணி காண்டீபன், முதலானோர் கலந்துகொண்டனர்.
கடந்த தேர்தல் முடிவுகள் வடகிழக்கில் எக்காலத்திலும் இல்லாதளவுக்கு ஒரு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தின. தேசிய மக்கள் சக்தி, தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் அதிகப்படியான வாக்குகளை பெற்று ஆளுங்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. தேசிய மக்கள் சக்தியின் இந்த வெற்றிக்குக் காரணம், தமிழர்களின் அபிலாஷை மாற்றங்களா அல்லது வேறு காரணங்களா என்பதை ஆராயும் நோக்கில் இந்த தலைப்பு வழங்கப்பட்டிருந்தது.
ஆயுதப்போர்களுக்கு மத்தியில் இரு இந்து கல்லூரிகளும் நடத்திய சொற்போர் சபையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இரு அணிகளையும் சேர்ந்த மாணவர்கள் கொட்டித்தீர்த்த அரசியல், சமூகக் கருத்துக்கள் தமிழ்ச் சமூகத்தினரை சிந்திக்க வைத்திருக்கிறது. அவர்களது வாதப் பிரதிவாதக் கருத்துக்கள் குறித்து பார்வையாளர்களிடத்தில் சில மாற்றுக் கருத்துக்கள் இருக்கவே செய்தன. அதேவேளை பாடசாலை மாணவர்களின் பேச்சுவன்மை சபையைக் கட்டிப்போட்டது என்றே கூறவேண்டும்.
அதனைத் தொடர்ந்து, நிகழ்வின் நிறைவு வேளையில் அறிவிக்கப்பட்ட தீர்ப்பின்படி, 'சொல்லாடல் சவால் கிண்ணத்தை" இந்து கல்லூரி கொழும்பு வென்றது. சிறப்பாக வாதாடிய யாழ். இந்து கல்லூரி பாராட்டு பெற்றது.
அதன் பின்னர், சொல்லாடலில் பங்குபற்றி திறமையை வெளிப்படுத்திய இரு அணிகளைச் சேர்ந்த இந்து கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டதையடுத்து, சொல்லாடல் வெற்றிக்கேடயத்தை இந்து கல்லூரி கொழும்பு பெற்றுக்கொண்டது.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM