இலங்கைக்கு எதிரான அனைத்து வகையான போட்டிகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்திய இந்திய அணி தொடர் வெற்றிகளைப்பெற்று பல சாதனைகளுடனும் 3 கிண்ணங்களுடனும் நாடு திரும்புகிறது.

இலங்கைக்கு எதிராக நேற்று நடைபெற்ற இருபதுக்கு 20 போட்டியிலும் வெற்றிபெற்ற இந்திய அணி மூன்று வெற்றிக்கிண்ணங்களுடன் நாடு திரும்புகிறது. இலங்கை அணி தோல்விகளைச் சுமந்துகொண்டு அடுத்த பாகிஸ்தான் தொடருக்கு தயாராகவுள்ளது. 

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கடந்த ஒரு மாதங்களாக விளையாடியது.

இரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரை 3–0 என்ற கணக்கிலும், ஒருநாள் போட்டித் தொடரை 5–0 என்ற கணக்கிலும் இந்திய அணி முழுமையாக இலங்கையை வெள்ளையடிப்புச் செய்தது. 

இந்த நிலையில் இந்தியா-–இலங்கை அணிகளுக்கிடையிலான ஒரே ஒரு இருபதுக்கு 20  கிரிக்கெட் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் அரங்கில் நேற்று இரவு நடைபெற்றது.

நேற்றைய தினம் காலையிலிருந்து மழை பெய்துகொண்டிருந்ததால் போட்டி நடக்காதோ என்றுதான் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் மாலை 4 மணிக்கு மேல் மழை நின்றுவிட்டதனால் போட்டியை நடத்த முடிவு செய்தனர். இந்நிலையில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாக வேண்டிய போட்டி 40 நிமிடங்கள் தாமதித்து இரவு 7.40 மணிக்கு ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி முதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாடும்படி பணித்தார். அதன்படி இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக உபுல் தரங்க மற்றும் டிக்வெல்ல ஜோடி களமிறங்கியது.

இந்த ஜோடி ஆரம்பத்திலேயே அதிரடியைத் தொடர அடுத்தடுத்து வந்த வீரர்களுக்கும் இந்த அதிரடி ஆட்டம் தொற்றிக் கொண்டது. சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் வீழ்ந்தாலும் அதிரடி ஆட்டத்திற்கு பஞ்சமிருக்கவில்லை. சிக்ஸர்கள், பவுண்டரிகள் பறக்க ரசிகர்கள் உற்சாகமாக ஆர்ப்பரித்தனர். இவ்வளவு நாளும் தோல்வியால் துவண்டு போயிருந்த ரசிகர்களுக்கு நேற்றைய போட்டியில் இலங்கை அணியின் ஆட்டம் சரியான தீனிதான்.

போட்டியில் முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரில் இலங்கை அணி 4 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்த ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் டிக்வெல்ல தொடர்ச்சியாக 3 பவுண்டரிகளை விளாசினார்.

மீண்டும் 3 ஆவது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த தரங்க, அடுத்த பந்தில் க்ளீன் போல்டானார்.

3 ஆவது வீரராக டில்ஷான் முனவீர களமிறங்கினார். இவர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விரட்டினார். முதல் 3 ஓவர்களில் இலங்கை அணி ஒரு விக்கெட்டை இழந்து 32 ஓட்டங்களைக் குவித்தது.

இதனால் 4 ஆவது ஓவரை வீச விராட் கோலி சுழற்பந்து வீச்சாளரான சாஹலை அழைத்தார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளிலும் இரண்டு சிக்ஸர்களை அடித்தார் டில்ஷான் முனவீர.

இந்நிலையில் டிக்வெல்ல 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனால் ஓட்ட வேகம் சற்று குறைந்தது. அதன்பிறகு மெத்தியூஸ் களமிறங்கினார். மெத்தியூஸும் தன் பங்கிற்கு அடித்து விளையாடினார். பவர்பிளே ஆன முதல் 6 ஓவர்களில்  60 ஓட்டங்களை சேர்த்தது இலங்கை.

ஆனாலும் மெத்தியூஸின் அதிரடி நீடிக்கவில்லை. இவர் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, மறுமுனையில் நின்ற டில்ஷான் முனவீர 29 பந்துகளில்  5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 53 ஓட்டங்களை சேர்த்து ஆட்டமிழந்தார். முனவீர ஆட்டமிழக்கும் போது இலங்கை 11.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 99 ஓட்டங்களை எடுத்திருந்தது.

அதன்பின் இலங்கையின் ஓட்ட விகிதம் சரிய ஆரம்பித்தது. அதன்பிறகு வந்த திஸர பெரேரா (11), சானக்க (0), சீகுகே பிரசன்ன(11)ஆட்டமிழந்தனர்.  

பிரியஞ்சன் தாக்குப்பிடித்து விளையாட இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை எடுத்தது. பிரியஞ்சன் 41 ஓட்டங்களுடனும், உதான 19 ஓட்டங்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

இதனையடுத்து இந்தியா 171 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் ஆகியோர் களமிறங்கினர்.

ரோஹித் சர்மா 9 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளையில் மலிங்கவின் பந்துவீச்சில் திஸர பெரேராவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ராகுல் 27 ஓட்டங்களுடன் சீகுகேவின் பந்தில் வீழ்ந்தார்.

இந்த நிலையில் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் மணிஷ் பாண்டே ஜோடி இந்திய அணியை கரை சேர்த்தது. இந்த இருவரும் சிறப்பானதொரு இணைப்பாட்டத்தை பெற்று  அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்திய அணி வெற்றிபெற 10 ஓட்டங்கள்தான் தேவை என்ற நிலையில் விராட் கோலி 82 ஓட்டங்களுடன் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு இந்திய அணியின் ஆஸ்தான பினிஷர் டோனி களமிறங்கி மனிஷ் பாண்டேக்கு துணை நின்று போட்டியை முடித்து வைத்தார். இறுதியில் இந்திய அணி 19.1 ஓவர்களில் 173 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது. மனிஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

இந்தப் போட்டியுடன் இந்திய - இலங்கை அணிகளுக்கிடையிலான அனைத்து போட்டிகளும் முடிவுக்கு வந்தன. அடுத்து இலங்கை அணி பாகிஸ்தானுடன் மோதவுள்ளது. இந்தத் தொடர் முடிவடைந்தவுடன் இலங்கை இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மீண்டும் ஒரு இதேபோன்ற தொடரில் இவ்வருட இறுதியில் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.