மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்றுவரும் கரீபியன் பிரிமியர் லீக் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி சகலதுறை வீரர் கிரன் பொலாட் வீசிய நோபோல் (No ball) பலரது அவதானத்தை திருப்பியுள்ளது.

பார்படோஸ் அணியின் தலைவராக விளையாடிய பொலாட், எதிரணி வீரரான ஏவின் லூயிஸ் சதம் பெறுவதை தடுப்பதற்காக வேண்டுமென்றே நோபோல் பந்தை வீசியதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றது.

பார்படோஸ் அணியிற்கும்  செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பற்றியொட்ஸ் அணிக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் வெற்றிக்காக ஒரு ஓட்டம் பெறவிருந்த நிலையில், பார்படோஸ் அணியின் தலைவராக விளையாடிய பொலாட் நோபோல் (No ball) வீசியுள்ளார்.

இந்நிலையில், அதிரடியாக துடுப்பாடி கொண்டிருந்த ஏவின் லூயிஸ்  32 பந்துகளில் 97 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், பொலாட் வீசிய இந்த பந்தில்  4 அல்லது 6 ஓட்டங்களை பெற்றிருந்தால் உலகில் இருபதுக்கு 20 போட்டியில் இரண்டாவது வேகமான சதமாக இது அமைந்திருக்கும்.

எனினும் இதன்போது பொலாட் நோபோல் (No ball) வீசிய காரணத்தால் அவரின் சாதனை பறிபோனது.

இதேவேளை, இருபதுக்கு 20 போட்டியில் வேகமான சதத்தை பெற்ற கிரிஸ் கெய்லும் குறித்த போட்டியில் விளையாடியமை குறிப்பிடத்தக்கது .